Friday, May 10, 2024
Home » கொத்தலாவல பல்கலையில் கட்டணம் செலுத்தி மருத்துவம் கற்க வசதி

கொத்தலாவல பல்கலையில் கட்டணம் செலுத்தி மருத்துவம் கற்க வசதி

- 2,500 ஆங்கில ஆசிரியர்களை இணைக்க நடவடிக்கை

by Prashahini
April 9, 2024 2:49 pm 0 comment

– தேர்தல் கட்டுப்பண தொகைகள் அதிகரிப்பு
– புதிய மின்சக்தி சட்டமூலம் உள்ளிட்ட அமைச்சரவையில் 17 தீர்மானங்கள்

ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ விஞ்ஞானப் பட்டப் படிப்புக்காக கட்டண முறையில் மாணவர்களை உள்ளீர்த்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (08) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 17 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 1988 ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல அரச பாதுகாப்பு பயிற்சி நிறுவன (திருத்தச்) சட்டத்தின் மூலம் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டுள்ளது. இராணுவ சேவையின் தேவைகளுக்கமைய, மருத்துவ தொழில்வாண்மையாளர்களாக மாணவர் படையணி அலுவலர்கள் பயிற்றுவிக்கப்பட்டு மருத்துவம் மற்றும் அறுவையியல் MBBS பட்டப்படிப்பை வழங்கப்படுவதற்காக 2011 ஆம் ஆண்டில் இப்பல்கலைக்கழகம் மருத்துவ பீடமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய தற்போது உள்நாட்டு மாணவர்கள் முப்படைக்கு அல்லது பொலிசுக்கு கெடட் அலுவலராக இணைந்து கொள்வதன் மூலமும்,தகைமைபெற்ற வெளிநாட்டு மாணவர்களும் கட்டண முறையில்மாத்திரம் இப்பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டப்படிப்புக்கான வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாய்ப்புகளை மேலும் விரிவாக்கம் செய்து 2024 கற்கை ஆண்டு தொடக்கம் தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள உள்நாட்டு விண்ணப்பதரிகளுக்கும் கட்டண அடிப்படையில் மருத்துவ பட்டப்படிப்பில் இணைத்துக் கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய இலங்கையில் ஏனைய தேசிய பல்கலைக்கழகங்களில் மாணவர்களை இணைப்புச் செய்வதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் கடைப்பிடிக்கப்படுகின்ற Z வெட்டுப்புள்ளித் திட்டத்திற்கு மேலதிகமாக, தகைமைகள் சிலவற்றை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள அளவுகோல்களைப் பின்பற்றி, கட்டண முறையில் மருத்துவம் மற்றும் அறுவையியல் பட்டப்படிப்பை கற்பதற்கு ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு பட்டப்படிப்புக்காக மாணவர்களை உள்ளீர்த்துக் கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. இலங்கை கடலோரப் பாதுகாப்பு படையணிக்கு சொந்தமான கிரிந்த உயர் பயிற்சி நிறுவனத்தில் கடல்வழி உருவகப்படுத்தல் (Maritime Simulator) கருத்திட்டத்தை ஆரம்பித்தல்

2009 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க கடலோரப் பாதுகாப்பு சட்டத்தின் மூலம் இலங்கை கடலோரப் பாதுகாப்பு திணைக்களம் தாபிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையின் கரையோர நீர்ப்பரப்பு மற்றும் ஆழ்கடல் பாதுகாப்பை உறுதி செய்தல், எமது நாட்டுக்கு சட்டவிரோத குடிவரவுகள் மற்றும் எமது நாட்டிலிருந்து சட்டவிரோத குடியகல்வுகளைத் தடுத்தல், கடல்வழிப் பயண முடிவுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒத்துழைத்தல், சமுத்திரச் சுற்றாடலைப் பாதுகாத்தல்மற்றும் சமுத்திர மாசடைவுகளைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தல் ஆகிய பணிப்பொறுப்புகளை நிறைவேற்றுதல் போன்றன இத்திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகளாகும். குறித்த கடமைகளின் தொழில்வாண்மை மற்றும் அன்றாட தரப்பண்புகளைப் பாதுகாக்கும் வகையில் செயற்படுவதற்காக பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய கடலோரப் பாதுகாப்பு படையுடன் இணைந்து இத்திணைக்களம் செயலாற்றி வருகின்றது.

அதற்கமைய, இலங்கை கடலோரப் பாதுகாப்பு உத்தியோகத்தர்களைப் பயிற்றுவிப்பதற்காக ஐக்கிய அமெரிக்காவின் அரச ஏற்றுமதிக் கட்டுப்பாடு மற்றும் தேச எல்லைகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் கடல்வழி உருவகப்படுத்தல் கருத்திட்டத்திற்கான 355,575 அமெரிக்க டொலர்களை (அனைத்து வரி நீங்கலாக) முழுமையான நன்கொடையாக வழங்குவதற்கு ஐக்கிய அமெரிக்கா உடன்பாடு தெரிவித்துள்ளது. குறித்த கருத்திட்டத்தை கிரிந்த உயர் பயிற்சி நிலையத்தில் தாபித்து நடைமுறைப்படுத்துவதற்காக, பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

03. குடிநீர் தொடர்பான தேசிய கொள்கை மற்றும் நீர்ப் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கை

குடிநீர் வழங்கல் சேவைப் பிரிவில் உருவாகியுள்ள போக்குகள் மற்றும் சவால்களுக்கு முகங் கொடுப்பதற்காக மிகவும்விரிவானதும் காலத்தோடு தழுவியதுமான அணுகுமுறையின் தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த துறைசார் நிபுணர்களதும் பங்காளர்களதும் ஆலோசனைகளையும்,மக்கள் கருத்துக்களையும் பெற்றுக் கொண்டு சமகால மற்றும் எதிர்கால தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் ‘குடிநீர் தொடர்பான தேசியக் கொள்கை மற்றும் நீர்ப் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கை’தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அனைத்துப் பிரஜைகளுக்கும் பாதுகாப்பானதும் தரப்பண்பானதுமானகுடிநீருக்கான அணுகலை உறுதிப்படுத்தல், பேண்தகு வகையிலான நீர்ப் பாவனையை ஊக்குவித்தல் மற்றும் நீர்த் துறையில் பொருளாதார வளர்ச்சி மற்றும் சுபீட்சத்தை மேம்படுத்தல் ஆகிய நோக்கங்களை அடைவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கமைய‘குடிநீர் தொடர்பான தேசியக் கொள்கை மற்றும் நீர்ப் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கையை’ஏற்புடைய ஏனைய கொள்கைகளுடன் பொருத்தமான வகையில் ஒருங்கிணைத்து நடைமுறைப்படுத்துவதற்காக நிதி,பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. அரச காணிக் கட்டளை சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு காணி ஒப்படைத்தல்

இலங்கை துறைமுக அதிகார சபையினால் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக, இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 50 ஏக்கர் அளவிலான காணியை கையகப்படுத்துவதற்கு அல்லது கொள்வனவு செய்வதற்கு 2014.12.12 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை துறைமுக அதிகார சபைக்கு குறித்த காணியை ஒப்படைப்பதற்காக அரசின் பிரதான விலைமதிப்பீட்டாளரின் மதிப்பீட்டுக்கமைய முற்பணக் கொடுப்பனவாக 52 மில்லியன் ரூபாய்கள் இலங்கை துறைமுக அதிகார சபையால் தற்போது இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கமையஅடையாளம் காணப்பட்டுள்ள 23 ஏக்கர் 12 பேச்சஸ் பரப்பளவு கொண்ட காணித்துண்டுகளை முறையான சட்ட நடவடிக்கைகளைக் கையாண்டு அரச காணிக்கட்டளைச் சட்டத்தின் 6(1) பிரிவின் கீழ் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு அறுதி உரித்துடன் கூடிய அளிப்பாக ஒப்படைப்பதற்கு துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. ஸ்ரீலங்கா இன்ஸ்டிட்யூட் ஒஃப் பயோடெக்னொலொஜி பிரைவெட் லிமிட்டெட் மற்றும் அவுஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஆய்வுகள் மற்றும் புத்தாக்கம் பற்றிய செயற்பாடுகளுக்கான ஒத்துழைப்புகளை உருவாக்கிக் கொள்வதற்காகஸ்ரீலங்கா இன்ஸ்டிட்யூட் ஒஃப் பயோடெக்னொலொஜி பிரைவெட் லிமிட்டெட் மற்றும் அவுஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்காக முன்மொழியப்பட்டுள்ளது.

ஆய்வுகள் மற்றும் சேவைகளுடன் கூடிய ஒருங்கிணைந்த முன்மொழிவுகளை தயாரித்தல், புத்தாக்கம், தொழில்நுட்ப அபிவிருத்தி மற்றும் அறிவுப் பகிர்வு, ஆய்வுப் பொருட்கள் பரிமாற்றம்,கல்வியலாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்கள் பரிமாற்றம், ஒத்துழைப்பு மாநாடுகள், செயலமர்வுகள் மற்றும் ஆய்வுகளுடன் தொடர்புடைய செயல்பாடுகளை மேற்கொள்ளல் போன்ற பல பணிகளை உள்ளடக்கிய உத்தேச புரிந்துணர்வு வரைபுக்கு விவகார அமைச்சின் உடன்பாடும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒப்புதலும் கிடைக்கப்பட்டுள்ளது அதற்கமைய கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. விவசாய நவீனமயமாக்கல் வேலை திட்டத்தை முன்னெடுத்து செல்வதற்காக இளைய விவசாய தொழில்முயற்சி கிராமங்களை உருவாக்கும் கருத்திட்டம்

விவசாயத் தொழிற்துறையில் இளைஞர் சமூகத்தை கவர்ந்திழுத்தல் மற்றும் அவர்களின் பொருளாதார நிலைமையை மேம்படுத்தும் நோக்கில் இளைய விவசாய தொழில்முயற்சியாளர் சமூகமொன்றை உருவாக்குவதற்காகவும்,விவசாயப்பிரதேசங்களில்விவசாயநவீனமயமாக்கலை அறிமுகப்படுத்துவதற்காகவும், இளைய விவசாய தொழில்முயற்சிக்கிராமங்களை உருவாக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் முதலாவது கட்டமாக, 2024 ஆம் ஆண்டில், தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் ஒரு கிராமத்தை தெரிவு செய்து இளையவிவசாய தொழில்முயற்சிக் கிராமத்தை உருவாக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், புதிய தொழில்நுட்பம் மற்றும் மிடுக்கான தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதற்காக இளைய விவசாய சமூகத்தினருக்கு வசதிகளை வழங்குவதற்கும் விவசாய மற்றும் பெருந்தொட்ட அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. இலங்கைக்கும் சாட் குடியரசுக்கும் (Republic of Chad) இடையிலான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளல்

இலங்கை தற்போதுஆபிக்கா கண்டத்தின் 46 நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியுள்ளதுடன்,சாட் குடியரசுடன் இலங்கை இராஜதந்திரத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது. பல்தரப்பு பங்காளர்களாக சாட் குடியரசானது ஐக்கிய நாடுகள் சபையிலும் ஏனைய பல்தரப்பு மாநாடுகளிலும் இலங்கைக்கான ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளது. அதற்கமைய சாட் குடியரசுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. 1979 ஆம் ஆண்டு ஆண்டின் 40 ஆண்டுகளுக்கு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் பாராளுமன்ற அங்கீகாரத்துக்கு ஒழுங்கு விதிகளை சமர்ப்பித்தல்

இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இலங்கையில் தீர்வை வரியை தளர்த்தும் வேலைத்திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்காக 2023.05.29 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 2018.05.01 ஆம் திகதியாகும் போது செஸ்வரி நடைமுறைப்படுத்தப்பட்ட விதத்தைக் கருத்தில் கொண்டு, குறித்த வேலைத்திட்டத்தில் ‘0 வகுதி’இ ‘10 வகுதி’ மற்றும் ‘ஓ வகுதி’ ஆக மூன்று வகைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய ‘10 வகுதி’ இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள 1,087 இயைபு முறைக் குறியீடுகளுக்குரிய (HS Code) செஸ் வரியின் 1/5 பகுதியை முதலாவது ஆண்டின் தவணையாக நீக்குவதற்கும்,‘0 வகுதி’ இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள 300 இயைபு முறைக்குறியீடுகளுக்குரிய செஸ் வரியை ஒரே தடவையில் நீக்குவதை வலுவாக்கம் செய்வதற்காகவும், 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழான ஒழுங்கு விதிகள் 2024.01.04 அன்று விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த ஒழுங்கு விதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்துக்காக சமர்ப்பிப்பதற்கு முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. மூலோபாய முக்கியத்துவம் கொண்ட இரண்டாம்நிலைக் கம்பனிகளாகப் பெயரிடல்

கீழ்வரும் கம்பனிகளை மூலோபாய முக்கியத்துவம் கொண்ட இரண்டாம்நிலை வர்த்தகங்களாக பெயர் குறிப்பிட்டு, குறித்த கம்பனிகளுக்கு கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் ஐஐ ஆம் அட்டவணையின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்களிலிருந்து விடுவிப்பதற்கோ அல்லது ஊக்குவிப்பு அளிப்பை வழங்குவதற்கோ அதற்கான ஒழுங்குவிதிகளை வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடுவதற்கும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• PORT CITY BPO (PRIVATE) LIMITED – வெளிநாட்டு பொழுதுபோக்குகள் தொழிற்துறைக்கான வர்த்தக செயல்முறையின் வெளிப்புற ஆற்றல் வளங்களுக்கு வழங்குகின்ற சேவை வழங்கும் வர்த்தகமாக நடைமுறைப்படுத்துவதற்காக

• IVIVA PTE LTD – காபன் குறைப்பு பொருளாதாரத்துக்கு மாற்றமடைவதற்காக உலகளாவிய சேவை பெறுநர்களின் பல்வேறுபட்ட பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகமிடுக்கான நகர தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் வலுவாக்கம் செய்யப்படுகின்ற உற்பத்திகள் மற்றும் தீர்வுகளை உருவாக்குகின்ற தகவல் தொழில்நுட்ப சேவை வழங்கும் வர்த்தகமாக நடாத்திச் செல்வதற்காக

• ECHELON TRADE (PVT) LYD – பல்வித உலக சந்தைகள் ஊடாக துணி, ஆடைக் கைத்தொழில்,சொகுசுக் கைக்கடிகாரம்,தங்கம் மற்றும் மாணிக்கக்கல்,மின் உபகரணங்கள் மற்றும் ஒப்பனை அலங்காரப் பொருட்கள் வியாபாரத்திற்கான வர்த்தகத்தை நடாத்திச் செல்வதற்காக

• 99X TECHNOLOGY AS -உற்பத்தி பொறியியல் மற்றும் புத்தாக்கத்துடன் இணையத்தளங்களை மேம்படுத்தல்,கைத்தொலைபேசி உள்ளீடுகளை மேம்படுத்துவதன் மூலம் உண்மையான பயனர்களின் டிஜிட்டல் தீர்வுகளை உருவாக்குவதற்கான உலகளாவிய சுயாதீன மென்பொருள் வர்த்தகர்களுக்கு சேவை வழங்குகின்ற வர்த்தகமாக நடாத்திச் செல்லல்

10. ‘அனைவருக்கும் ஆங்கிலம்’ வேலைத்திட்டத்தின் கீழ் ஆங்கில மொழியில் கற்பித்தல்களை மேற்கொள்கின்ற 2500 ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்தல்

ஆங்கில மொழியின் க.பொ.த (சா/த) பாடங்களை கற்பிப்பதற்காக தற்போது அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர்கள் எண்ணிக்கை 4,441 ஆக இருப்பினும், அதற்காக 6500 ஆசிரியர்களின் தேவை காணப்படுவதுடன், பெரும்பாலான பாடசாலைகளில் தற்போது சேவையில் ஈடுபடுகின்ற ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக நடவடிக்கைகள் திட்டமிட்டு, ஆங்கில மொழி மூலமான கற்பித்தல்கள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளமை, 765 பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின்மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய,ஆங்கில மொழி மூலமான பாடங்களை கற்பிக்கின்ற 765 பாடசாலைகளின் எண்ணிக்கையை, 2024 ஆம் ஆண்டில் 1,000 பாடசாலைகளாக அதிகரித்து ஆசிரியர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஆங்கில மொழி மூலமான பாடங்களை கற்பிக்கின்ற அனுமதியளிக்கப்பட்ட ஆசிரியர் எண்ணிக்கையை 6,500 வரைக்கும் அதிகரிப்பதற்கும், அதற்காக ஆங்கில மொழி மூலமான பாடங்களைக் கற்பிக்கின்ற 2,500 ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கும் கௌரவ ஜனாதிபதி ,கல்வி அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. தேர்தலுக்கான பிணைப் பணத் தொகையை திருத்தம் செய்தல்

ஜனாதிபதித் தேர்தல் சட்டம், பாராளுமன்றத் தேர்தல் சட்டம் மற்றும் மாகாண சபைத் தேர்தல் சட்டம் ஆகியவற்றின் ஏற்பாடுகளுக்கமைய தற்போதுள்ள பிணை வைப்புபணத் தொகையை காலத்துக்கு ஏற்ற வகையில் தற்போதைய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பின்னணிக்கு ஏற்ப இற்றைப்படுத்துதல் பொருத்தமானது என அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, பின்வரும் வகையில் ஏற்புடைய பிணை வைப்புப்பணத் தொகையை திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக கௌரவ ஜனாதிபதி மற்றும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த ஒருங்கிணைந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்துக்கமைய அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியால் சமர்ப்பிக்கப்படும் வேட்பாளர் ஒருவரின் பிணை வைப்புத் தொகைரூபா 2.6 மில்லியன் வரையும், சுயேட்சை வேட்பாளரின் பிணை வைப்புத் தொகையைரூபா 3.1 மில்லியன் வரையும் அதிகரித்தல்.

 1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்துக்கமைய அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியால் சமர்ப்பிக்கப்படும் வேட்பாளர் ஒருவரின் பிணை வைப்புத்தொகையைரூபா 11,000/=- வரையும், சுயேட்சைக் குழுவின் வேட்பாளர் ஒருவரின் பிணை வைப்பை ரூபா 16,000/= வரையும் அதிகரித்தல்.

 1988 ஆண்டின் 2 இலக்க மாகாண சபைகள் தேர்தல் சட்டத்துக்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியால் சமர்ப்பிக்கப்படும் வேட்பாளர் ஒருவரின் பிணை வைப்புத் தொகையைரூபா 6,000/= வரையும் சுயேட்சைக் குழு வேட்பாளர் ஒருவரின் பிணை வைப்புத் தொகையைரூபா 11,000ஃ- வரையும் அதிகரித்தல்.

12. அரசுக்கு உரித்தான வங்கி நிறுவனங்கள் தொடர்பான உத்தேச மறுசீரமைப்புக்களை அமுல்படுத்துதல்

அரசக்கு உரித்தான வங்கி நிறுவனங்களின் ஒட்டுமொத்த நிர்வாகம்,இடர் முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்பு ஆகிய துறைகளில் நிலவும் பலவீனங்கள் காரணமாக கடந்த காலப்பகுதியில் நிலவிய பொருளாதார நெருக்கடி நிலையில் குறித்த வங்கிகள் கடுமையான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருந்தன. எனவே அவ்வாறான சிரமங்கள் மீண்டும் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் அவ்வங்கிகளில் மேற்கொள்ள வேண்டிய பல மறுசீரமைப்புகள் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகிய நிறுவனங்களின் உறுப்பினர்களை உள்ளடக்கிய நிபுணர்கள் குழுவினால் அடையாளங் காணப்பட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்ட நீடிக்கப்பட்ட நிதி வசதிகள்(நுகுகு) நிகழ்ச்சித்திட்டத்தில் உள்ளடக்கும் கட்டமைப்பு ரீதியான தேவைப்பாடுகளாகவும், உலக வங்கியினால் அமுல்படுத்தப்படும் அபிவிருத்தி கொள்கை செயற்பாடுகளின் கீழான அடிப்படைச் செயற்பாடுகளாகவும் குறித்த மறுசீரமைப்புகளை துரிதமாக அமுல்படுத்த வேண்டியுள்ளது. அதற்கமைய குறித்த மறுசீரமைப்பு யோசனைகளை அமுல்படுத்துவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. கொரிய குடியரசின் கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவரகத்தின் (KOICA) ஒத்துழைப்புடன் தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்பவியல் கல்லூரிகளில் மோட்டார் வாகன வேலைத்தளங்களை நவீனமயப்படுத்தல்.

தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி திணைக்களத்தின் கீழுள்ள மருதானை, கண்டி, பண்டாரவளை, கேகாலை மற்றும் சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரிகளில் மோட்டார் வாகன தொழில்நுட்ப பாடநெறிகளை மேம்படுத்துவதற்காக 05 மோட்டார் வாகன வேலைத்தளங்களை மேம்படுத்துவதற்காக 2013 – 2015 காலப்பகுதியில் கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவரகத்தினால் நிதி ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறித்த 10 வேலைத்தளங்கள் நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டுள்ளமையால் அவற்றின் உபகரணங்களை திருத்தம் செய்தல், இற்றைப்படுத்துதல் மற்றும் புதிய வழங்கல்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அப்பணிகளுக்காக 75,500 அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்குவதற்கு கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவரகம் உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்காக இருதரப்பினருக்கிடையில் கையொப்பமிடுவதற்கு உத்தேச கலந்துரையாடல் குறிப்பில் கையொப்பமிடுவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. “சுப நேரத்தில் ஒரு மரம்”– தேசிய மரநடுகைத் திட்டம்

2024 ஆண்டுக்குரிய புத்தாண்டு சுபநேர சிட்டைக்கமைய ஏப்ரல் மாதம் 18 திகதி முற்பகல் 6.16 மணிக்கு தேசிய மரநடுகை சுபநேரம் மலர்கின்றது. குறித்த சுபநேரத்தில் ஏற்றுமதி ஆற்றல் வளமுள்ள பல்பருவப் பயிர் அல்லது உணவுப் பெறுமதியுள்ள பல்பருவப் பயிரை நடுகை செய்வதற்காக மக்களை தெளிவுபடுத்தவதற்கும், அதற்கான நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென குறிப்பிட்டு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

15. இலங்கை மின்சக்தி சட்டமூலம்

இலங்கை மின்சக்தி சட்டமூலும் அரச வர்த்தமானியில் வெளியிட்டு அங்கீகாரம் பெறுவதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக 2023.11.20 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த சட்டமூலத்தை வெளியிட்ட பின்னர், பொது மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களிடமிருந்து அது தொடர்பான கருத்துக்கள் மற்றும் யோசனைகள் கிடைத்துள்ளன. குறித்த கருத்துக்கள் மற்றும் யோசனைகளை மீளாய்வு செய்து பொருத்தமான ஏற்பாடுகளை அச்சட்டமூலத்தில் சேர்த்துக் கொள்வதற்கும், மின்சக்தி துறையில் மறுசீரமைப்புக்கள் தொடர்பான அரசின் கொள்கைகளை மிகவும் சிறந்த முறையில் வெளிப்படுத்தக்கூடிய வகையில் தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன.

அவ்வாறு அடையாளங் காணப்பட்டுள்ள திருத்தங்களையும் உள்ளடக்கி சட்ட வரைஞரால் மீண்டும் தயாரிக்கப்பட்டுள்ள மின்சக்தி சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்கமைய குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும்,பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்துக்காக சமர்ப்பிப்பதற்கும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

16. தெரிவுசெய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான குறியீட்டு விலையை (Indicative Price) அறிமுகம் செய்தல்.

அமெரிக்க டொலர் மற்றும் ஏனைய சில வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபா பெறுமதி அதிகரித்து வரும் நிலை காணப்படுகின்ற போதும்,சந்தையில் அத்தியாவசிய இறக்குமதி உணவுப் பொருட்களின் சில்லறை விலையில் குறைவை அவதானிக்க முடியாதுள்ளமை அடையாளங் காணப்பட்டுள்ளது. அத்துடன், அத்தியாவசிய இறக்குமதி உணவுப் பண்டங்களை இறக்கும் போதான விலை மற்றும் சில்லறை விலை ஆகியவற்றுக்கிடையில் குறிப்பிடத்தக்க வித்தியாசம் காணப்படுகின்றது. இந்நிலையில் வணிக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் நெறிப்படுத்தலில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையால் தெரிவுசெய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பீடு செய்யப்பட்ட சந்தை விலையை ஆராய்ந்துகுறித்த விலைகளை குறியீட்டு விலைகளாக வாராந்தம் பிரகடனம் செய்யும் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்மூலம் நுகர்வோர் குறித்த அத்தியாவசிய உணவுப் பொருட்களின் சந்தை விலைகள் தொடர்பில் ஆழமாக கவனமெடுத்து குறித்த உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் இயலுமை கிடைக்கும். அவ்வாறு தெரிவுசெய்யப்பட்ட 09 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் குறியீட்டு விலைகள் தொடர்பாக வணிக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த தகவல்கள் அமைச்சரவையின் கவனத்தில் கொள்ளப்பட்டது.

17.அகில இலங்கை சாசனாரக்ஸன சபை மற்றும் வியட்னாம் பௌத்த சங்க சபை ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை

வியட்னாம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையில் நிலவும் கலாசார மற்றும் சமய உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்காக இலங்கையின் அகில இலங்கை சாசனாரக்ஸன சபை மற்றும் வியட்னாம் பௌத்த சங்க சபை ஆகியவற்றுக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்கான ஒப்பந்த வரைபுக்கு வெளிவிவகார அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்கமைய,குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக புத்த சாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT