Saturday, April 27, 2024
Home » இறந்த, பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க உத்தரவு
தரமற்ற ஊசி மருந்துகள் பாவனையால்

இறந்த, பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க உத்தரவு

மாளிகாகந்தை நீதவான் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு நேற்று பணிப்பு

by Gayan Abeykoon
March 29, 2024 11:43 am 0 comment

இந்திய கடன் திட்டத்தின்  கீழ் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட தரமில்லாத ‘ஹியூமன் இமியுனோக்லோபியூலின்’ மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு மருந்தான ‘ரிடோக்ஸிமெப்’ ஊசி மருந்துகளை அரச வைத்தியசாலைகளுக்கு பெற்றுக் கொடுத்ததன் பின்னர் இறந்தவர்கள் அல்லது நோயாளிகளாக மாறியவர்கள் தொடர்பான அறிக்கையை மே 30ஆம் திகதிக்கு முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு சமர்ப்பிக்குமாறு மாளிகாகந்தை நீதவான் திருமதி லோச்சனி அபேவிக்கிரம வீரசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு நேற்று (28) உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கின் முதலாவது சந்தேக நபரான Isulate Biotech Pharma கம்பனியின் உரிமையாளரான சுகத் ஜானக பெர்னாண்டோ என்பவர், டெண்டரின் பின்னர் வைத்திய வழங்கல் பிரிவுக்கு கொடுக்கப்பட்ட தடுப்பூசிகளின் உரிய அளவை  எந்த வைத்தியசாலைக்கு அனுப்பினார்? அவை பெற்றுக் கொடுக்கப்பட்ட  வார்டுகள் எவை?  இந்த தடுப்பூசிகளை செலுத்திய பிறகு ஏதேனும் ஒவ்வாமை அல்லது எதிர்வினை காரணமாக நோயாளி யாராவது இறந்தார்களா? இன்னும் யாருக்காவது உடம்பு சரியில்லையா? அந்த நோயாளிகளுடன் தொடர்புடைய நோயை எவ்வாறு வகைப்படுத்துவது? அது பற்றிய நிபுணர்களின் கருத்து என்ன? உயிரிழந்த நோயாளிகள் இருப்பின், நோயாளிகளின் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் முகவரிகளின் விரிவான பட்டியலை  குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், இரண்டு வகையான மருந்துகளும் மருத்துவ விநியோக பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் திணைக்களத்திற்குள் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிக்கை வழங்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு மற்றுமொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட துணைக் குழு மற்றும் பிரதான குழுவால் ரத்து செய்யப்பட்ட மருந்துகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிக்கை அளிக்குமாறு மேற்படி குழுக்களின் பொறுப்பாளருக்கு நீதிமன்றத்தினால் மற்றுமொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  இம்யூனோகுளோபுலின் ஊசியின் தரமற்ற அளவுகளை கொள்வனவு செய்தமை தொடர்பிலான மேலதிக நீதவான் விசாரணை நேற்று (28) நீதிமன்றில் மீண்டும் கூடிய போது இந்த உண்மைகள் முன்வைக்கப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் சுகாதார  அமைச்சர் மற்றும் சுற்றாடல் அமைச்சர் மற்றும் சுற்றாடல் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த உள்ளிட்ட ஒன்பது சந்தேகநபர்கள் நேற்று (28) சிறைச்சாலையால் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதோடு பிணையிலிருந்த ஐந்தாவது சந்தேகநபர்  நீதிமன்றில் ஆஜரானார்.

சட்ட மாஅதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல்  லக்மினி கிரிஹாகம, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

கடந்த 14ஆம் திகதி, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட வழக்கின் சந்தேகநபர்கள் 07 பேரின் பிணை கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், விசாரணை முடியும் வரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.

இதன்படி, சந்தேகநபர்களை எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT