Saturday, April 27, 2024
Home » யோசுவாவின் படைப்புக்களில் பாத்திரங்கள் விரிக்கும் புதிய பாதை

யோசுவாவின் படைப்புக்களில் பாத்திரங்கள் விரிக்கும் புதிய பாதை

by sachintha
March 26, 2024 12:10 pm 0 comment

லக்கிய படைப்புக்கள் உலகத்தில் ஏற்படுத்திய மறுமலர்ச்சிகளைத்தான் உலக வரலாறாக நாம் படிக்கின்றோம். குறிப்பாக ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கும் நவீன ரஷ்ய எழுச்சிக்கும் நவீன இந்திய மறுமலர்ச்சி குறிப்பாக தமிழ்நாட்டின் இன்றைய சமூக மாற்றத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் சிறுகதைகள் நாவல்கள் கொடுத்த பங்களிப்பை யாரும் மறுக்கமுடியாது.

ஆனால், சமூக மறுமலர்ச்சிக்கான படைப்புக்கள் மிக அரிதானவை. உதாரணமாக லியோடோல்ஸ்டோயின் ‘போரும் சமதானமும்’ படைப்பு அதில் வரும் பாத்திரங்களும்தான் தன்னை சுதந்திர இந்தியாவை கட்டமைக்க உதவியதாக மகாத்மா காந்தி குறிப்பிடுகிறார். கலைஞர் கருணாநிதி, அறிஞர் அண்ணாதுரை போன்றோரின் படைப்புக்களும் பாத்திரங்களும் நவீன தமிழ்நாட்டை கட்டமைக்க உதவியது எனக் கூறலாம்.

ஆனால் எல்லா படைப்புக்களும் அப்படிபட்டவை அல்ல. சமூக அபிவிருத்தி பொருளாதார விருத்தி சார்ந்த படைப்புக்களும் அதில் வரும் பாத்திரங்களுமே அவ்வித மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.

அந்தவகையில், யோசுவாவின் சிறுகதை மற்றும் நாவல் படைப்புக்களில் பாத்திர படைப்புக்கள் காட்டும் திசை குறித்து பல உரையாடல்கள் அண்மைக்காலங்களில் நடைபெற்றிருக்கின்றன. வழமையான உத்திகளை கடந்து ஒரு சாதாரண போக்கில் கதைகளை சொல்லும் யோசுவா, அக்கதைகளில் பேசும் பாத்திரங்களை மிக உயர்ந்த இலட்சியவாதிகளாக நம் முன் நிறுத்துவதும் அவர்களை சமூகத்தின் எல்லா தளங்களில் இருந்தும் எழுந்து வரப்பண்ணுவதும் ஓர் வாசகனுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கிறது.

கிளிநொச்சியை சேர்ந்த யோசுவா இதுவரை பதிமூன்று படைப்புக்களை நமக்கு தந்துள்ளார். அவற்றில் அவரது சாமி சிறுகதை தொகுப்பு 2019ம் ஆண்டு தேசிய விருதை பெற்றதுடன் ஏனைய சில கதைகள் மாகாண விருதுகளை பெற்றிருக்கிறது. யோசுவாவின் பாத்திர படைப்பு குறித்து இராஜேஸ்வரன் இராஜேஸ் கண்ணன் (சிரேஷ்ட விரிவுரையாளர், சமூகவியல் துறை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்) அவர்கள் எழுதுகின்றபோது யோசுவாவின் கதைகளில் பாத்திரங்கள், உரையாற்றுபவர்கள், நெறியாளர்கள், நிறுவன மேலாளர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், தொழில் படைப்புகளின் பின்னே யோசுவாவின் சமூக நோக்கங்கள் விரவிக்கிடக்கின்றமை உணரப்படுகின்றது.

உலகின் பல நாடுகளின் ஏற்பட்ட புரட்சிகளின் பின்னணியில் சமூகத்தின் தன்னிலை பற்றிச் சிந்தித்த சிந்தனையாளர்கள் பலரும் யதார்த்தமாக கண்டுகொண்ட சமூக குழப்பங்களுக்கு எதிர்நிலையில் நின்று கொண்டுதான் சமூகத்தின் இயக்கம் எவ்வாறு அமையவேண்டும் எனும் தீட்சண்யமான கொள்கை விளக்கங்களை உருவாக்கி வெளியிட்டனர்.

இந்த நோக்கும் போக்கும் யோசுவா அவர்களிடத்தில் இருப்பதை அவர் சித்தரித்த இத்தகைய பாத்திரங்கள் பிரதிபலிக்கின்றன. சமூகத்தில் நொந்துபோயுள்ள பக்கங்களை நிமிர்த்தி நிறுத்துவதற்கான மாதிரிப் பாத்திரங்களை உருவாக்கி அவர்களின் ஆர்வங்கள், செயல்கள், கருத்து நிலைகள், செயலாற்றல்கள் என்பவற்றை ஒரு முன்னுதாரணமாகச் சித்தரித்துக் காட்டுவதன் மூலமாக தனது சிந்தனைகளைப் பரப்பும் முயற்சியை கச்சிதமாகச் செய்கின்றார். நவீன நாடகங்களில் வரும் உரைஞர் போன்ற ஒரு பரிமாணத்தை எடுக்கின்றார். சமூக யதார்த்தத்தின் எதிர்நிலைப் பிரதிபலிப்பாக அந்தப் பாத்திரங்கள் அமைகின்றபோது அவர்களின் முன்னுதாரணத்தின் வழியாக சமூகத்துக்கான சரியான பாதைகளை வகுத்துக் கொடுக்கலாம் என்ற உயரிய நோக்கு யோசுவாவிடம் உள்ளதை அவரது எழுத்துக்கள் எல்லாவற்றிலும் தரிசிக்க முடிகின்றது. இது இரட்டை எதிர்நிலைகளை (Binary Opposites) பேசும் முயற்சியாகின்றது.

நன்மை – தீமை, ஆண்டாள்- அடிமை, உயர்ந்தவன்- தாழ்ந்தவன் என்று பேசப்பட்டுவந்த இரட்டை எதிர்நிலைகள் இங்கு இலட்சிய மாதிரிகளாக முன்னிறுத்தப்படும்போது உரையாற்றுபவர்கள், நெறியாளர்கள், நிறுவன மேலாளர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், தொழில் முயற்சியாளர்கள், பண்ணை செய்பவர்கள் கதைகளில் சொல்லும் கருத்துக்களுக்கு எதிர்நிலையிலேயே சமூகத்தின் போக்கு யதார்த்தத்தில் அமைந்துள்ளது என்பதை உணர்த்த முனைகின்றார். இந்த எதிர்நிலைகளே சமூக அறம் எது என்பதைத் தீர்மானிப்பதற்காக சிந்தனைகளை சாதாரணர்களிடையே ஏற்படுத்துகின்றது.

ஒருகாலத்தில் இன்னா நாற்பது இனியவை நாற்பது என்று பேசிய கருத்துக்களின் இன்னெரு வடிவமாகவே அது அமைந்துள்ளது. யார் தேட்டைத் தீயார் கொள்வார் என்ற இடைவெளியைச் சிந்திக்க வைத்தது. இதனைத்தான் தன் பாத்திரங்களைக் கட்டமைத்தல் வாயிலாக யோசுவா இந்தக் காலத்துச் சமூகப் போக்கிற்கு ஏற்ப சொல்ல விளைகின்றார்.

யோசுவாவின் சமகால படைப்புக்களை ஆழமாக நான் வாசித்தவன் என்ற நிலையில் அவரது பாத்திரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து பேச விரும்புகின்றேன். முதலாவது அவரது சாமி கதை தொகுப்பில் முதலாவது கதையான சாமி கதையில் வரும் சதாசிவம் என்ற பாத்திரம் இன்றைய இலங்கை சமூகத்திற்கு மிக முக்கியமான ஒரு நபராக இருக்கின்றார் என்பது மட்டுமல்ல சதாசிவத்தை நான் சந்தித்த பின்பு பல சதா சிவங்களை இலங்கையின் பல பாகங்களிலும் நான் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன் என்று கூறலாம். சதாசிவம் ஒரு சாதாரன விவசாயி அந்த விவசாயி அதே கிராமத்தில் இருக்கும் ஒரு அரசாங்க உத்தியோகத்தர் சாமியாக மனதில் நிறுத்தி வழிபடுகிறார். இந்த பண்பாட்டை முற்றிலும் வெறுக்கும் அந்த அதிகாரியின் மனைவி தன் கணவனை பல முறை எச்சரிக்கிறார். தொடர்ந்து அவர் அதை செய்து வந்ததால் தீவிர சமய நம்பிக்கை கொண்ட அந்த பெண்மணி தன் கணவனை விவாகரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்படும் அளவிற்கு அந்த சாதாரண விவசாயி சதாசிவம் செல்வாக்கு செலுத்துகிறார். இது தான் அந்த கதையின் சுறுக்கம்.

ஏன் அப்பா நீங்கள் சதாசிவம் மாமாவை சாமியாக நினைக்கிறீர்கள் என்று அந்த அதிகாரியின் பதினாறு வயது நிறைந்த மகள் ரேவதியின் கேள்விக்கு பதிலாக இந்த கதை நீண்டு சென்று கடைசியில் ரேவதியே கோயிலுக்கு செல்லாமல் சதாசிவத்தை சாமியாக நினைத்து வணங்கி விட்டு வீட்டுக்கு திரும்பும்போது உண்மையில் மெய்சிலிர்க்கிறது…

அப்படியானால் சதாசிவம் உண்மையில் சாமியாக நோக்கப்பட என்னதான் செய்தார் என்பதுதான் இக்கதையின் மையமாகும்.

சதாசிவம் ஒரு சாதாரண விவசாயி அல்ல, அவர் உணவு உற்பத்தியை ஒரு தொண்டாக கருதி அந்த தொண்டில் எவ்விதமான நஞ்சும் கலந்துவிடாமல் இருப்பதற்கு அவர் மேற்கொள்ளும் முயற்சிகளும் அவர் சமூகத்தில் ஏற்படுத்தும் மிகப்பெரிய மாற்றங்களும்தான் சதாசிவம் என்னும் ஒரு சாதாரன விவசாயியை சாமியாக எழுந்து நிற்க செய்கிறது.

இலங்கை போன்றதொரு விவசாய மைய சமூகத்தில் மக்கள் உணவின்றி பட்டினி கிடப்பதும் விவசாயிகள் ஏழைகளாக இருப்பதும் ஏன் என்ற கேள்விக்கு இந்த மிகச் சிறந்த சிறுகதை பதிலை முன்வைக்கிறது. யோசுவாவின் பாத்திர படைப்பில் சதாசிவம் அவரது மனைவி அவரது இரண்டு பட்டதாரி மகன்கள் அனைவரும் குடும்பமாக பின்பற்றும் விவசாய முறைமை மேலும் அவரோடு இணைந்து அவரது கிராமத்தில் நூற்று பதினாறு குடும்பங்கள் இணைந்து தேனமுது என்ற திட்டம் மூலமாக உற்பத்தி செய்யும் உணவு பொருட்கள் மானுட தர்மத்தை பேணி அறந்தவறாது சந்தைகளுக்கு நுழையும் போது உண்மையில் அத்தனை விவசாயிகளையும் சாமியாக நினைக்க தோன்றுகிறது.

ஒரு வகையில் சதாசிவம் என்னும் அந்த விவசாயி பாத்திரம் திடீரென்று ஒரு முனிவராக தோன்றி ரேவதிக்கு விவசாயத்தின் அறம் குறித்து சொல்லும் இடத்தில் மானுட மேன்மை விரிக்கின்றது.

இலங்கையின் நீடித்து நிலைத்திருக்ககூடிய உற்பத்தி பொருளாதாரத்தில் சதாசிவம் தவிர்க்கப்பட முடியாது ஒர் வழிகாட்டி. சதாசிவத்தின் பார்வையில் தேச பக்தி என்பது மண் பக்தியிலிருந்து தொடங்கப்பட வேண்டும்.

மண்ணை காதல் செய்வதும் மண்ணின் நுண் உயிர்களை வாழ்விப்பதுமே நீடித்த நிலையான பொருளாதாரத்திற்கான அடிப்படை. குறிப்பாக விவசாயி என்பவன் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் வைத்தியனாகவும் தேசத்தின் உற்பத்தி பொருளாதாரத்தின் காவலனாகவும் இருக்கின்றான் என்பது தான் சதாசிவத்தின் நிலைப்பாடு. ரேவதி போன்ற நம் இளைய சமூகத்திற்கு சதாசிவம் சாமியாகின்ற போது உண்மையில் ரேவதிக்கள் இந்த சமூகத்தை புதிய கண்களால் பார்க்க தூண்டுகிறது.

தற்போது இலங்கையின் விவசாய உற்பத்தி பொருளாதாரம் குறித்தும் அதனை நவீனப்படுத்துவதால் ஏற்படுத்தப்படும் பொருளாதார முன்னேற்றம் குறித்தும் பல உரையாடல்களும் செயற்பாடுகளும் நடைபெறுகின்றன. அப்படிப்பட்டஉரையாடல்களில் யோசுவாவின் பாத்திரமான சதாசிவம் குறித்தும் உரையாடப்படுவது முக்கியம் என்று கருதுகின்றேன்.

யோசுவாவின் சாமி எனும் சதாசிவத்தை கதையின் வழியாக நான் சந்தித்த பின்பும் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் நான் பயணம் செய்தபோதும் சதாசிவத்தை போன்ற விவசாயத்தை ஒரு உன்னத தொண்டாக நினைத்து நிலத்தை இதுவரை நஞ்சாக்காமல் பாதுகாத்து மனிதர்களுக்கு அமுதாக உணவை கொடுக்கும் விவசாயிகள் பலரை நான் சந்திக்கும்வாய்ப்பு கிடைத்தது.

அப்படிப்பட்டவர்கள் நம் சமூகத்தில் சாமிகளாக உயர்ந்த கௌரவமாக பார்க்கப்படும் பட்சத்தில் தான் ஒரு ஆரோக்கியம் நிறைந்த மனித சமூகத்தையும் தன்னிறைவு மிக்க பொருளாதார வளத்தையும் நோக்கி நமது நாட்டை நாம் கட்டியெழுப்ப முடியும் என்பதற்கு சதாசிவம் மிக முக்கிய உதாரணமாக இருக்கிறார்.

எனவேதான் யோசுவாவின் பாத்திரங்கள் சமூகத்திற்குள் ஆழமாக ஊடுருவிச்சென்று மானுட சமூகத்தின் ஒரு மிக்க ஆன்மாவை அசைக்கின்றன. யோசுவாவின் இன்னுமொரு பாத்திர படைப்புடன் அடுத்த இதழில் சந்திக்கும் வரை இணைந்திருப்போம்…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT