Saturday, April 27, 2024
Home » உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; மைத்திரிபால CID யில் ஆஜர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; மைத்திரிபால CID யில் ஆஜர்

- "உண்மையில் செய்தது யார் என தெரியும்"

by Rizwan Segu Mohideen
March 25, 2024 10:46 am 0 comment

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை உண்மையாக செய்தவர்கள் யார் என்பது தொடர்பில் தனக்குத் தெரியுமென, முன்னாள் ஜனாதிபதி வெளியிட்ட கருத்து தொடர்பில் அவர் வாக்குமூலம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (22) கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் தமக்கு 2 வாரங்களுக்கு முன்னர் கிடைத்த தகவலுக்கமைய இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றம் ஒன்றில் தாம் இரகசிய வாக்குமூலம் வழங்க தயாராகவுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இடம்பெற்று வரும் வழக்கு விசாரணைகளுக்கு குறித்த விடயம் உதவியாக அமையுமென அவர் மேலும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோனுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, CID யினர் இது தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் வழங்குமாறு கடந்த சனிக்கிழமை அழைப்பு விடுத்த நிலையில் தாம் 48 மணித்தியாலங்களுக்குள் வாக்குமூலம் வழங்கவுள்ளதாக தெரிவித்திருந்ததாக, பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கமைய இன்று (25) முற்பகல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

குறித்த கருத்துகள் தொடர்பான வீடியோவையும் CID யினர் பெற்றுள்ளதோடு, அதனை நீதிமன்றிற்கும் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மைத்திரிபால சிறிசேனவின் கருத்து தொடர்பில் விசாரணை நடத்துமாறு, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன உள்ளிட்ட சிலர் CIDயில் கடந்த சனிக்கிழமை (23) முறைப்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT