Saturday, April 27, 2024
Home » யாழ்ப்பாணத்தில் பேரனுக்காக சின்னஞ்சிறிய முச்சக்கர வண்டி தயாரித்த பாசம் மிகுந்த தாத்தா!

யாழ்ப்பாணத்தில் பேரனுக்காக சின்னஞ்சிறிய முச்சக்கர வண்டி தயாரித்த பாசம் மிகுந்த தாத்தா!

by sachintha
March 19, 2024 1:25 pm 0 comment

தாத்தா ஒருவர் தனது பேரனுக்காக யாழ்ப்பாணத்தில் தயாரித்த உலகிலேயே மிகவும் சிறிய முச்சக்கரவண்டி தற்போது அச்சிறுவனது விளையாட்டுப் பொருளாக மாறியுள்ளது

மேற்படி ‘தாத்தா’ தனது பேரனின் முதலாவது பிறந்தநாளுக்கு பரிசளிப்பதற்காக மிகவும் சிறிய முச்சக்கர வண்டி ஒன்றினை அவரது முயற்சியினால் தயாரித்துள்ளார்.

இந்த முச்சக்கர வண்டி உருவத்தில் சிறியதாக இருந்த போதிலும், முற்றிலும் சாதாரண முச்சக்கர வண்டி போலவே தோற்றமளிக்கிறது. இதற்கு மோட்டார் பொருத்தினால் இயங்கக் கூடியவாறு இருக்கும் என இதனைத் தயாரித்தவர் கூறுகின்றார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இவ்வாறானதொரு சின்னஞ்சிறிய முச்சக்கர வண்டியை தயாரித்துத் தருமாறு கூறி பலர் என்னுடன் தொடர்பு கொண்டனர். அவ்வாறு தயாரித்து கொடுப்பதாக இருந்தால் என்னால் உடனடியாக தயாரித்துக் கொடுக்க முடியாது. சிறிது நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும். ஏனெனில் முச்சக்கர வண்டிகள் திருத்தம் மற்றும் ஏனைய வேலைகளுக்கு எனது வாடிக்கையாளர்கள் என்னிடம் வருவார்கள். அவர்களது வேலைகளை செய்துவிட்டு நேரம் கிடைக்கும் போதே இதனை செய்து கொடுப்பேன்.

இதனை செய்வதற்கு எனக்கு 25 நாட்கள் தேவைப்பட்டன. சிறுவர்களுக்கான ஏனைய வாகனங்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் சிறுவர்களுக்கான முச்சக்கர வண்டி விற்பனை செய்யப்படுவதில்லை. என்னுடைய வேலையும் முச்சக்கர வண்டி திருத்துவதுதான். எனவேதான் இத்தகைய சிறிய முச்சக்கர வண்டியினை என்னால் தயாரிக்க முடிந்தது. எனது கையாலேயே இந்த முச்சக்கர வண்டியினை தயாரித்து முடித்துள்ளேன். இதற்கு எனது மகன்மாரும் உதவி செய்தார்கள்.

கடையில் விற்பனை செய்யப்படும் சிறுவர்களுக்கான வாகனங்கள் பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்படுவதால் அது இலகுவில் உடைந்துவிடும். ஆனால் இது இரும்பு மற்றும் தகரத்தினால் உருவாக்கப்பட்டது. ஆகையால் இலகுவில் உடையாது. பல ஆண்டுகளுக்கு பாவனையில் இருக்கும். இதனை உருவாக்க ஒரு இலட்சத்து எழுபத்து ஐயாயிரம் ரூபா செலவாகியுள்ளது” என்றார்.

இதேவேளை இந்த முச்சக்கர வண்டியைப் பார்வையிடுவதற்கு ஏராளமானோர் வருகை தருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT