Thursday, May 9, 2024
Home » காசாவில் அவசர போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா அழைப்பு: கெய்ரோவில் இஸ்ரேல் இன்றி பேச்சு

காசாவில் அவசர போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா அழைப்பு: கெய்ரோவில் இஸ்ரேல் இன்றி பேச்சு

- தொடரும் தாக்குதல்களில் மேலும் 124 பேர் பலி

by manjula
March 5, 2024 8:48 am 0 comment

காசாவில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் நீடிக்கும் நிலையில், அதன் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா அவசர போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்வரும் ரமலான் மாதத்திற்கு முன்னர் போர் நிறுத்தம் ஒன்றை எட்டும் முயற்சியில் அமெரிக்கா உட்பட மத்தியஸ்த நாடுகள் ஈடுபட்டு வரும் சூழலிலேயே அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

ஐந்து மாதங்களை எட்டும் இந்தப் போரை நிறுத்தும் முன்வொழிவு தொடர்பில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் எகிப்து, அமெரிக்கா மற்றும் கட்டார் மத்தியஸ்தர்கள் அதேபோன்று ஹமாஸ் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் காசாவுக்கு உதவிகளை வழங்குவது மற்றும் பலஸ்தீன கைதிகளுக்கு பகரமாக பணயக்கைதிகளை விடுவிப்பது ஆகியவை உள்ளடங்கிய பரந்த அளவில் நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்றிருப்பதாக அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் காசாவில் இருந்து இஸ்ரேலிய படை முழுமையாக வாபஸ் பெற ஹமாஸ் வலியுறுத்துவது உட்பட சில விடயங்களில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதாக அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

‘போர் நிறுத்தம் ஒன்றை ஹமாஸ் கோருகிறது. எனவே, உடன்படிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது’ என்று அலபாமாவில் ஞாயிறன்று (03) இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று பேசிய ஹரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கத்துக்கு மாறான தொணியில் பேசிய அமெரிக்க துணை ஜனாதிபதி, காசாவுக்கு உதவிகளை கணிசமாக அதிகரிக்க இஸ்ரேல் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். காசாவில் மக்கள் பட்டினியில் இருப்பதாகவும் நிலைமை ‘மனிதாபிமானமற்ற’ வகையில் உள்ளது என்றும் அவர் வர்ணித்தார்.

‘காசாவில் பாரிய அளவான வேதனைகள் இடம்பெற்று வரும் நிலையில் அவசர போர் நிறுத்தம் ஒன்று எட்டப்பட வேண்டும்’ என்றார்.

காசா மனிதாபிமான நெருக்கடி மோசமடைந்து வடக்கில் பட்டினியால் வாடும் மக்களுக்கு உதவிகளை எடுத்துச் செல்வது தோல்வி அடைந்து வரும் நிலையில் போர் நிறுத்தம் ஒன்றுக்கான அழுத்தம் அதிகரித்துள்ளது.

காசாவில் பஞ்சம் ஏற்படும் அச்சுறுத்தல் பற்றி ஐ.நா எச்சரித்திருக்கும் சூழலில் அமெரிக்கா முதல் முறையாக கடந்த சனிக்கிழமை காசாவுக்கு வானில் இருந்து உணவு உதவிகளை போட்டது.

‘இக்கட்டான மனிதாபிமான சூழ்நிலையைத் தணிக்க காசாவுக்குள் உதவி விநியோகத்தை விரிவுபடுத்துவது மிகவும் அவசியமாகும்’ என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

30,534 பேர் பலி

போர் நிறுத்தம் பற்றி பேச்சுவார்த்தைகள் தீவிரப்படுத்தப்பட்டபோதும் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களில் எந்தத் தணிவும் ஏற்படவில்லை. குறிப்பாக எகிப்து எல்லையை ஒட்டி இருக்கும் பெரும்பாலான பலஸ்தீன மக்கள் அடைக்கலம் பெற்றுள்ள ரபா நகர் மற்றும் தெற்கின் மிகப்பெரிய நகரான கான் யூனிஸ் மீதான தாக்குதல்கள் உக்கிரம் அடைந்திருந்தன.

ரபாவின் குடியிருப்பு கட்டம் ஒன்றின் மீது நேற்று அதிகாலை இடம்பெற்ற வான் தாக்குதலில் குறைந்தது அறு பேர் கொல்லப்பட்டனர். இதில் மாதி குடும்பத்திற்கு சொந்தமான வீட்டின் மீதே தாக்குதல் இடம்பெற்றிருப்பதோடு இதில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

முன்னதாக ரபா நகரில் உள்ள கிர்பத் அல் அதாஸ் பகுதியில் உள்ள வீட்டின் மீது கடந்த ஞாயிறு இரவு இடம்பெற்ற வான் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தாயின் கதறலுக்கு மத்தியில் நயீட் மற்றும் விசாம் அபூ அன்ஸா என்ற இரட்டை குழந்தைகள் நேற்று முன்தினம் ரபாவில் அடக்கம் செய்யப்பட்டன. பொதுமக்கள் மாத்திரம் இருந்த வீட்டின் மீதே குண்டு வீசப்பட்டதாக உறவினர் ஒருவர் கூறினார். இந்தத் தாக்குதலில் ஒரே குடும்பத்தின் 14 பேர் கொல்லப்பட்டனர்.

‘அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென்று ஏவுகணை ஒன்று தாக்கியது. முழு வீடும் தரைமட்டமாக்கப்பட்டது’ என்று அவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற 13 ‘படுகொலை’ சம்பவங்களில் குறைந்தது 124 பேர் கொல்லப்பட்டு மேலும் 210 பேர் காயமடைந்ததாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்மூலம் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 30,534 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 71,920 பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 70 வீதத்துக்கும் அதிகமானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களாவர்.

உதவி லொறி மீது தாக்குதல்

காசாவில் உணவு பற்றாக்குறை மோசமடைந்திருக்கும் நிலையில் விலங்குணவுகள் மற்றும் தாவரங்களை அறைத்து சாப்பிடுவதாக பலஸ்தீன குடும்பங்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளன. இதேநேரம் உதவிகள் செல்லாத வடக்கு காசாவில் அண்மைய நாட்களில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குறைந்தது 16 குழந்தைகள் உயிரிழந்து இருப்பதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மத்திய காசாவின் டெயிர் அல் பலாவில் உதவி லொறி ஒன்றின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் பலரும் கொல்லப்பட்டதாக பார்த்த ஒருவர் ஏ.எப்.பிக்கு தெரிவித்துள்ளார்.

‘அங்கிருந்து ஓட்டம் பிடிப்பதா இல்லை லொறியில் இருந்தவர்களை காப்பாற்றுவதா என்று எமக்குத் தெரியாதிருந்தது. அப்போது அவர்கள் இரண்டாவது ஏவுகணையை வீசினார்கள்’ என்று சம்பவத்தை பார்த்த ரியாத் அல் குராம் கூறினார்.

இது தொடர்பில் இஸ்ரேல் இராணுவத்தை ஏ.எப்.பி. தொடர்பு கொண்டபோது, அது ‘உதவி லொறியல்ல’ என்று மறுத்தபோதும் அது தொடர்பில் விளக்கம் அளிக்க தவறியது.

ஏற்கனவே கடந்த வியாழக்கிழமை உதவி பெறுவதற்காக ஒன்று திரண்ட மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சர்வதேச அளவில் கண்டனங்கள் வெளியாகி இருந்தன.

காசாவுக்கு உதவி வாகனங்கள் செல்வதை இஸ்ரேல் தொடர்ந்து தடுத்து வருகிறது. குறிப்பாக வடக்கு காசாவுக்கு உதவிகள் அனுமதிக்கப்படாத நிலை காணப்படுகிறது. தெற்கிற்கு செல்லும் உதவிகள் போதுமானதாக இல்லை.

இதில் 65 சதுர கிலோமீற்றர் அளவே ஆன ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமாக 1.3 மில்லியன் மக்கள் அடைக்கலம் பெற்றுள்ளனர். காசாவில் இடம்பெயர்ந்தவர்களுக்கான கடைசி அடைக்கலாம் இந்த நகர் உள்ளது.

பேச்சில் முன்னேற்றம்

காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளில் தொடர்ந்தும் உயிருடன் இருப்பவர்களின் பட்டியலை வெளிடும்படி விடுத்த கோரிக்கையை ஹமாஸ் அமைப்பு நிராகரித்ததை அடுத்து கெய்ரோவில் இடம்பெற்று வரும் காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தையை இஸ்ரேல் புறக்கணித்ததாக இஸ்ரேலிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

எனினும் இஸ்ரேல் தொடர்ந்து குண்டு வீசுவதால் அந்த விபரத்தை தர முடியாதிருப்பதாக ஹமாஸ் அமைப்பு கூறியதாக பி.பி.சி. தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

‘யார் உயிருடன் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வது நடைமுறை சாத்தியம் இல்லை’ என்று மூத்த ஹமாஸ் அதிகாரி ஒருவரான டொக்டர் பசம் நயிம் குறிப்பிட்டார்.

இந்நிலையில் காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பில் ஹமாஸ் தூதுக் குழு மற்றும் மத்தியஸ்தர்கள் இடையே குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக கெய்ரோ பேச்சுவார்த்தை தொடர்பில் எகிப்து அரச தொலைக்காட்சி நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.

எதிர்வரும் மார்ச் 10 அல்லது 11 ஆம் திகதி ஆரம்பமாகும் முஸ்லிம்களின் புனித ரமலான் மாதத்திற்கு முன்னர் போர் நிறுத்தம் ஒன்றை அடையும் முயற்சியில் எகிப்து தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்று எகிப்து உளவுச் சேவையின் மூத்த அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ‘அல் கஹெரா நியூஸ்’ தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

‘பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரேலிய பிரதிநிதிகள் இன்றியே கெய்ரோவில் இரண்டாவது நாளாக நேற்று (04) பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT