Monday, April 29, 2024
Home » மின்பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி!

மின்பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி!

by Rizwan Segu Mohideen
February 22, 2024 6:02 am 0 comment

நாட்டில் மின்கட்டணம் 18 வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கடந்த ஒக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட மின்கட்டண திருத்தத்தின் ஊடாக அதிகரிக்கப்பட்ட மின்கட்டணத்தை முழுமையாக இரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயங்களை மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார். மின்கட்டணத்தில் நிவாரணங்களும் சலுகைகளும் எதிர்பார்க்கப்பட்டிருந்த சூழலில் அமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இந்த அறிவிப்பை மின்பாவனையாளர்கள் பெரிதும் வரவேற்பர் என்பதில் ஐயமில்லை. அத்தோடு மின்பாவனையாளர்கள் மத்தியில் நிச்சயம் நம்பிக்கையும் ஏற்படும்.

மின்சாரம் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. மின்பாவனை மனித வாழ்க்கை அமைப்புடன் இரண்டறக் கலந்த ஒன்றாக உள்ளது. அதனால் மின்கட்டணம் நியாயமானதாக இருப்பதை பாவனையாளர்கள் பெரிதும் விரும்புவதோடு எதிர்பார்க்கக் கூடியவர்களாகவும் உள்ளனர்.

அந்த வகையில் மக்களின் எதிர்பார்ப்பில் கவனம் செலுத்தியுள்ள அரசாங்கம், கடந்த ஒக்டோபரில் மேற்கொள்ளப்பட்ட மின்கட்டண அதிகரிப்பை முற்றாக இரத்து செய்யவும் இம்முறை மின்கட்டணத்தை 18 வீதமாகக் குறைக்கவும் நடவடிக்கை எடுத்திருக்கிறது. இதன் ஊடாக மின்பாவனையாளர்கள் அதிக நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ள இருக்கின்றனர். நாட்டு மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தியே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

நாட்டின் பொருளாதாரம் நம்பிக்கை அளிக்கும் வகையில் கட்டம் கட்டமாக முன்னோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது.​ அதனைப் பொருளாதார தரவுகளும் அரசாங்கம் முன்னெடுக்கும் மக்கள் நலத்திட்டங்களும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

பொருளாதாரம் முன்னேற்றப் பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதன் பயனாக அடிக்கடி நிவாரணங்களும் சலுகைகளும் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன. இதன் பயனாக பொருளாதார நெருக்கடி நிலவிய காலப்பகுதியில் மக்கள் முகம்கொடுத்த அசௌகரியங்களும் தாக்கங்களும் தற்போது பெரும்பாலும் நீங்கியுள்ளன.

பொருளாதாரம் முன்னேற்றப் பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதன் பிரதிபலனாக மக்களுக்கு நிவாரணங்களையும் சலுகைகளையும் வழங்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இவ்வருடத்திற்கான வரவுசெலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அந்த அதிகரிப்பு ஜனவரி முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது.

இதேபோன்று மக்களுக்கு நிவாரணமளிக்கும் மற்றொரு நடவடிக்கையாக அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலைகளும் கூட குறைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சூழலில்தான் மின்பாவனையாளர்களுக்கு அதிக நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் மின்கட்டணக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான ​வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி வீடு மற்றும் மதவழிபாட்டுத் தலங்களுக்கு 18 சதவீதப்படியும், தொழிற்சாலைகள், ஹோட்டல்களுக்கு 12 சதவீதப்படியும், அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களுக்கு 24 சதவீதப்படியும் மின்கட்டணம் குறைப்பட உள்ளது. இது தொடர்பில் மின்சார சபை மேற்கொண்டுள்ள திருத்த யோசனை இன்று பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இந்நடவடிக்கை குறித்து எரிசக்தி, மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிடுகையில், ‘மக்களுக்கு மின்கட்டணத்தில் அதிக நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் மின்கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்றுள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான நாடு அந்நெருக்கடியில் இருந்து மீட்சி பெறுவதற்கு அமைய மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கவும் அரசாங்கம் பின்னிற்கவில்லை என்பதற்கு மின்கட்டணத் திருத்தம் மற்றொரு எடுத்துக்காட்டாகும்.

மக்கள் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்பட்டு வருவதை அரசாங்கம் மீண்டுமொரு தடவை உறுதிப்படுத்தியுள்ளது.

ஆகவே மின்பாவனையாளர்கள் பொறுப்புணர்வுடன் மின்சாரத்தைப் பயன்படுத்த வேண்டும். மின்சாரம் வீண்விரயமாவதைத் தவிர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்தவும் வேண்டும். ஏனெனில் தற்போது நிலவும் வரட்சி காலநிலையினால் நீர் மின்னுற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அதனால் எரிபொருளை அடிப்படையாகக் கொண்டுதான் அதிகம் மின்னுற்பத்தியை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். அது அதிக செலவுமிக்க காரியமும் கூட.

இவை தொடர்பிலும் கவனம் செலுத்தியபடி மின்சாரத்தைப் பயன்படுத்த வேண்டிய தேவையும் எழுந்துள்ளது. அத்தோடு பொருளாதார மேம்பாட்டுக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் ஒத்துழைப்பு நல்கவும் தவறக்கூடாது. அப்போது வளமான பொருளாதார வாழ்வைப் பெற்றுக் கொள்ளும் காலம் வெகுதொலைவில் இராது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT