Thursday, May 9, 2024
Home » 9ஆவது பாராளுமன்றத்தின் 5ஆவது கூட்டத் தொடரின் ஆரம்பமும் அரச கொள்கைப் பிரகடன வெளியீடும் (Live)

9ஆவது பாராளுமன்றத்தின் 5ஆவது கூட்டத் தொடரின் ஆரம்பமும் அரச கொள்கைப் பிரகடன வெளியீடும் (Live)

by Rizwan Segu Mohideen
February 7, 2024 10:01 am 0 comment

2022 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.9% என்ற நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை, 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக 2023 ஆம் ஆண்டின் இறுதியில் உபரி நிலைய அடைய முடிந்தது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 09ஆவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து ஆற்றிய கொள்கை விளக்க உரையில் தெரிவித்தார் – PMD

2022 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.7% ஆக இருந்த வரவு செலவுத் திட்ட முதன்மைப் பற்றாக்குறையானது 2023 ஆம் ஆண்டில் முதன்மை வரவு செலவுத் திட்ட உபரியை ஏற்படுத்த முடிந்தது என்றும், இது சுதந்திரம் அடைந்த 76 ஆண்டுகளில் 6 ஆவது தடவையாக இலங்கையால் முதன்மை வரவு செலவுத் திட்ட உபரியை உருவாக்க முடிந்தது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்- PMD

2022ஆம் ஆண்டின் இறுதியில் 745 பில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்த பிரதான 52 அரச நிறுவனங்கள் 2023ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்குள் 313 பில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார் – PMD

2021 ஆம் ஆண்டில் 194,495 ஆக இருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையை 2023 ஆம் ஆண்டில் 1,487,303 ஆக உயர்த்த முடிந்ததாகவும், இந்த ஆண்டு ஜனவரியில் மாத்திரம் 200,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். வருடாந்தம் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 5 மில்லியனாக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்- PMD

2022 இல் 7.8% ஆக சுருங்கிய இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, தொடர்ச்சியாக 6 காலாண்டுகளுக்கு எதிர்மறையான வளர்ச்சியை பதிவு செய்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஆனால் அது 2023 மூன்றாம் காலாண்டில் 1.6% வளர்ச்சியை எட்டியதாகத் தெரிவித்தார்- PMD

வீழ்ச்சியடைந்த பொருளாதார நிலையிலிருந்து கிரேக்கம் மீண்டு வருவதற்கு 10 வருடங்களை விட அதிக காலம் பிடித்தது எனவும், ஆனால் இலங்கை மிகக் குறுகிய காலத்தில் சிறப்பான சாதனைகளை படைத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்- PMD

2022 ஆம் ஆண்டு முழுதும் சரிந்த பொருளாதாரம் 2023 இல் முன்னேற்றத்தை அடைந்திருப்பது தற்செயலாக அல்ல. மிகவும் கவனமாகவும் தொலைநோக்குடனும் தயாரிக்கப்பட்ட நுட்பமான பொருளாதாரக் கொள்கையை அமுல்படுத்தியன் மூலமே அந்த நிலை ஏற்பட்டது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார் – PMD

பல தசாப்தங்களாக அவதிப்பட்ட விவசாயிகளுக்கு செலுத்தும் மரியாதையாக அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட உரித்து வேலைத்திட்டத்தின் ஊடாக இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தாம் இழந்த காணி மற்றும் வீட்டு உரிமைகளை மீண்டும் வழங்கியமை வரலாற்று மற்றும் புரட்சிகரமான நடவடிக்கையாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்- PMD

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் 2023 ஆம் ஆண்டு முழுவதும் 4917 நோயாளர்களுக்கு 915 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும், 3 முதல் 5 வேலை நாட்களுக்குள் கொடுப்பனவுகளை துரிதமாக செலுத்தும் வேலைத்திட்டம் அமுலில் உள்ளதாகவும், அனைத்து மருத்துவ உதவிகளும் 50% இலிருந்து 100% ஆக அதிகரிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இந்த ஆண்டு முதல் ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார் – PMD

2022 ஆம் ஆண்டில் வரி செலுத்துவதற்கு பதிவு செய்தோர் தொகை 437,547 ஆக இருந்ததோடு 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் அதனை 1,000,029 ஆக அதிகரித்துள்ளதாகவும், இது 130% அதிகரிப்பைக் காட்டுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார் – PMD

பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்தி முன்னோக்கிச் செல்கையில் பொருளாதாரம் தொடர்ந்தும் ஸ்திரப்படும் நிலையில், வரிச்சுமை குறைக்கப்படும் எனவும் அதேவேளை வற் வரியை திருத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார் – PMD

இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் கடன் மறுசீரமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், அது நாட்டின் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான அடிப்படை அத்திவாரமாகவும், கடன் அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான பாதையில் திருப்புமுனையாகவும் அமையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார் – PMD

இந்த ஆண்டு 2% – 3% பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என ஐ.எம்.எப் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன கணித்துள்ளதாகவும், 2025 ஆம் ஆண்டில் இதனை 5% ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்- PMD

தற்போது நடைமுறையில் உள்ள ஊழல் ஒழிப்பு சட்டம் போன்ற சட்டங்களை அமுல்படுத்தும் போது அரசியல் அல்லது வேறு எந்த அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட மாட்டாது என்பது நாட்டின் முன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்- PMD

அடுத்த மூன்று நான்கு போகங்களில் உலர் வலயத்தில் விவசாய நிலங்களின் உற்பத்தித் திறனை இரட்டிப்பாக்க இம்மாதம் முதல் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு பிரதேச செயலகத்தைத் தெரிவு செய்து விவசாயப் பயிர்களின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான விசேட வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும், அதன் ஊடாக ஈர வலயத்தில் உள்ள காணிகளை ஏனைய வர்த்தகப் பயிர்களுக்கு பயன்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார் – PMD

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் கையகப்படுத்தப்பட்ட பல இலட்சம் ஏக்கர் காணிகளிலிருந்து உயர்ந்தபட்ச உற்பத்தியைப் பெறுவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் வீணாகும் காணிகளை அந்நிய செலாவணி மூலங்களாக மாற்றி பொருளாதார அபிவிருத்தியை வலுப்படுத்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்- PMD

பாரியளவில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வேலைத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் எளிமையான செயற்பாட்டின் ஊடாக முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதுடன் ஊழல் மோசடிக்கான வாய்ப்புகளைத் தடுக்க முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்- PMD

சர்வதேச தரத்தின் அடிப்படையில் தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ஆணைக்குழுவின் ஊடாக பரந்தளவிலான முதலீட்டுச் சட்டங்கள் மற்றும் வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார் – PMD

விரைவான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதைப் போன்று, ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவினரை பாதுகாக்கக் கூடிய வகையில், கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் ஆழமான நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்- PMD

உயர்தரப் பரீட்சையில் சித்தி பெறும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் உயர் கல்வியை வழங்க புதிய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் இருப்பதைப் போன்று,சாதாரண மற்றும் உயர்தரத்தில் சித்தியடையாத சகல பிள்ளைகளுக்கும் தொழிற்கல்வி பெறும் வாய்ப்பும் வழங்கும் வகையில் தொழிற்கல்லூரிகள் நிறுவப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார் – PMD

ஒரு தீவு நாடாக எமது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து பாதுகாப்பு வலையமைப்புகளும் நவீனமயமாக்கப்படும் என்றும் புலனாய்வு அமைப்புகள், பாதுகாப்பு உபகரணங்கள், பயிற்சி முறைகள், படைகள், தொழில்நுட்ப சாதனங்கள், மூலோபாய நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து துறைகளும் நவீனமயமாக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்- PMD

இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் விரிவான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தமாக விரிவுபடுத்தப்படும் என்றும், சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் சீனா, இந்தோனேசியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடனும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ள எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்- PMD

பிராந்திய விரிவான பொருளாதார பங்காளித்துவத்தில் (R-SEP) இணையும் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக விருப்பங்களின் பொதுவான முறையில் தொடர்புகள் ஏற்படுத்திக் கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 09 ஆவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை ஆரம்பித்துவைத்து ஆற்றிய கொள்கை விளக்க உரையில் தெரிவித்தார். – PMD

மேல்மாகாணத்திற்கு வெளியே யாழ்ப்பாணம், திருகோணமலை, பிங்கிரிய, ஹம்பாந்தோட்டை, கண்டி போன்ற நகரங்களுக்கு பொருளாதாரத்தை விஸ்தரித்து, பொருளாதார சக்தியை விரிவுபடுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், ஏற்கனவே இந்தியாவுடன் திருகோணமலையை பொருளாதார கேந்திர நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்- PMD

கொழும்பு துறைமுக நகரை விசேட நிதி வலயமாக மாற்றுவதாகவும், அந்த வலயத்தில் வெளிநாட்டு நிதி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்குத் தேவையான சட்ட விதிமுறைகள் நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார் – PMD

பொருளாதார நெருக்கடிக்கு அரசியல் தீர்வுகள் இல்லை என்றும், பொருளாதார மற்றும் விஞ்ஞான ரீதியான தீர்வுகளே உள்ளன என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்- PMD

நவீன மற்றும் வலுவான பொருளாதாரத்தை நோக்கி மாறும் வகையில் பொருளாதார மாற்றச் சட்டம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்- PMD

அரசியல் அபிலாஷைகளை மனதில் வைத்துக்கொண்டு, தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்குவதன் மூலமோ அல்லது அழுது கண்ணீர் வடிப்பதனாலோ, நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல முடியாது என்றும், எதிர்கால இளைஞர்களுக்காக நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதன் மூலமே நாடு முன்நோக்கி நகர்த்த முடியும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார் – PMD

நாட்டைக் கட்டியெழுப்பும் கனவை நனவாக்க சிறந்த மாற்று வழிகள் இருந்தால் முன்வையுங்கள் என்றும், அது தொடர்பில் கலந்துரையாட தாம் எப்போதும் தயாராக இருப்பதாகவும், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகளை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுக்கத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்- PMD

தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும் நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , பொதுஜன பெரமுன ஒன்றிணைத்தது போன்று ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி, நாட்டுக்கான பொதுவான பயணத்தில் இணையுமாறு அனைத்து தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுக்கும் 9ஆவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து ஆற்றிய கொள்கை விளக்க உரையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்தார். PMD

9ஆவது பாராளுமன்றத்தின் 5ஆவது கூட்டத்தொடர் நாளை ஜனாதிபதி தலைமையில்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT