Thursday, May 9, 2024
Home » 10,000 பேருக்கு நிரந்தர காணி உறுதிப் பத்திரம்
காணி பிரச்சினைகள் தீர்வுக்கு 'உரித்து' திட்டம்

10,000 பேருக்கு நிரந்தர காணி உறுதிப் பத்திரம்

05 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நிகழ்வு

by Gayan Abeykoon
February 1, 2024 9:36 am 0 comment

முறையான காணி உரிமையின்றி நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருந்த இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கும் “உரித்து” வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு  எதிர்வரும் 05ஆம் திகதி திங்கட்கிழமை  தம்புள்ளையில் நடைபெறவுள்ளதாக

சுற்றுலா, காணி மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

‘ரன் பூமி’, ‘ஜெய பூமி’ மற்றும் ‘சுவர்ண பூமி’ போன்ற காணி அனுமதி பத்திரங்களை கொண்டிருந்த 10,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு நிரந்தர காணி உறுதி வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டுக்குள் ஒரு மில்லியன் இளம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதற்கான வேலைத்திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.  இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், இரண்டு வருடங்களுக்கு முன்பு நாடு இருந்த நிலைமையை நினைத்துப் பார்க்க வேண்டும்.  கடுமையான நோய்ப் பாதிப்புக்கு உள்ளான நோயாளியை போல் இருந்தது.  அந்த நேரத்தில் நோயாளியின் விருப்பத்துக்கு சிகிச்சை அளிக்கவே பலரும் முன்வந்தனர். ஆனால் ஒருவர்  மட்டுமே நோய்க்கு பொறுத்தமான மருந்துகளை வழங்கினார்.  நோயாளிக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுவதை நோயாளி விரும்பாமல் இருக்கலாம்.  ஆனால் நோய் குணமாகிவிடும்.  நோயாளிக்கு தகுந்த சிகிச்சை வழங்கியதாலேயே நாடு சுமுக நிலைமைக்கு வந்துள்ளது.

நாம் யாருக்கும் சவால் விடுப்பதற்காக பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளவில்லை. நாட்டின் வெற்றிக்காகவே பொறுப்புக்களை ஏற்றோம். அந்த சவாலை முடிந்தளவு வெற்றி கொள்வோம்.  கடந்த காலத்தில் சுற்றுலா கண்டிருந்த சரிவை சகலரும் அறிவர்.  அதன் இன்றைய நிலைமை தொடர்பிலும் அனைவரும் அறிவோம்.  சுற்றுலாத்துறை சடுதியாக அபிவிருத்தி கண்டுள்ளது.

தற்பொழுது கிரிக்கெட்  தடையும் நீங்கியுள்ளது.  பல வருடங்களுக்கு பின்னர் மேற்கிந்திய அணி அவுஸ்திரேலியாவை தோற்கடித்துள்ளது.  அதுபோன்றதொரு எதிர்கால வெற்றியை நோக்கிச் செல்வதே எமது இலக்காகும்.

சந்தர்ப்பவாதிகள் சவால்களை ஏற்காமல் தப்பியோடுவர்.  ஆனால் நாடு அனைத்து துறைகளிலும்  மோசமான  வீழ்ச்சியைக் கண்டிருந்தபோது, ​​ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை மீளக் கட்டியெழுப்பும் சவாலை ஏற்றுக்கொண்டார். அன்று அந்தச் சவாலை ஏற்காமல் இருந்திருந்தால் இன்று இந்த நாடு மனிதர்கள் இல்லாத பாலைவனமாக இருந்திருக்கும்.

காணி, காணி உறுதிப்பத்திரம், வீடு உள்ளிட்டவை கனவாக இருக்கும் மக்களின் பிரச்சினைகளுக்கு  முடிவு கட்டுவதே தற்போது எமக்கு உள்ள சவாலாகும். எனவே, அதற்காக விசேட திட்டமாக “உரித்து” திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, அதனால் இலங்கையின் இரண்டு மில்லியன் மக்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்த்திருக்கிறோம். அதன்படி, ‘ரன் பூமி’, ‘ஜெய பூமி’ மற்றும் ‘சுவர்ண பூமி’ போன்ற அனுமதி பத்திரங்களை கொண்டிருக்கும் 20 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நிரந்தர  காணி உறுதியை வழங்கவுள்ளோம்.

அதற்கான ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 05 ஆம் திகதி தம்புள்ளையில் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் 10,000 காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன. அதன் பின்னர் நாட்டின் 14,000 கிராம சேவகர் பிரிவுகளை உள்வாங்கி இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அன்று ‘கொவி ஜனபத’ வேலைத்திட்டம் பல இட்சம் பேருடைய வாழ்க்கையை முன்னேற்றியது. மகாவலி வேலைத்திட்டம் பலரது வாழ்வில் ஔியை ஏற்படுத்தியது.  இன்று “உரித்து” வேலைத்திட்டத்தின் ஊடாக இலட்சக் கணக்கிலானவர்களின் வாழ்வு மேம்படும். சுதந்திரத்தின் பின்னர் இவ்வாறானதொரு திட்டம் முதல் முறையாக முன்னெடுக்கப்படுகிறது. அதனால் இதனை வரலாற்று நிகழ்வாக கருத வேண்டும். வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்படும்.

அது மட்டுமன்றி நாட்டின் இளம் சமூகத்தினரை தொழில் முயற்சியாளர்களாக மாற்றும் வேலைத்திட்டம் ஒன்றும் திட்டமிடப்பட்டுள்ளது.  அதன்கீழ் ஒரு மில்லியன் தொழில் முயற்சியாளர்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.  அதனால் இலங்கை மக்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வேலைத்திட்டங்கள் அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்டு  வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT