Tuesday, April 30, 2024
Home » கல்முனை நகர லயன்ஸ் கழகத்தினால் கலாநிதி கோபாலரத்தினம் கௌரவிப்பு

கல்முனை நகர லயன்ஸ் கழகத்தினால் கலாநிதி கோபாலரத்தினம் கௌரவிப்பு

by mahesh
January 31, 2024 3:08 pm 0 comment

கல்முனை நகர லயன்ஸ் கழகத்தால் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி மூ. கோபாலரெத்தினம் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். இந்நிகழ்வு கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் தலைவர் பொறியியலாளர் லயன் எம். சுதர்சன் தலைமையில் அம்பாறை வீதி அபிவிருத்தித் திணைக்கள சுற்றுலா விடுதியில் அண்மையில் நடைபெற்றது.

வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர் லயன் பரமலிங்கம் இராசமோகன் ஏற்பாட்டில் இப்பாராட்டு விழா நடைபெற்றது. கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, காணி அபிவிருத்தி திறன் விருத்தி, மகளிர் அபிவிருத்தி நீர் விநியோகத் துறை அமைச்சின் செயலாளராக பணியாற்றிவரும் கலாநிதி மூ.கோபாலரத்தினம்(மூகோ) இதன் போது பொன்னாடை போர்த்தி பாராட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இலங்கை நிருவாக சேவை விசேட தர அதிகாரியான இவர், ஏற்கனவே கிழக்கு மாகாண சபையின் பொதுச் சேவை ஆணைக்குழு மற்றும் பேரவைச் செயலாளராக கடமை புரிந்துவந்தார். அதற்கு முன்னர் திறைசேரி முகாமைத்துவ திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக சேவையாற்றியிருந்தார்.

மட்டக்களப்பு செட்டிபாளையத்தைப் பிறப்பிடமாக கொண்ட இவர், மூத்ததம்பி_ செல்லம்மா தம்பதியினரின் புதல்வராவார். தற்போது கல்முனையில் வசித்து வருகிறார்.

1995 ஆம் ஆண்டு இலங்கை நிருவாக சேவை அதிகாரியாக தெரிவு செய்யப்பட்ட இவர், தனது ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர்தரம் வரை செட்டிபாளையம் மகாவித்தியாலயத்தில் கற்றார். கலைமாணி பட்டத்தை பேராதனை பல்கலைக்கழகத்திலும், பொதுநிருவாக துறையில் முதுமாணி பட்டத்தை இந்திய பல்கலைக்கழகத்திலும் பெற்றார்.

இவர், தம்பலகாமம், ஏறாவூர் நகர் ,பட்டிப்பளை, கல்முனை, சம்மாந்துறை ஆகிய பிரதேச செயலகங்களில் உதவிப் பிரதேச செயலாளராகவும், குச்சவெளி, நாவிதன்வெளி,திருக்கோயில் மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராகவும் பணியாற்றி மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளார்.

கல்முனை லயன்ஸ் கழக தலைவராகவிருந்த லயன் கோபாலரெத்தினம், சமூகசேவைகளில் நாட்டமுள்ளவர். சிறந்த கலைஞரான இவர் மேடைகளில் பழைய பாடல்களைப் பாடி பாராட்டுப் பெற்றுள்ளார்.

வி.ரி.சகாதேவராஜா (காரைதீவு குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT