Thursday, May 9, 2024
Home » இனப்படுகொலை நடவடிக்கையை தடுப்பதற்கு இஸ்ரேலுக்கு உத்தரவு

இனப்படுகொலை நடவடிக்கையை தடுப்பதற்கு இஸ்ரேலுக்கு உத்தரவு

- மனிதாபிமான நிலையை மேம்படுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு

by mahesh
January 27, 2024 8:48 am 0 comment

– இது பற்றி ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க பணிப்பு
– இனப்படுகொலையில் ஈடுபட்டதாக தீர்ப்பளிக்கவில்லை
– போர் நிறுத்த உத்தரவும் வழங்கப்படவில்லை

காசாவில் ஹமாஸுக்கு எதிராக போரிடும் இஸ்ரேல் இனப்படுகொலை நடவடிக்கைகளை தவிர்ப்பதற்கு தனது அதிகாரத்திற்கு உட்பட்டு அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் நேற்று (26) உத்தரவிட்டது.

இஸ்ரேல் தனது படைகள் இனப்படுகொலையில் ஈடுபடாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் காசாவில் மனிதாபிமான நிலைமையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.

இது தொடர்கில் ஒரு மாதத்திற்குள் இஸ்ரேலுக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனினும் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டதாக தென்னாபிரிக்கா தொடுத்த பிரதான வழக்கு தொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பளிக்கவில்லை. இதில் 26,000க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையை உடன் நிறுத்தும்படியான தென்னாபிரிக்காவின் கோரிக்கையின்படி போர் நிறுத்தம் ஒன்றுக்கான உத்தரவை பிறப்பிப்பதை ஐ.நா நீதிமன்றம் தவிர்த்துள்ளது.

இந்த வழக்கை முற்றாக நிராகரிக்குமாறு நீதிமன்றத்தை கோரி இருந்த இஸ்ரேல், சர்வதேச சட்டத்தை மதிப்பதாகவும், தம்மை தற்காத்துக்கொள்ளும் உரிமை இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது.

முன்னதாக தென்னாபிரிக்கா தொடுத்த இந்த வழக்கு தொடர்பில் இந்த மாத ஆரம்பத்தில் இரு நாள் விவாதம் நடந்தது. எனினும் இனப்படுகொலையில் ஈடுபட்டதாக கூறப்படும் இஸ்ரேல் மீதான பிரதான குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மேன்முறையீடு இன்றி செயற்படுத்துவதற்கு கடப்பாடு இருந்தபோதும், அதனை செயற்படுத்துவதற்கு நீதிமன்றத்திடம் வழிமுறைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT