Thursday, May 9, 2024
Home » பல இலட்சம் ரூபாய் பெறுமதியான சங்குகளுடன் மூவர் கைது

பல இலட்சம் ரூபாய் பெறுமதியான சங்குகளுடன் மூவர் கைது

by Prashahini
January 16, 2024 3:28 pm 0 comment

மன்னார் கடற்படைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினருடன் இணைந்து எருக்கலம் பிட்டி பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது அனுமதி அளிக்கப்பட்ட அளவை விட அதிக அளவிலான சங்குகளை உடைமையில் வைத்திருந்த பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (15) மதியம் கடற்படைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மன்னார் பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மன்னார் மாவட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் எல்.வை.ஏ.எஸ். சந்திரபால ஆலோசனைக்கு அமைய பொலிஸ் அத்தியட்சகர் ஹரத்தின் நெறிப்படுத்தலில் மன்னார் குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது எருக்கலம் பிட்டி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அனுமதி வழங்கப்பட்ட அளவை விட அதிக அளவில் சங்குகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததுடன் அனுமதி வழங்கப்பட்ட அளவை விட சிறிய அளவிலான சங்குளை உடைமையில் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த களஞ்சியசாலையில் 20,000 சங்குகளே களஞ்சியப்படுத்த அனுமதி காணப்பட்ட நிலையில் 30,000 இற்கும் மேற்பட்ட சங்குகளும் வளர்ச்சி நிலை அடையாத சங்குகளும் களஞ்சியப்படுத்தியதன் அடிப்படையில் வீட்டின் உரிமையாளர் உட்பட பணியாளர்கள் இருவர் உள்ளடங்களாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளர்.

குறித்த களஞ்சியசாலையில் இருந்து 14,143 சங்குகள், 16 கிலோ கிராம் காய்ந்த அட்டைகள், 700 உயிர் அட்டைகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்காக சான்று பொருட்களை மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

மேலதிக விசாரணையின் பின்னர் சங்குகள், அட்டைகள் உட்பட சந்தேகநபர்கள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT