Thursday, May 9, 2024
Home » சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சந்திப்பு

by Prashahini
January 15, 2024 10:48 am 0 comment

நாட்டை கட்டியெழுப்ப தற்போதைய பொருளாதார கொள்கைகளை பின்பற்றுவது அவசியமானதாகும் என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் (IMF) தெரிவித்துள்ளனர்.

நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு நேற்று (14) வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ சந்தித்து கலந்துரையாடினர். அதன் போதே என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அவ்வாறு தெரிவித்தனர்.

குறித்த சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் குழு, வர்த்தகப் பிரதிநிதிகள், சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

சர்வதேச நாணய நிதியத்தை (IMF) பிரதிநிதித்துவப்படுத்தி, சிரேஷ்ட பிரதம அதிகாரி தலைமையில் நிரந்தர வதிவிட பிரதிநிதி, சிரேஷ்ட பொருளியலாளர், சிரேஷ்ட நிதித்துறைசார் நிபுணர், பொருளியலாளர், உள்ளூர் பொருளியலாளர் உள்ளிட்ட குழுவினர் கலந்துக்கொண்டனர் .

சந்திப்பில் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், காலநிலை மாற்றம் , வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடுகளை வழங்குவதில் காணப்படும் சிக்கல்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆளுநர், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு தெளிவுப்படுத்தினார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் , கொவிட் தொற்றுக்கு பின்னரான நிலை, பொருளாதார நெருக்கடி , வரி அதிகரிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் குழு இதன்போது கருத்துக்களை முன்வைத்தனர்.

இந்த விடயங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வின்படி நாட்டில் ஊழல் ஒழிப்பு சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், விநியோக கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும், நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் குழு ஆலோசனைகளை முன்வைத்தனர்.

அதேவேளை இலங்கையில் வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதால் மக்கள் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளமையை தாம் அறிந்துக்கொண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட பிரதம அதிகாரி பீற்றர் ப்ரூர் (PETER BREUER) தெரிவித்தார்.

அத்துடன், கடந்தகால பொருளாதாரக் கொள்கைகள் காரணமாகவே நாடு இவ்வாறான நிலையை அடைந்துள்ளதாகவும், நிலைமையை மாற்றியமைக்க குறிப்பிட்ட காலப்பகுதிக்கு இறுக்கமான கொள்கைகளை பின்பற்றுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கடந்த வருடத்தின் இறுதியில் நல்ல சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த மாற்றங்கள் தொடர வேண்டும் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட பிரதம அதிகாரி தெரிவித்தார்.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT