Sunday, May 5, 2024
Home » தென்னாபிரிக்க இளையோர் அணியின் தலைவர் நீக்கம்
இஸ்ரேல் படைக்கு ஆதரவு:

தென்னாபிரிக்க இளையோர் அணியின் தலைவர் நீக்கம்

by damith
January 15, 2024 10:56 am 0 comment

காசா போரில் இஸ்ரேலிய படையினருக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட தென்னாபிரிக்க 19 வயதுக்கு உட்பட்ட அணியின் தலைவர் டேவிட் டீகர் பாதுகாப்பை காரணம் காட்டி தலைமை பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

எனினும் இது யூத எதிர்ப்பு செயல் என யூதத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். யூதரான டீகர் கடந்த ஒக்டோபரில் இஸ்ரேலிய படையினரை பாராட்டி வெளியிட்ட கருத்து கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்நிலையில் எதிர்வரும் 19ஆம் திகதி தென்னாபிரிக்காவில் ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறைகள் வெடிக்கும் அச்சுறுத்தல் காரணமாகவே டீகர் நீக்கப்பட்டார் என்று தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.

அனத்து தரப்புகளின் நலனை கருதியே டீகர் தலைமை பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார் என்று அது கூறியது. எனினும் அவர் தொடர்ந்தும் தென்னாபிரிக்க இளையோர் அணியில் இடம்பெற்றிருப்பதோடு புதிய அணித் தலைவர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

முன்னதாக டீகர் வெளியிட்ட கருத்தை அடுத்து பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான கூட்டணி தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையிடம் முறைப்பாடு செய்ததை அடுத்து விசாரணைகள் நடத்தப்பட்டு அவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்று அறிவிக்கப்பட்டது.

இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை வழக்கை தொடுத்த தென்னாபிரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவு காசா போரை அடுத்து விரிசல் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் பெப்ரவரி 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் தென்னாபிரிக்க இளையோர் அணி வரும் வெள்ளிக்கிழமை மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ளவுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT