Saturday, April 27, 2024
Home » இலங்கை முஸ்லிம்களின் கல்வி மறுமலர்ச்சியின் ஓர் அச்சாணி மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி

இலங்கை முஸ்லிம்களின் கல்வி மறுமலர்ச்சியின் ஓர் அச்சாணி மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி

தென்மாகாண ராபிததுன் நழீமிய்யீன்களினால் நடத்தப்படும் கலாநிதி சுக்ரி நினைவேந்தல் நிகழ்வு மற்றும் நூல் அறிமுக விழா இன்று மாத்தறையில்

by damith
January 15, 2024 10:30 am 0 comment

பிறப்பும் கல்வி வாழ்வும்

மாத்தறை நகரில் 1940 ஜுன் 24இல் பிறந்தார். 15 வயது கூட பூர்த்தியாகாத நிலையில் மாணவர் சுக்ரி எழுத்துலகிற்குப் பிரவேசிக்கின்றார். இவரது ஆக்கங்கள் தினகரன் பத்திரிகையில் “எங்கள் கழகம்” “சிறுவர் அரங்கம்” போன்ற பக்கங்களில் ஆரம்பமாக வெளிவருகின்றன. மர்ஹும் எம்.எஸ். எம். ஹரீஸ் ஆசிரியர் அல்ஹம்ராவில் சிறந்த வழிகாட்டியாக இருந்தார். காலி முஸ்லிம் கலாசார சங்கம் நடாத்தி வந்த அகில இலங்கை மீலாத் பேச்சுப் போட்டியில் பங்குகொண்டு முதலாமிடத்தை பெற்றுக்கொள்ளவும் வழிகாட்டியாக இருந்துள்ளார். “இணையற்ற இஸ்லாமிய யுத்த தர்மம்” எனும் சுக்ரி அவர்களின் முதலாவது வானொலி நிகழ்ச்சியாக நாடகம் இடம்பெற்றது. தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும் மணிவிளக்கு சஞ்சிகையின் ஆசிரியராக இருந்த அ.க. அப்துஸ் ஸமத் இலங்கை வந்த போது அவருக்கான வரவேற்பு வைபவத்தில் வரவேற்புரை நிகழ்த்துவதற்காக ஹரீஸ் அவர்களே அழைத்துச் சென்றனர். இவரை வழிநடாத்துவதில் ஸாஹிரா அதிபர் அறிஞர் ஏ.எம்.ஏ அஸீஸ் அவர்களின் பங்களிப்பும் முக்கியம் வாய்ந்தது. இங்கு அல்லாமா இக்பால் அவர்களின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டதால் இவ்வாழ்வு உதவியது.

பல்கலைக் கழக வாழ்வில் இலக்கியத்துறையில் தன்னை வளர்த்துக் கொள்ள பேராசிரியர் கைலாசபதி அவர்களின் வழிகாட்டல் பெரிதும் உதவியது. இவர் இக்காலத்திலேயே இலக்கியம் தொடர்பாகவும் ஈடுபாடு காட்டினார். இவர் எழுதிய இலக்கிய ஆக்கங்களுள் மூன்று சிறுகதைகளையும் இயற்றினார். இவர் எழுதிய முதலாவது சிறுகதை “தலாக்” என்பதாகும். இதனை இவர் பல்கலைக் கழகம் செல்ல முன்னர் எழுதினார். இதனை கொழும்பு முஸ்லிம் எழுத்தாளர் சங்கம் 1958இல் சிறுகதைத் தொகுப்பில் வெளியிட்டது. இவர் பல்கலைக்கழகத்தில் பட்டதாரி மாணவராக இருந்தபோது “வாரிசு” “கழுவாய்” ஆகிய இரு சிறுகதைகளையும் வெளியிட்டார். 24.01.1973இல் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள எடின்பரோ பல்கலைக்கழகத்திற்குச் சென்று கலாநிதிப் பட்டப்பின்படிப்பைப் பூர்த்தி செய்தார்.

ஆய்வுப்பணிகளில் இலங்ககை முஸ்லிம்களின்

வரலாறு எனும் நூல்

பேருவல ஜாமியா கலாபீடத்தின் ஆய்வு நிறுவனத்திற்கூடாக இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைத் தொகுத்தார்.உள்நாட்டு, வெளிநாட்டு முஸ்லிம், முஸ்லிம் அல்லாத வரலாற்றுத்துறை அறிஞர்களை ஒன்றுகூட்டி சர்வதேச தரத்திலான ஒரு கருத்தரங்கை நடாத்தி அதன் நிறைவாக இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பற்றி ஒருபெருநூலை தொகுத்தளிக்கக் காரணமாக அமைந்தது. இன்று இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பற்றிப் பேசும் நூல்களில் கலாநிதி சுக்ரி அவர்கள் தொகுத்தளித்த இதுவே முதற்தர ஆதாரங்களைக் கொண்ட சிறந்த நூலாக விளங்குகின்றது. இத்தொகுப்பு 1986 இல் வெளியிடப்பட்டது.

சர்வதேச ஆய்வுச் சஞ்சிகைகளுக்கான ஆக்கங்கள்.

இவர் ஆங்கிலத்தில் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் எழுதியுள்ள சர்வதேச தரம்வாய்ந்த சஞ்சிகைகளாகப் பின்வரும் சஞ்சிகைகளைக் குறிப்பிட முடியும்.

01. The Muslim World League Journal

02. Islamic Studies

03. Journal of the Archaeological Survey Department

04. An Nahdah

05. Hamdard Islamicus 241

ஆய்வாளராகவும் பன்மொழி புலமை கொண்டவராகவும் நடுநிலை நின்று பிரச்சினைகளை அணுகுபவராகவும் இருப்பதால் முஸ்லிம் சமூகத்தால் மட்டுமன்றி இலங்கையர் சமூகத்தில் அவர் பிரபல்யம் பெற்றிருந்தார். இலங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ள அரபுமொழி கல்வெட்டுக்கள் பற்றிய ஆய்வுகளை அவர் மேற்கொண்டு வருவதும் இலங்கையின் புதைபொருள் ஆய்வாளர் சங்கத்தின் அவர் ஓர் உறுப்பினராக இருந்து செயற்படுவதும் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை விஞ்ஞான ரீதியாக நிறுவப் பெரும் துணையாக அமைந்தது.

கலாநிதி சுக்ரி அவர்களின் கல்விப் பணிகளை புது நோக்கில் சமூகப் பார்வையில் அணுக வேண்டியுள்ளது. இவர் கொழும்பு, களனி, பேராதனை பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராகப் பணியாற்றிய போதிலும் அவருடைய வகுப்பறை கற்பித்தலுக்கு வெளியேயும் முறைசாரா கல்வி மூலம் சமூகத்திற்கு கற்பித்துக் கொண்டிருந்தார். பல்கலைக் கழகத்தில் பயிலக்கூடிய காலத்திலேயே அவரது ஆக்கங்கள் எமது நாட்டுப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் இடம் பெற்றுவந்தன. அவரையும் ஆசிரியர் குழாத்தையும் இணைத்துக்கொண்டு “ அல்மதீனா” என்ற சஞ்சிகை அவரது ஆக்கங்களுக்கு இடமளித்தது. பிரசித்த பாடசாலைகள் ஆசிரிய கல்லூரிகள் பல்கலைக் கழகங்கள் வெளியிடும் சஞ்சிகைகளிலெல்லாம் அவரது கட்டுரைகள் இடம்பெற்று வந்தன. அதேவேளை வானொலி உரைகளும் பொதுச் சொற்பொழிவுகளும் சமூகத்துக்கு அறிவூட்டிக் கொண்டிருந்தன.

இஸ்லாமிய இளைஞர்களை நெறிப்படுத்தல்

ஜாமிஆ நழீமிய்யா கலாபீடத்தின் பணிப்பாளராகப் பணியாற்றத் தொடங்கியபோது அவரது கல்விச் சேவை இன்னும் விரிவடைந்தது. குறிப்பாகப் படித்த மத்திய தரவகுப்பினரை மையப்படுத்தி அவர் தனது கல்விச் செயற்பாட்டை விரிவுபடுத்தினார். அதுமுறைசாராக் கல்விப்பணியாகவே அமைந்தது. வகுப்பறையில் குறிப்பிட்ட பாடங்களைக் கற்பிக்கின்ற ஆசிரியர்களுள் ஒருவராகவன்றி சமூகம் என்ற மாணவர் தொகுதிக்கு வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்பிப்பதில் அவர் ஈடுபாடுகொண்டார். அவரது பகிரங்கச் சொற்பொழிகள், வானொலி உரைகள் மாநாட்டுப் பேருரைகள் தொடக்கவுரைகள் ஆய்வுரைகள் விரிவுரைகள் ஆய்வுக் கட்டுரைகள் நூல்கள் யாவும் இந்தப்பணியை நிறைவேற்றுவனவாகவே உள்ளன.

அவரது கல்விப் பணிகள் இளைஞர்களையும் படித்த மத்தியதர வகுப்பினரையும் மையப்படுத்தி செயற்படுவதை அவதானிக்கலாம். பல்கலைக் கழகத்துக்கு வரும் பட்டதாரிகள் மூலம் கற்றுக்கொண்ட ஒருபாடமாகவும் இதனைக் கருதலாம்.

நவீன உலகாயதவாதிகள் தமது பிரசார சாதனங்களான நூல்கள் சஞ்சிகைகள் வானொலி தொலைக்காட்சி ஆகிய ஆயுதங்களைக்கொண்டு நடத்துகின்ற இலட்சியவாத சிந்தனைப் படையெடுப்புக்களுக்கு எமது இளைஞர் சமுதாயம் பலியாகி ஈமான் இஸ்லாம் என்பன சூறையாடப்பட்டுள்ளன. இப்பயங்கரமான காலகட்டத்தில் இளைஞர்களை இஸ்லாத்தின் பால் மீட்கும்பணி அவசரமாகவும் அவசியமாகவும் தேவைப்படுகிறது. இதுவே இன்றைய ஜிஹாத் ஆகும். இஸ்லாத்தின் உன்னத உயர்ந்த கருத்துக்களை நவீன தத்துவங்களோடு ஒப்புநோக்கி விளக்கி இஸ்லாமிய போதனைகளை வழங்கும் நூல்களையும் சஞ்சிகைகளையும் வெளியிடுவதன் மூலமே இத்தகைய பயங்கர சவாலை சமாளிக்க முடியமென்பது எமது ஆழ்ந்த நம்பிக்கையாகும் என்று மௌலானா அபுல் ஹஸன் அலி நத்வி அவர்களின் “ காலத்தின் அறைகூவலும் நவயுகத்தின் சவாலும்” என்ற நூலின் அறிமுகத்தில் எழுதியுள்ள கலாநிதி சுக்ரி அவர்கள், அவரது ஆக்கங்களை இந்தப் பாணியிலேயே வடிவமைத்துள்ளார். இதற்கு இஸ்லாமும் மனித உரிமைகளும்(1995) மதமும் அறிவியலும்(1994) இஸ்லாமிய வாழ்வியல் கோட்பாடுகள்(1999) முதலிய நூல்களையும் இஸ்லாமிய சிந்தனை இதழில் தொடராக எழுதி வெளியிட்ட ஆய்வுக்கட்டுரைகளையும் ஆதாரமாகக் குறித்துக் காட்டலாம்.

அறிவு ஆய்வுப் பணிகளுள் இஸ்லாமிய சிந்தனை அரை நூற்றாண்டு காலம் இடைவிடாது தொடர்ச்சியாக தான் பிரதம ஆசிரியராக இருந்து காலாண்டு சஞ்சிகையான இஸ்லாமிய சிந்தனையை வெளியிட்டு வந்தமை அவரது சாதனையையே எடுத்துக் காட்டுகின்றது.

இஸ்லாமிய சிந்தனைகளை புத்திஜீவிகளுக்கு மத்தியில் உருவாக்குவதும், பரப்புவதுமென்ற அவரது இலக்கை மையப்படுத்தியே அவரைப் பிரதம ஆசிரியராகக் கொண்ட “இஸ்லாமிய சிந்தனை” என்ற ஜாமிஆ நழிமிய்யாவின் ஆய்வுச் சஞ்சிகை வெளியாகிக் கொண்டிருக்கிறது. முஸ்லிம்கள் வாழ்வையும் அதனோடு தொடர்புடைய விடயங்களையும் இஸ்லாமிய சிந்தனை உளப்பண்பு கண்ணோட்டம் என்பவற்றிலிருந்து விடுபட்டு அதற்குப் புறம்பான நிலைகளில் அணுக முற்படுகின்றனர். பெரும்பாலானோர் பெயரளவில் முஸ்லிம்களாகவும் இஸ்லாத்திற்கு முரணான வகையில் செயற்படுபவர்களாகவும் காணப்படுகின்றனர். இந்நிலை முஸ்லிம்களின் கலாசார தனித்துவத்தின் சீர்குலைவுக்கு அடிப்படைக்காரணமாக அமைவதில் வியப்பில்லை. முஸ்லிம் சமுதாயத்தின் இந்த அவசரத்தேவையை பூர்த்தி செய்யும் இலட்சியத்தை முன்வைத்து “இஸ்லாமிய சிந்தனை” மலர்ந்துள்ளது241 என்று இஸ்லாமிய சிந்தனையின் முதலாவது இதழில் குறிப்பிட்டுள்ள அவர், அதன் தாக்கத்தை விளங்கிக் கொண்ட பின்னர் நூறாவது இதழில் “இது சிந்திக்கும் வர்க்கத்தினரை நோக்கமாகக் கொண்டு வெளியிடப்படுகிறது. எனவே அதன் வாசகர் வட்டம் குறுகியது என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உண்மையாகும். இந்த குறுகிய வட்டம் சமூகத்தில் மிகக் கணிசமாக சிந்தனைச் செல்வாக்கைச் செலுத்தும் ஆற்றல் படைத்தது. மக்களின் அறிவு சிந்தனை ரசனைக்கேற்ப இஸ்லாமிய சிந்தனையின் தரத்தைப் பேணுவதைத்தவிர்த்து இஸ்லாமிய சிந்தனையின் தரத்திற்கு மக்களின் அறிவையும் சிந்தனையையும் உயர்த்துவதே எமது நோக்கம் என்று குறிப்பிடுகின்றார் என்ற இமாம் கஸ்ஸாலியின் மேற்கோளை எடுத்துக் காட்டுகின்றார்.

இந்த நோக்கத்தை அடைவதற்காக முஸ்லிம் சமூகத்தில் பரந்த அளவிலான புத்திஜீவிகள் உருவாக வேண்டுமென அவர் விரும்பினார். இந்த யுகம் முஸ்லிம் உம்மத்தை நோக்கி விடுக்கும் அறைகூவல்களை சமாளிக்கும் ஆற்றல் பெற்ற கல்விமான்களும் அறிஞர்களும் தேவைப்படுகிறார்கள். பல்லின சமூகங்களைக் கொண்ட இலங்கை போன்ற ஒரு நாட்டில் இஸ்லாமிய சரீஆவை முஸ்லிம் சமூகத்தில் செயல்படுத்துவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைச் சமாளிக்க “பிக்ஹுல் அகல்லியா” போன்ற துறைகளில் அறிவும் ஆர்வமும் படைத்த அறிஞர்கள் அவசியப்படுகிறார்கள். பல்வேறு மதங்கள் பற்றிய அறிவையும் விளக்கத்தையும் பெற்று மதங்கள் பற்றிய உரையாடலில் பங்குபற்றி இஸ்லாத்தின் கருத்தை எடுத்துக்கூறும் ஆற்றல் படைத்த அறிஞர்கள் தேவைப்படுகிறார்கள். இந்த நாட்டில் எமது இருப்பையும் வரலாற்றுப் பாரம்பரியத்தையும் ஆதார பூர்வமாக நிறுவும் ஆற்றல் படைத்த வரலாற்று அறிஞர்கள் தேவைப்படுகிறார்கள் எனவும் முஸ்லிம் சமூகம் கண்டு கொள்ள வேண்டிய அறிவுப்பணிகைள அடையாளப் படுத்தினார்.

சீர்திருத்தப்பட வேண்டிய கருத்துக்கள் வாழ்வு

இஸ்லாம் மனித வாழ்வை லோகாயதம் ஆன்மீகமென்று இரு கூறாகப்பிரித்து நோக்கவில்லை. மதம் சார்ந்தவை, மதச்சார்பற்றவை, என்ற பாகுபாடும் இஸ்லாத்துக்கு முற்றிலும் அன்னியமானது. மனிதனின் தனிப்பட்ட வாழ்வு, குடும்பம், பொருளாதாரம், அரசியல், சமூக உறவு, கலை இலக்கிய முயற்சிகள் அனைத்தையும் பொறுத்தவரை அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் போதனைகள் வரையறைகள் பிரமாணங்களுக்குக் கட்டுப்பட்டு வாழும் ஒரு கட்டுக்கோப்பை இஸ்லாம் ஏற்படுத்தியுள்ளது. புரந்து விரிந்த இப்பூமியை ஒரு வணக்கஸ்தலமாகவும், மனித வாழ்வு முழவதையும் வணக்கமாகவும் மாற்றும் இப்பண்பு இஸ்லாத்தின் சிறப்பம்சமாகும். இக்கருத்தை மறுதலைப்படுத்தி ஆத்மஞானிகள் உலகைத் துறந்தவர்கள் அல்லர். ஆவர்கள் உலக நலனுக்காக உழைத்திருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுவதாக சுக்ரி அவர்களின் “ ஆத்ம ஞானிகளும் அறப்போராட்டமும் என்ற நூல் அமைந்துள்ளது.

கல்வி

வாழ்வைப் போன்றே கல்வியிலும் இந்த வேறுபாடு நோக்கப்படக்கூடாது என்பதை அவர் வலியுறுத்திக் கூறினார். இஸ்லாமிய நோக்கில் அறிவியலுக்கும் மதத்திற்குமிடையில் மேற்குலகில் நிலவுவது போல எத்தகைய மோதலும் நிலவ முடியாது. ஏனெனில் விஞ்ஞானமும் மதமும் ஒன்றையொன்று அணிந்ததாக மனிதனின் இயற்கையிலேயே அமைந்துள்ளன. இஸ்லாம் உருவாக்க முனையும் மனிதனின் இந்த இரண்டு அம்சங்களோடும் தொடர்புடைய அறிவு எத்தகைய முரண்பாடோ மோதலோ இன்றி சமபலநிலையில் தொழிற்படும்.

ஏனெனில் ஒன்று அவன் இறைவனுக்கு அடிபணிந்து வாழத்துணைபுரிய, மற்றது இறை சிருஷ்டிகளின் தன்மை, குண இயல்புகள், பிரபஞசத்தில் அதன் செயற்பாடுகள் பற்றிய அறிவைப் பெற தூண்டுகிறது. அறிவியல் அறிவினதும் ஆத்மீக அறிவினதும் ஒருங்கிணைந்த செயற்பாட்டின் விளைவாக இறை நம்பிக்கையும் இறை அச்சமும் நிறையப்பெற்ற மனிதர்கள் உருவாவார்கள்.

இதனையே அல்குர்ஆனின் 35 : 28 ஆம் வசனம் சுட்டிக் காட்கின்றது. என சகாத் கோட்பாடுகளும் நடைமுறையும் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

முறைசாராக் கல்விக்குத் துணைபுரியும் பேச்சு, எழுத்து தொடர்பாக கலாநிதி சுக்ரி அவர்கள் தெளிவான கருத்தை முன்வைத்துள்ளார். எழுத்தாளன் சமூகத்தின் ஓர் அங்கம். சமூகத்தின் இலட்சியங்கள், உணர்வுகள் , ஆபாசங்கள், பிரச்சினைகள் அனைத்தும் அவனைப் பாதிக்கின்றன. ஆதலால் அவனது எழுத்தில் சமூகம் பிரதிபலிக்கும். சூனியத்திலிருந்து இலக்கியம் படைக்க முடியாது. ஒருவனுக்குப் பேசக்கூடிய, எழுதக்கூடிய ஆற்றல் இருக்கின்றதென்றால் அவன் எதனையும் பேசவும் எழுதவும் முடியும் என்பது கருத்தல்ல. அது அல்லாஹ் அவனுக்களித்த அமானிதம். ஆதலால் அவனுடைய எழுத்தில், பேச்சில் இலட்சியம் இருக்க வேண்டும்.

இலக்கியம்

ஒரு காலத்தில் கலை கலைக்காக என்ற கோட்பாடு நிலவி வந்தது. அவன் சமூகத்திலிருந்து விடுபட்டு கற்பனை உலகை சிருஷ்டித்து அதில் சஞ்சரிக்கின்றான். இதனால் அவனுக்கும் சமூகத்திற்கும் எத்தகைய தொடர்பும் இருப்பதில்லை. இதனை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு கொள்கையோடு இலக்கியம் படைக்க வேண்டும் என்பதைத்தான் ஸுரதுஷ் ஷுரா எடுத்துக்காட்டுகின்றது. கலை வாழ்க்கைக்காக என்ற கருத்தை முன்வைக்கின்றது. ஓர் ஒழுக்கங்கெட்ட இலக்கியவாதியினால் சமூகத்திற்கு ஏற்படுகின்ற பேரழிவு, ஜெங்கிஸ்கானின் இராணுவத்தால் ஏற்பட்ட பேரழிவை விடப் பயங்கரமானது என தனது இஸ்லாமிய வாழ்வியல் கோட்பாடு எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை முஸ்லிம்களுக்கு மத்தியில் இஸ்லாத்தின் பரந்த தன்மையை எடுத்துக்காட்டுவதில் கலாநிதி சுக்ரியின் பங்கு தட்டிக்கழிக்க முடியாது. ஏற்கனவே குறிப்பிட்டது போல இஸ்லாம் ஆன்மீகப் பண்புகளை மட்டும் கொண்டதல்ல. அதற்காதாரமாக இஸ்லாத்துடன் தொடர்பற்றதாகக் கருதப்பட்டுவந்த பல கலைகளையும் அவற்றுக்கும் இஸ்லாத்திற்கும் இடையிலான தொடர்பையும் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார். இஸ்லாமிய அரசியல் கோட்பாடு (13:1) இஸ்லாத்தின் நோக்கில் தொல்பொருளியல் (14:1) முஸ்லிம்களும் பல்கலைக் கழகப் பாரம்பரியமும் (18:3) முஸ்லிம்களும் வரலாற்றுக் கலையும்(20:2) இஸ்லாமிய நோக்கில் ஆய்வு (20:3) ஆய்வுக்கான அவசியமும் ஆய்வு பற்றிய இஸ்லாமிய நோக்கம் (25:6) நாகரிகம் பற்றிய இரு கண்ணோட்டங்கள் (21:1) அல்குர்ஆன் ஆய்வு முறையும், மேற்கத்திய ஆய்வு முறையும் (22:1) இஸ்லாமிய அழகியற் கோட்பாடும் மேற்கத்திய அழகியற் கோட்பாடும்(22:3) முஸ்லிம்களின் இசைப்பாரம்பரியம் (23:3) கட்டடக்கலைப் பாரம்பரியமும் அதன் வளர்ச்சியும் (24:1,2) இஸ்லாமிய உளவியலும் மேற்கத்திய உளவியலும் (25:4) போன்ற இஸ்லாமிய சிந்தனையில் வெளியான ஆய்வுக் கட்டுரைகளே இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டலாம். அதே நேரத்தில் இஸ்லாமிய ஆன்மீகப் பண்புகளை விளக்ககின்ற ஆக்கங்களும் வெளியாகியுள்ளன. முஸ்லிம் அல்லாதோருக்குக் குறிப்பாக புத்திஜீவிகள் மத்தியில் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் பணியும் அவரால் நிகழ்த்தப்பட்டன. தேசிய சர்வதேசிய மாநாடுகளில் நிகழ்த்தப்பட்டுள்ள அவரது உரைகள் இத்துறையில் பொரும் முக்கியம் பெருகின்றன.

மேலும் நவீன முஸ்லிம் உலகிற்கு வரலாற்றிலும் நிகழ்காலத்திலும் முன்மாதிரியாகத் திகழ்ந்த சிந்தனையாளர்களையும் சீர்திருத்தவாதிகளையும் இவர் அறிமுகப்படுத்தி வந்தார். இஸ்லாமிய சிந்தனைகளில் வெளியான ஷாஹ் வலியுல்லாஹ்வின் பங்களிப்பு (2:3) இப்னு தைமியாவின் தஸவ்வுப் கோட்பாடு (9:3) இமாம் கஸ்ஸாலியின் பங்களிப்பு (1:4, 2:3) அல்பிரூனியின் மதங்கள் பற்றிய ஒப்பீட்டாய்வு (14:3) இப்னு பதூதா (17:1-2) முஹம்மது அல் கஸ்ஸாலி (18:2) ஜமாலுத்தீன் ஆப்கானி (21:3) இப்னு கல்தூன் (25:3) மாலிக் பின் நபி (24 -3,4) அபுல் ஹஸன் அலி நத்வி (22:2) என்ற தலைப்பிலான இவரது ஆக்கங்கள் இதனை நிரூபிக்கின்றன.

பன்னூல் ஆசிரியரான இவரது நூல் வெளியீடுகள் அனந்தம், ஆய்வறிக்கைகள் அனந்தம், அறிவு மாநாடுகள் அனந்தம், சொற்பொழிவுகள் அனந்தம். தனது இறுதி மூச்சுவரை கல்வித் தாகம் கொண்டவராக காணப்பட்ட இவர், சமூகத்திற்கு பல வழிகளிலும் அறிவியல் பணிகளை மேற்கொண்டார்.

இறுதிக் காலகட்டம்.

தனது அமுத விழாவினை நெருங்கும் காலப்பகுதியில் நோய் வாய்ப்பட்ட நிலையிலும், நாட்டிலே முஸ்லிம்களின் இருப்புக்கு ஏற்பட்ட அறைகூவல்களுக்கும் சவால்களுக்கும் அரசியல் நெருக்கடிகளுக்கும் அறிவு பூர்வமான வேலைத்திடங்களை ஆரம்பிப்பதன் அவசியத்தை உணர்ந்தார்.

நல்லிணக்கம், சக வாழ்வு தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொண்டார். கொவிட் பத்தொன்பது பெருந்தொற்று நெறுக்கடியால் நாடு பூராகவும் முடக்கப்பட்டு அசாதாரண நிலைமைகள் காணப்பட்ட நிலைமையில் தான் சுகயீன முற்று வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 2020-.05-.19ம் திகதி வல்ல இறைவனின் அழைப்பை ஏற்று அவன் பக்கம் மீண்டார். அவருடைய நன்மையின் தட்டை கணதியாக்கி உயர்ந்த சுவனமான பிர்தௌசுல் அஃலாவை வழங்குவானாக.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT