Saturday, April 27, 2024
Home » தென்கொரியாவில் நாய் இறைச்சி வர்த்தகத்துக்கு தடை

தென்கொரியாவில் நாய் இறைச்சி வர்த்தகத்துக்கு தடை

- 208-0 என்ற வாக்கு வித்தியாசத்தில் புதிய மசோதா நிறைவேற்றம்

by Prashahini
January 10, 2024 12:54 pm 0 comment

தென்கொரியாவில் இறைச்சிக்காக நாய்கள் கொல்லப்படுவதையும் ,அதனை விற்பதையும் 2027-ஆம் ஆண்டுக்குள் ஒழிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான மசோதா நேற்று (09) தென்கொரிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

பல நூற்றாண்டுகள் பழமையான நாய் இறைச்சி உண்ணும் வழக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தென்கொரியாவில் நாய் இறைச்சியை விரும்பி உண்ணும் வழக்கம், கடந்த சில தசாப்தங்களாக குறைந்துவருகிறது. குறிப்பாக, இளம் வயதினர் நாய் இறைச்சியை முற்றிலும் தவிர்த்து வருகின்றனர்.

இந்த புதிய சட்டத்தின்படி, நாய்களை இறைச்சிக்காக வளர்ப்பது, அதனை கொல்வது, விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்தல் தடை செய்யப்படும். இந்த சட்டத்தை மீறுபவர்கள் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

தென்கொரியாவில் பல நூற்றாண்டுகளாக நாய் இறைச்சிகளை உண்ணும் பழக்கம் இருந்திருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டும் என தென்கொரியா அரசு நீண்ட காலமாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. அதேவேளையில் நாய் இறைச்சி உண்பதை தடை செய்ய வேண்டும் என அந்நாட்டின் விலங்கு நல ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில், நாய்களை இறைச்சிக்காக வெட்டுவதும், அவற்றை விற்பனை செய்வதும் சட்டவிரோதமானது என்ற மசோதா தென்கொரிய நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் 208-0 என்ற வாக்கு வித்தியாசத்தில் மசோதா நிறைவேறியது.

புதியதாக வரவிருக்கும் சட்டத்தின் கீழ் நாய்களை இறைச்சிக்காக வளர்ப்பது, கொலை செய்வது அல்லது விற்பனை செய்வது போன்றவற்றுக்கு தடை விதிக்கப்படும். இந்தச் சட்டத்தை மீறி செயல்படுவது சட்டவிரோதமானது ஆகும். உணவுக்காக நாயைக் கொல்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது 30 மில்லியன் கொரியன் வோன் (சுமார் $23,000) வரை அபராதம் விதிக்கப்படும். இந்த மசோதா இன்னும் மூன்று (2027) ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்து சட்டமாக மாறும்.

இறைச்சி கடை உரிமையாளர்கள் 3 ஆண்டுக்குள் வேறு தொழிலை தொடங்கி, வருவாய் ஈட்டுவதற்கு அரசாங்கம் உதவும் எனவும் உறுதியளித்துள்ளது. தென்கொரியாவில் உணவு நோக்கங்களுக்காக சுமார் 1,100 நாய் பண்ணைகள் இயங்குகின்றன. மேலும் இந்த பண்ணைகளில் சுமார் மில்லியன் கணக்கில் நாய்கள் வளர்க்கப்படுகின்றன என்று விவசாயம், உணவு மற்றும் கிராமப்புற விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த மசோதா தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இளம் தலைமுறையினர் ஒருபுறமும், வயதில் மூத்தவர்கள் மறுபுறமும் தங்களது எதிர்ப்பையும், ஆதரவையும் காட்டி வருகின்றனர். லீ சே-யோன் என்ற 22 வயது மாணவர், “இன்று அதிகமான மக்கள் செல்லப் பிராணிகளை வைத்திருக்கிறார்கள். நாய்கள் எங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரைப் போல மாறியிருக்கிறது. அதை சாப்பிடுவது நன்றாக இருக்காது” என்றார். ஆனால் வயதில் மூத்தவர்கள், நாய்களின் இறைச்சி தடைக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்த மசோதா இப்போது இறுதி ஒப்புதலுக்காக அதிபர் யூன் சுக் யோலுக்கு செல்கிறது. ஒப்புதல் கிடைக்கப் பெற்றவுடன் சட்டமாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT