Sunday, April 28, 2024
Home » பிராந்தியத்தில் போர் பரவுவதை தடுப்பதற்கு பிளிங்கன் மும்முரமாக பேச்சு: போரைத் தொடர இஸ்ரேல் உறுதி
காசாவில் கடும் தாக்குதல்களுக்கு மத்தியில்

பிராந்தியத்தில் போர் பரவுவதை தடுப்பதற்கு பிளிங்கன் மும்முரமாக பேச்சு: போரைத் தொடர இஸ்ரேல் உறுதி

by damith
January 9, 2024 6:00 am 0 comment

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் ஒருங்கிணைந்த அமைதி முயற்சி இல்லாத பட்சத்தில் இந்தப் போர் பிராந்தியம் எங்கும் பரவக் கூடும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் எச்சரித்துள்ளார்.

பிராந்தியத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிளிங்கன், நேற்று (08) ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் சவூதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடத்திய பின் இஸ்ரேலுக்கு விரைந்துள்ளார். பிராந்தியத்தில் போர் பரவும் அச்சுறுத்தலை தவிர்க்கும் முயற்சியாகவே பிளிங்கன் ஐந்து நாள் விஜயமாக பிராந்தியத்திற்கு பயணித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜோர்தான் மற்றும் கட்டார் நாடுகளுக்குச் சென்ற அவர் இந்த வாரத்தில் மேற்குக் கரை மற்றும் எகிப்துக்கும் பயணிக்கவுள்ளார்.

“பிராந்தியத்தில் பெரும் பதற்றமான தருணம் ஒன்றாக இது உள்ளது. அதிக பாதுகாப்பற்ற மற்றும் வேதனைகளுக்குக் காரணமான எளிதாகப் பரவக்கூடிய மோதல் ஒன்றாக இது உள்ளது” என்று அபூதாபி செல்வதற்கு முன் டோஹாவில் செய்தியாளர்களை சந்தித்த பிளிங்கன் கூறினார்.

டோஹாவில் பேசிய அவர் மேலும் கூறும்போது, தற்போது நான்கு மாதங்களை தொட்டிருக்கும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போரில் இடம்பெயர்ந்துள்ள பலஸ்தீனர்கள் தமது வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இஸ்ரேல்–ஹமாஸ் போர் வெடித்தது தொடக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் இஸ்ரேலின் லெபனானுடனான வடக்கு எல்லையில் கொந்தளிப்பு நீடிப்பதோடு யெமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் மற்றும் இஸ்ரேலை இலக்கு வைத்து 100க்கும் அதிகமான ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

காசா போர் வெடித்தது தொடக்கம் நான்காவது முறையாக பிராந்தியத்திற்கு சென்றிருக்கும் பிளிங்கடன் இன்று இஸ்ரேலிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இஸ்ரேலுக்கு பல பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை வழங்கும் அதன் நெருங்கிய கூட்டாளியாக அமெரிக்கா இருந்தபோதும், இந்தப் போரினால் உயர்ந்து வரும் உயிரிழப்பு எண்ணிக்கை கவலையை அதிகரித்திருப்பதோடு சர்வதேச அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மதிக்கும்படியும் காசாவில் அவசர நடவடிக்கையாக உதவிகளை அதிகரிக்கும்படியும் பிளிங்கன் இஸ்ரேலை கேட்கவிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மேலும் 73 பேர் பலி

எனினும் காசா மீதான இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 73 பேர் கொல்லப்பட்டு 99 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. மத்திய காசாவில் டெயிர் அல் பலாஹ்வுக்கு அருகில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் எட்டுப் பேர் கொல்லப்பட்டனர்.

“நான் படுக்கையில் இருந்து விழிக்கும்போது இது ஒரு பயங்கரக் கனவு என்று நினைத்துக் கொண்டே விழிக்கிறேன். என்றாலும் இது உண்மையானது” என்று காசா குடியிருப்பாளரான 51 வயது நபீல் பாத்தி கூறுகிறார். “எமது வீடு மற்றும் எனது மகனின் வீடு தகர்க்கப்பட்டிருப்பதோடு எமது குடும்பத்தில் 20 பேர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். நான் உயிருடன் இருந்தால் எங்கு போவது என்று எனக்குத் தெரியவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.

எகிப்துடனான எல்லையை ஒட்டிய தெற்கு காசாவின் ரபாவில் கடந்த ஞாயிறன்று கட்டாரைத் தளமாகக் கொண்ட அல் ஜசீரா தொலைக்காட்சி நிறுவனத்தின் இரு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் சென்று கொண்டிருந்த கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஏ.எப்.பி மற்றும் ஏனைய ஊடக நிறுவனங்களுக்காகவும் பணியாற்றி வரும் முஸ்தபா துரியா மற்றும் அல் ஜஸீராவின் காசா அலுவலகத் தலைவரின் மகன் ஹம்ஸா வயீல் தஹ்து ஆகியோரே கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய வான் தாக்குதல்களில் அல் ஜஸீராவின் காசா அலுவலகத் தலைவர் ஏற்கனவே தனது மனைவி மற்றும் மேலும் இரு குழந்தைகளை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போர் ஆரம்பித்தது தொடக்கம் அதிகப் பெரும்பான்மையான பலஸ்தீனர்களான குறைந்தது 79 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக மத்திய காசாவை இலக்கு வைத்து இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருப்பதோடு பீரங்கி குண்டுகள் இரவு வானை ஒளியூட்டி வருவதாக அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் காசாவில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 22,835 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்களாவர். மேலும் 58,416 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை மத்திய காசாவில் உள்ள அல் அக்ஸா தியாகிகள் மருத்துவமனையின் நூற்றுக்கணக்கான நோயாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் காணாமல்போயுள்ளனர். பொரும்பாலான மருத்துவப் பணியாளர்கள் மற்றும் சுமார் 600 நோயாளர்கள் அந்த மருத்துவ வளாகத்தில் இருந்து அறியப்படாத இடம் ஒன்றுக்கு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட நிலையில் அவர்கள் எங்கே உள்ளனர் என்பது தெரியவில்லை என உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளன.

ஹமாஸ் அதிருப்தி

அமெரிக்காவின் செல்வாக்கை பயன்படுத்தி அவசர போர் நிறுத்தம் ஒன்றுக்கு இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஜோர்தான் மன்னர் அப்துல்லாஹ், பிளிங்கனை வலியுறுத்தி இருப்பதோடு, இஸ்ரேல் இராணுவ நடவடிக்கையை தொடர்வது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார்.

எனினும் தொடர்ந்து போரிடப்போவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியாகக் குறிப்பிட்டுள்ளார்.

“ஹமாஸை ஒழிப்பது, அனைத்து பணயக்கைதிகளும் திரும்புவது மற்றும் இஸ்ரேலுக்கு காசா தொடர்ந்தும் அச்சுறுத்தலாக இல்லை என்பதை உறுதி செய்வது ஆகிய அனைத்து இலக்குகளையும் நாம் அடையும் வரை போர் நிறுத்தப்படாது” என்று ஞாயிறன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தை ஆரம்பித்து பேசும்போது நெதன்யாகு வலியுறுத்தினார். “இதனை நாம் எமது நண்பர்கள் மற்றும் எதிரிகள் ஆகிய இருவருக்கும் கூறிக்கொள்கிறோம்” என்றார்.

எனினும் காசாவில் ஏற்பட்டுள்ள அழிவுகள் சர்வதேச அளவில் போர் நிறுத்தத்திற்கான அழைப்பை வலுக்கச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை வழக்குத் தொடுத்திருக்கும் தென்னாபிரிக்காவுக்கு அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் இன்னும் ஆதரவு வழங்காதது தொடர்பில் ஹமாஸ் அதிகாரியான சமி அபூ சுஹரி, எக்ஸ் சமூகதளத்தில் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

“இதற்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம், இல்லையெனில் இந்த உத்தியோகபூர்வ மெளனம் காசாவில் எஞ்சியிருப்போரையும் ஒழிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஓர் ஆணையாக அமையும்” என்று அவர் கூறினார்.

தென்னாபிரிக்கா தொடுத்திருக்கும் இந்த வழக்கு எதிர்வரும் ஜனவரி 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் ஹேகிலுள்ள சர்வதேச நீதிமன்றத்தில் பகிரங்க விசாரணைக்கு வரவுள்ளது. இதற்கு துருக்கி, மலேசியாவுடன் தற்போது பொலிவிய நாடும் தென்னாபிரிக்காவுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளன.

மேற்குக் கரை கொந்தளிப்பு

காசாவுக்கு வெளியில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் வன்முறை அதிகரித்திருப்பதோடு கடந்த சில வாரங்களில் இஸ்ரேலிய துருப்புகள் மற்றும் குடியேறிகளுடனான மோதல்களில் நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜெனின் நகரில் துருப்புகள் மீது தாக்குதல் நடத்திய பலஸ்தீன போராளிகளுக்கு எதிராக வான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது. இதில் ஏழு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஜெனின் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இஸ்ரேலிய எல்லை பொலிஸ் அதிகாரி ஒருவரின் வாகனம் வெடிகுண்டு தாக்குதலுக்கு இலக்கான நிலையில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மறுபுறம் மேற்குக் கரையில் மோதுவதற்கு வந்ததாக சந்தேகிக்கப்படும் வாகனம் ஒன்றின் மீது இஸ்ரேலிய படையினர் சூடு நடத்தியபோது மற்றொரு காரில் இருந்த பலஸ்தீன சிறுமி ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அவசர சேவை பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT