Sunday, April 28, 2024
Home » சீரற்ற காலநிலையினால் மரக்கறிச் செய்கை பாதிப்பு!

சீரற்ற காலநிலையினால் மரக்கறிச் செய்கை பாதிப்பு!

by gayan
January 4, 2024 6:00 am 0 comment

நாட்டில் கடந்த சில மாதங்களாக சீரற்ற காலநிலை நீடித்து வருகின்றது. அதன் விளைவாக மக்களின் இயல்பு வாழ்வு பல்வேறு பிரதேசங்களிலும், பலவிதமான பாதிப்புகளுக்கு முகம்கொடுத்த வண்ணமுள்ளது. நாட்டில் அவ்வப்போது வெள்ள நிலையும் மண்சரிவுகளும், மண்மேடுகள் சரிந்து விழுதல்களும் ஏற்படக்கூடிய நிலைமையும் காணப்படுகின்றது. இவற்றின் விளைவாக மக்களின் போக்குவரத்து வசதிகளிலும் போக்குவரத்து தடங்கல்கள் உள்ளிட்ட பலவிதமான இடையூறுகளும் ஏற்படவே செய்கின்றன.

அதனால் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் மக்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ நிலையமும், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும், வளிமண்டலவியல் திணைக்களமும், நீர்ப்பாசனத் திணைக்களமும் அவ்வப்போது வழங்கி வருகின்றன. இந்த முன்னெச்சரிக்கைகள் மக்களுக்கு பெரிதும் பயனளிக்கக் கூடியனவாக அமைகின்றன. அதனால் இந்த ஏற்பாடுகளை மக்கள் பெரிதும் வரவேற்கின்றனர்.

அதேநேரம் நாட்டில் சீரற்ற காலநிலை நிலவும் போது மரக்கறி உள்ளிட்ட உணவு உற்பத்தி பயிர்ச்செய்கை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களும் பாதிப்புக்களும் பெரிதும் கவனம் செலுத்தப்பட வேண்டிய நிலையை அடைந்திருக்கிறது. தற்போது உள்நாட்டு சந்தையில் நிலவும் மரக்கறி வகைகளுக்கான பற்றாக்குறைக்கும் அவற்றின் விலைகளில் ஏற்பட்டிருக்கும் அதிகரிப்புக்கும் சீரற்ற காலநிலையே காரணமாகும்.

ஆனாலும் மரக்கறி வகைகளின் தட்டுப்பாடும் விலை உயர்வும் பல பிரதேசங்களிலும் பேசுபொருளாகவும் உள்ளன. சீரற்ற காலநிலையின் தாக்கமும் செல்வாக்கும் மரக்கறிச் செய்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக பெரும்பாலான மரக்கறிச் செய்கைகள் அழிவடைந்தும் சேதமடைந்தும் உள்ளன. அத்தோடு இக்காலநிலையின் தாக்கம் உரிய விளைச்சலை அளிக்காத நிலையையும் மரக்கறி உள்ளிட்ட உணவுப் பயிர்ச்செய்கையில் ஏற்படுத்தி இருக்கின்றன.

இவற்றின் விளைவாகவே நாட்டின் சில பிரதேசங்களில் உள்ள சந்தைகளில் போதியளவில் மரக்கறி வகைகள் இல்லாத நிலைமையும் தற்போதைய சூழலில் சந்தைக்குவரும் மரக்கறி வகைகளின் விலைகளிலும் அதிக அதிகரிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலைமை மரக்கறி வகைகள் தொடர்பில் பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையானது உள்நாட்டுக்கு தேவையான மரக்கறி வகைகளை வருடா வருடம் போதியளவில் பெரும்பாலும் உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது.

ஆனால் அது வருடம் முழுவதும் சமச்சீராக இடம்பெறக்கூடியதாக இல்லை. அதாவது வருடத்தின் சில மாதங்களில் அபரிமித விளைச்சலை அளிக்கும் மரக்கறி வகைகள் இன்னும் சில மாதங்களில் சீரற்ற காலநிலை உள்ளிட்ட காரணங்களினால் எதிர்பார்க்கும் அறுவடையை அளிக்கத் தவறிவிடுகின்றன. அது மரக்கறி வகைகளுக்கு சந்தையில் தட்டுப்பாட்டு நிலையை ஏற்படுத்துவதோடு, அவற்றின் விலைகளிலும் அதிகரிப்புக்கும் வித்திடுகின்றன.

அதனால் மரக்கறி வகைகளின் அறுவடைகளில் அபரிமித விளைச்சல் கிடைக்கப்பெறும் காலப்பகுதிகளில் அவற்றை நீண்ட காலத்திற்கு பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வகையில் சேமித்து களஞ்சியப்படுத்துவது குறித்து கவனம் செலுத்த வேண்டிய தேவையும் உணரப்படுகிறது. இவ்வாறு சேமித்துக் கொள்ளும் போது சந்தையில் எந்த சூழலிலும் மரக்கறி வகைகளுக்கு தட்டுப்பாடோ விலை அதிகரிப்போ ஏற்படாது. இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட தரப்பினர் முன்பாக உள்ளது.

அதேநேரம் சீரற்ற காலநிலையினால் மரக்கறி உள்ளிட்ட உணவுப் பயிர்ச்செய்கை உற்பத்தி எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டிய தேவையும் முக்கியத்துவம் பெற்றதாக விளங்குகிறது. தற்போது மரக்கறி செய்கை அழிவடைந்தும் சேதமடைந்தும் உள்ள போதிலும் அச்செய்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். அதற்கான ஊக்குவிப்புக்கள் பயிர்ச்செய்கையாளர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். குறிப்பாக சீ ரற்ற காலநிலை நிலவும் பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உணவுப் பயிர்ச்செய்கைகளை ஊக்குவிப்பது அவசியம்.

இல்லாவிடில் மரக்கறி வகைகளையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்படும். அது நாடு பெருமளவிலான அந்நியச் செலாவணியை இழக்க வழிவகை செய்யும். அது ஆரோக்கியமானதல்ல. நாட்டுக்கு தேவையான மரக்கறி வகைகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு தேவையான இயற்கை வளமும் வசதிகளும் போதியளவில் இங்குள்ளன.

ஆகவே உள்நாட்டு மரக்கறிச் செய்கையை மீளக்கட்டியெழுப்பும் வகையில் ஊக்குவிக்கும் போது நாட்டின் மரக்கறியின் தேவையை குறுகிய காலப்பகுதிக்குள் நிறைவேற்றக்கூடியதாக இருக்கும். அதன் ஊடாக அவற்றின் விலைகள் சந்தையில் குறைவடைந்து வழமை நிலைக்கு திரும்பிவிடும். மக்களின் எதிர்பார்ப்பும் அதுவேயாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT