பீடி தொழிற்துறைகள் தொடர்பில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று இன்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க ஆகியோர் தலைமையில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது.
பீடி தொழிற்துறைகளுக்கு அவசியமான மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் போதான பிரச்சினைகள் மற்றும் மோசடிகள் தொடர்பில் தீர்க்கமாக ஆராயப்பட்டது.
அதற்கமைய பீடி தொழிற்துறைகளுக்கான மூலப்பொருட்கள் இறக்குமதி தொடர்பிலான வரி கொள்கையை மறுசீரமைப்புச் செய்தல், சரியான முறையொன்றின் கீழ் மீண்டும் அதனை தயாரிப்பதற்கான அவசியம் மற்றும் மூலப்பொருட்களை சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்வதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், இறக்குமதியாளர்கள் மற்றும் பீடி உற்பத்தி நிறுவனங்கள் வருடாந்தம் பதிவு செய்யப்படுவது தொடர்பிலான இணக்கப்பாடுகளும் இதன்போது எட்டப்பட்டதோடு, பதிவுக் கட்டணத் திருத்தம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
வெட்டி தயாரிக்கப்படும் ஈரமான இலைகள் இறக்குமதியை தடுப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறும், தொழிற்துறைகளை சார்ந்து காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உரிய சட்ட கட்டமைப்பொன்றை தயாரிக்குமாறும் இதன்போது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
துறைசார் நிறுவனங்களின் அதிகாரிகள் சிலரும் இதன்போது கலந்துகொண்டனர்.