Sunday, April 28, 2024
Home » கிரான் கிராமத்தில் முதன் முதலாக உருவான சட்டத்தரணி புருஷோத்தமனுக்கு பாராட்டுவிழா

கிரான் கிராமத்தில் முதன் முதலாக உருவான சட்டத்தரணி புருஷோத்தமனுக்கு பாராட்டுவிழா

by sachintha
December 22, 2023 10:32 am 0 comment

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிரான் கிராமத்தின் வரலாற்றில் முதன் முதலாக சட்டத்தரணி ஒருவர் உருவாகியுள்ளார். இக்கிராமத்தில் குமாரவேல் புருஷோத்தமன் என்பவரே சட்டத்தரணியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

சட்டத்தரணி குமாரவேல் புருஷோத்தமனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு சில தினங்களுக்கு முன்னர் கிரான் ரெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

கிரான் மத்திய கல்லூரியின் 1999_2000 ஆம் ஆண்டு பிரிவு மாணவர்களினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் போது அந்நிகழ்வுக்கு வந்திருந்த அதிதிகள் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர். அதன் பின்னர் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இந்நிகழ்வில் சர்வமத வழிபாடு நடத்தப்பட்டது. சர்வமத குருமார்களினால் இறைஆசி வழங்கப்பட்டது. இதன் போது மாணவர்களின் நடன நிகழ்வு நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் கலந்து கொண்ட கௌரவ அதிதிகள் உரையாற்றுகையில், சட்டத்தரணி குமாரவேல் புருஷோத்மன் அவர்களின் கடந்த கால சமூக செயற்பாடு தொடர்பாக பாராட்டிப் பேசினர்.

எதிர்காலத்தில் அவர் மக்களுக்கான பணியை அர்ப்பணிப்புடன் முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

அவரை பாராட்டி பல்வேறு சமூக நல அமைப்புக்கள், நண்பர்கள், அரச உயரதிகாரிகளினால் பொன்னாடை போர்த்தப்பட்டது. அத்துடன் வாழ்த்து மடல் வாசிக்கப்பட்டது. நினைவுச் சின்னங்கள் வழங்கியும் அவர் கௌரவிக்கப்பட்டார்.

சட்டத்தரணி குமாரவேல் புருஷோத்மன் கிரான் மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் புகழ்பெற்ற ஒவியரும், பல்துறைக் கலைஞருமான குமாரவேல் அவர்களின் மகனுமாவார்.

இந்நிகழ்வின் போது அண்மையில் நடைபெற்ற தரம்_ 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு,

ஆலயகுரு சிவஸ்ரீ மு.சண்முகம் குருக்கள், கிரான் முன்னாள் மற்றும் தற்போதைய அதிபர்கள், ஆசிரியர்கள், சட்டத்தரணியின் குடும்ப உறவினர்கள் உட்பட பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

முருகுப்பிள்ளை கோகிலதாசன்…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT