Saturday, April 27, 2024
Home » நெதர்லாந்து அரசின் கடனுதவித் திட்டத்தில் நாச்சியாதீவில் இரு பாலங்கள் நிர்மாணம்

நெதர்லாந்து அரசின் கடனுதவித் திட்டத்தில் நாச்சியாதீவில் இரு பாலங்கள் நிர்மாணம்

by gayan
December 20, 2023 4:40 pm 0 comment

அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள நாச்சியாதீவு பிரதேசத்துக்கு இரண்டு புதிய பாலங்களை அமைக்க நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாச்சியாதீவு புதியநகர் மையவாடி மற்றும் பாடசாலைக்குச் செல்லும் பிரதான பாதையில் அமைந்துள்ள பாலம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. அதனை மக்கள் போக்குவரத்துக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திறப்பனை பிரதேசசபை முன்னாள் உபதலைவர் அன்வர் சதாத் (பஸ்மி) மேற்கொண்ட துரிதமுயற்சியால் இக்கிராமத்துக்கு இரண்டு பாலங்களைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவற்றில் முதலாவது நாச்சியாதீவு புதியநகர் பாடசாலை வீதி பாலம் ஆகும். இது கட்டி முடிக்கப்பட்டு விரைவில் மக்கள் பாவனைக்கு விடப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழான இரண்டாவது பாலமான ஆற்றுப் பாலத்தின் நிர்மாண வேலைகள் தற்பொழுது மழை காரணமாக தாமதமடைந்தாலும், மிகவிரைவில் அதனை நிர்மாணித்து முடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாச்சியாதீவு குளத்தின் மேலதிகநீர் வெளியேறும் மேற்படி ஆற்றுப்பாலத்துக்கான நிர்மாண வேலைகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வுகள் பிரதேசசபை முன்னாள் உபதலைவர் அன்வர் சதாத் (பஸ்மி) தலைமையில் அண்மையில் நடைபெற்றன.

வடமத்திய மாகாணத்துக்கு 15 பாலங்கள் கிடைத்துள்ள நிலையில், அவற்றில் இரண்டு பாலங்கள் நாச்சியாதீவு பகுதிக்குக் கிடைத்துள்ளமை விசேடமானதாகும். இப்பாலத்தின் வேலைகளை ஆரம்பிக்கும் போது மக்களுக்கு சில சிரமங்கள் ஏற்பட இடமுள்ளதால், குறித்த பாலத்தின் வேலைகள் முடிவடையும் வரை மக்கள் பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிகாரிகள் மற்றும் பொறியியலாளர்கள் கேட்டுக் கொண்டனர்.

இன்று நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இப்பாலம் எமக்குக் கிடைக்கப் பெற்றமை எமது அதிர்ஷ்டமாகும். இப்பாலத்தின் வேலைகளை ஆரம்பிக்கும் போது பொதுமக்களின் பயன்பாட்டுக்குக்காக சிறிய உபபாதை ஒன்றை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது பற்றிய கலந்துரையாடலுக்காகவே இக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தமது நன்றியைத் தெரிவித்தனர்.

நாச்சியாதீவு குளத்தின் வான்கதவுகள் திறக்கப்படும் சந்தர்ப்பம் மற்றும் மழைக்காலங்களில் இப்பாலத்தின் ஊடாக பிரயாணம் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படுகின்றது. போக்குவரத்தும் தடைப்படுகின்றது.

அத்துடன் வான்கதவுகள் மூடப்பட்டதும் நீர் வழிந்து செல்லும் பாலத்தின் பாதை சிதைந்தும் போய் விடுகின்றது. இவற்றை நிவர்த்தி செய்வதற்காகவே நிரந்தரமான பாலம் ஒன்றை அமைத்துத் தருமாறு இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

சுமார் 6 மாத காலத்தில் பாலத்தின் நிர்மாண வேலைகள் நிறைவுறுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. நெதர்லாந்து அரசாங்கத்தின் கடன் உதவி திட்டத்தின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. சுமார் 100 வருடங்களுக்கு மேல் நிலைத்திருக்கக் கூடிய பாலமாக இப்பாலம் கட்டப்படவுள்ளது.

இப்பாலத்தின் நிர்மாண வேலைகள் யாவும் நிறைவு பெற்றதும் இப்பிரதேச வியாபாரிகள், விவசாயிகள் உட்பட மக்கள் அனைவருக்கும் பயனடைவர். இப்பாலத்தின் ஊடாகவே தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம், கெ க்கிராவ, கண்டி, அநுராதபுரம் போன்ற பிரதேசங்களுக்கு மக்கள் சென்று வருகின்றனர்.

இந்நிகழ்வில் இஹலவெவ விகாரையின் விகாராதிபதி, ஹிதோகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.எம்.எஸ். பி. குணதிலக்க, நாச்சியாதீவு முஸ்லிம் மகாவித்தியாலய அதிபர் ஆர்.எஃப்.எஸ்.ரசூல், நாச்சியாதீவு அல் -ஹிகம் அரபுக் கல்லூரியின் அதிபர் உவைசுல் கர்னி, முன்னாள் பள்ளிவாசல் நிர்வாகசபைத் தலைவர் எஸ்.எச்.எம்.நஜிமுதீன் மற்றும் பொதுமக்கள், ஆர்வலர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், எனப் பலர் கலந்து கொண்டனர்.

ஏ.ஆர்.எம்.ரபியுதீன்…?

(திறப்பனை தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT