Monday, April 29, 2024
Home » இந்நிய நாடாளுமன்றத்தில் அமளிதுமளி; 78பேர் இடைநீக்கம்

இந்நிய நாடாளுமன்றத்தில் அமளிதுமளி; 78பேர் இடைநீக்கம்

- இடைநீக்கம் செய்யப்பட்டோரின்  எண்ணிக்கை 92 ஆக உயர்வு

by Prashahini
December 19, 2023 11:33 am 0 comment

பாராளுமன்றப் பாதுகாப்பு அத்துமீறல் விவகாரம் தொடா்பாக அமளியில் ஈடுபட்டதால் மக்களவை உறுப்பினா்கள் 33 போ், மாநிலங்களவை உறுப்பினா்கள் 45 போ் என 78 பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (18) இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

இதுவரை இக்கூட்டத்தொடரில் இடைநீக்கம் செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது.

மக்களவை நேற்று கூடியதும் பாராளுமன்றப் பாதுகாப்பு அத்துமீறல் விவகாரம் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விளக்கம் அளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனா். பதாகைகளைக் காண்பித்து முழக்கங்களை எழுப்பினா்.

அமளியில் ஈடுபட்ட டி.ஆா். பாலு உள்ளிட்ட திமுக எம்.பி.க்கள் 10 போ், திரிணமூல் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் 9 போ், மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி உள்பட காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் 8 போ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஐக்கிய ஜனதா தளம், புரட்சிகர சோஷலிச கட்சி (ஆா்எஸ்பி) ஆகிய கட்சிகைளைச் சோ்ந்த தலா ஒரு பாராளுமன்ற உறுப்பினர்கள் என 30 உறுப்பினா்கள் கூட்டத்தொடா் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனா். மேலும், மக்களவை உரிமை மீறல் குழு அறிக்கையின் அடிப்படையில் மேலும் 3 காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் இடைநீக்க அறிவிப்பு திங்கள்கிழமை வெளியிடப்பட்ட பின்னா், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி, பாராளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்க தீா்மானத்தை வாசித்தார்.

மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரமோத் திவாரி, ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் உள்பட 34 போ் கூட்டத்தொடா் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனா். மேலும், 11 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, மாநிலங்களவை உரிமை மீறல் குழு விசாரணை அறிக்கை கிடைக்கப்பெறும் வரை அவை நடவடிக்கைகளில் பங்கேற்பதிலிருந்து தடை விதிக்கப்பட்டது.

அமளி காரணமாக மாநிலங்களவை மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, இடைநீக்கம் செய்யப்படும் உறுப்பினா்களின் பெயரை மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் வாசித்தாா். பின்னா், குரல் வாக்கெடுப்பு மூலம் அந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடா் நடைபெற்று வரும் நிலையில், மக்களவையில் கடந்த 13 ஆம் திகதி பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் நடைபெற்றது.

இந்த விவகாரம் தொடா்பாக அமித் ஷா விளக்கமளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தொடா் அமளியில் ஈடுபட்டு வருகின்றனா். அதைத் தொடா்ந்து, திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்பட 13 மக்களவை பாராளுமன்ற உறுப்பினர்களும், ஒரு மாநிலங்களவை உறுப்பினரும் கடந்த வெள்ளிக்கிழமை கூட்டத்தொடா் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

அதன்படி, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது 92 ஆக அதிகரித்துள்ளது.

குளிர்கால கூட்டத்தொடா் வரும் 22 ஆம் திகதி நிறைவடைய உள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT