Thursday, May 9, 2024
Home » இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் சாதகமான மாற்றம்

இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் சாதகமான மாற்றம்

- புதிய வெளிவிவகாரக் கொள்கையில் அமைதி காத்தலுக்கு முன்னுரிமை

by Rizwan Segu Mohideen
December 18, 2023 6:42 pm 0 comment

– ஒரு முன்மாதிரியான மாற்றத்திற்குள் இலங்கை பிரவேசிக்கிறது

இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் சாதகமான மாற்றத்திற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அமைதி காக்கும் பணிகள் பாதுகாப்பு அமைச்சுடன் மாத்திரம் இணைக்கப்படும் பாரம்பரிய அணுகுமுறையிலிருந்து விலகி, நாட்டின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை கட்டமைப்பில் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

தியத்தலாவ இலங்கை இராணுவக் கல்வியற் கல்லூரியில் அண்மையில் (15) நடைபெற்ற வர்ணங்கள் வழங்கல் மற்றும் விடுகை அணிவகுப்பு நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாரம்பரிய அரசியல் உறவுகளுக்கு அப்பாற்பட்ட உலகளாவிய அணுகுமுறையை வலியுறுத்திய ஜனாதிபதி, புதிய வெளிவிவகாரக் கொள்கையின் முக்கிய அம்சங்கள் குறித்தும் குறிப்பிட்டதுடன், அமைதி காத்தல், காலநிலை மாற்றம் மற்றும் பல்வேறு உலகளாவிய தாக்கங்கள் இலங்கையின் சர்வதேச உறவுகளின் மூலோபாயத்தின் மையத் தூண்கள் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

1978ஆம் ஆண்டு நான் இளைஞர் விவகார அமைச்சராக கடமையாற்றிய போதே இராணுவத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை முன்னெடுக்கப்பட்டது. அப்போதைய இராணுவத் தளபதி மறைந்த ஜெனரல் டென்னிஸ் பெரேரா அவர்கள், தியத்தலாவில் இராணுவக் கல்லூரியை நிறுவுவதற்கு ஆதரவளிக்குமாறு என்னிடம் கோரிக்கை விடுத்தார்.

அப்போது அவர், பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜனாதிபதி ஜே. ஆர்.ஜெயவர்தனவிடம் இது குறித்து தெரிவித்ததுடன், அதன்படி இந்த கல்லூரியை அமைப்பது குறித்து ஆலோசித்தோம். தியத்தலாவைக்கு வழங்கக்கூடிய சிறந்த விடயம் இராணுவ கல்லூரியே என்பதை நான் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினேன்.

இப்போது இங்கு கூடியிருக்கும் வருங்கால உத்தியோகத்தர்களின் விளக்கவுரைகளைக் கேட்கும் போது, அன்றைய தினம் நாம் எடுத்த சரியான தீர்மானத்தையிட்டும் இந்த கல்லூரி தொடர்பிலும் பெருமைப்படலாம். நான் சில நாட்களுக்கு முன்பு குறிப்பிட்டது போல், ஒரு இராணுவத்தின் தரம் அதன் அதிகாரிகளிலும் அவர்களின் திறமையிலும் உள்ளது. பயிற்சி மூலம் தான் அவற்றை அவர்கள் பெறுகிறார்கள்.

ஒரு தொழில்முறை இராணுவத்தை உருவாக்க வேண்டுமாயின், பயிற்சியாளர்களின் பயிற்சி முகாம் முதல், உயர் அதிகாரிகள் உருவாக்கும் இடம் வரை, அனைத்து பிரிவுகளும் முறையாக பேணப்பட வேண்டும். இராணுவ உபகரணங்கள் எவ்வளவு தரம் கூடியதாக இருந்தாலும் முறையான பயிற்சி இல்லை என்றால், அந்த உபகரணங்களை வைத்திருப்பதில் எந்தப் பயனும் இல்லை. மறுபுறம், உயர் தரத்திலான உபகரணங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மேம்பட்ட பயிற்சி இருந்தால், அந்த உபகரணத்தின் குறைபாடுகளைக் கூட நிவர்த்தி செய்துகொள்ள முடியும். எல்லாவற்றுக்கும் அடிப்படையான சிறந்த கல்வி முறையைக் கொண்டிருப்பது, இலங்கையில் உள்ள எமக்கு விசேட அனுகூலமாகும். எனவே, இங்கு வருபவர்களும் சிறந்த கல்வியைப் பெற்று வருபவர்கள் தான்.

இதுவரையில் பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து அமைதி காக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் செயற்பட்டு வருகின்றோம். அதனை நாட்டின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கையின் ஒட்டுமொத்த அங்கமாக நாம் கருதவில்லை. அதுதான் இங்கு நாம் செய்த வேறுபாடு. இது நமது வெளியுறவுக் கொள்கை மற்றும் நமது பாதுகாப்புக் கொள்கையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.

எனவே, எடுத்துக்காட்டாக, இலங்கையின் புதிய வெளியுறவுக் கொள்கையில், அமைதி காத்தல், காலநிலை மாற்றம், சர்வதேச உறவுகளில் எமக்கு முக்கியமான பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்படும்.

இனி, அது வெறும் அரசியல் உறவுகளோ அரசியலோ அல்ல. இது தொடர்பாக நாம் அண்டை நாடுகளுக்கு குறிப்பாக மாலைதீவுகள் மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு வழங்கக்கூடிய சேவைகள் குறித்து தெரியப்படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் சேவைகள் கட்டளைத் தளபதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். இந்த நாடுகளுக்குச் சென்று எமது முடிவை அறிவிக்குமாறும் இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஆகியோரிடம் கூறினேன்.

இன்று, ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையில் இலங்கையின் பங்கு தொடர்பாக முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளுக்கு உங்களை வாழ்த்துகிறேன். மேலும் நிச்சயமாக அந்தப் பரிந்துரைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுப்பேன். மேலும், நிதி அமைச்சு இல்லாமல் இவை எதுவும் சாத்தியமில்லை என்பதை நினைவூட்டுகிறேன், எனவே நிதியமைச்சையும் சேர்த்து இந்த முன்மொழிவுகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பது பற்றி கலந்துரையாட விரும்புகிறேன்.

அமைதி காக்கும் பணியில் இலங்கை பெரிய பங்களிப்பை வழங்குவதை பார்க்க விரும்புகிறேன். ஆனால் அமைதி காக்கும் பணியே மாற்றமடைந்து வருவது சிக்கலாக மாறியுள்ளது. 1945 இல் ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்ட காலத்தில் இருந்த விதத்தில் இருந்து அது மாறிவிட்டது.

1956 இல் பிரிட்டன் தோல்வியடையும் வரை அமெரிக்கா, சோவியத் யூனியன் மற்றும் பிரிட்டன் ஆகியவை உலக வல்லரசுகளாக இருந்தன. அந்த உலகளாவிய நிலைப்பாட்டின் முடிவில், அமெரிக்காவும் சோவியத் யூனியனும் அமைதி காக்கும் படைகளை நிலைநிறுத்த ஒப்புக்கொண்டன. அதன் காரணமாக பல பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட முடிந்தது.

உதாரணமாக, கொங்கோ உள்நாட்டுப் போரின் போது, நாங்கள் எமது இராணுவத்தை அனுப்பியது எனக்கு நினைவிருக்கிறது.

இன்று நிலைமை வேறு. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, அமெரிக்காவும் சீனாவும் இணைந்து செயல்பட்ட சகாப்தம் முடிந்துவிட்டது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, பாரம்பரியக் கூட்டணிகள் சிதைந்து, சுயேச்சைக் குழுக்களும், அரச சாரா நிறுவனங்களும் தோன்றின.

உண்மையில், இன்றைய புவிசார் அரசியலின் சிக்கலான நிலையில், ஆபிரிக்க ஒன்றியம் சில அமைதி காக்கும் முயற்சிகளையும் சட்டம் ஒழுங்கை அமல்படுத்துவதையும் மேற்கொண்டுள்ளது. இது தற்போது இன்னும் சிக்கலான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

இன்று, ஒருபுறம், உக்ரைனில் போர் உள்ளது. இது ஒரு தீர்வை எட்டத் தவறிவிட்டது, இதன் விளைவாக ரஷ்யாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே உறுதியற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. பொருளாதார தடைகள் விதிக்கப்பட்ட போதிலும், ரஷ்யா அதிலிருந்து விழவில்லை. இருப்பினும், இது ரஷ்ய சுற்றுலா மற்றும் முதலீட்டில் அதிகரிப்பைக் காட்டியது.

இது இப்போது மத்திய கிழக்கு முதல் மேற்கு ஆசியா மற்றும் நம் நாட்டிற்கும் வருகிறது. ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் இந்நாட்டிற்கு வருவது அதிகரித்துள்ள நிலையில், அவர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்குக் கூட முயற்சிப்பதாகத் தெரிகிறது.

மற்றொரு பிரச்சினை தாய்வான். இதில் அமெரிக்கா ஒரு சுதந்திர அரசுக்கு ஆதரவளித்த்தால், இப்போது அவர்கள் ஷெங்ஹெய் உடன்படிக்கைக்கு அப்பால் சென்றுள்ளனர். இது மற்றொரு சிக்கலான பிரச்சினை. அதே சமயம், இந்து சமுத்திரத்தில் சீனாவின் வகிபாகம் மாறுகிறது. அதன் மூலம் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து மற்றொரு அமைப்பை உருவாக்கியுள்ளன.

அத்துடன் இன்னொரு மோதல் உருவாகி வருகிறது. அதுதான் காஸா போர்.

இது அரச சாராதவர்களால் தூண்டப்பட்ட போர். இந்தப் போரில் நாம் பார்த்த மிக மோசமான விடயம் பாரிய மனிதப் படுகொலையாகும். மேலும், அதில் தலையிடுவதற்கு ஐக்கிய நாடுகள் சபைக்கு உள்ள வரையரைகளும் கவலையளிக்கின்றன. இவைதான் நமக்குள்ள பிரச்சினைகள். மேற்கு இந்தியப் பெருங்கடலில் அரச சாராதவர்களுடன் நாம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் போரை விட சிக்கலானதாகிவிட்டன. போதைப்பொருள் கடத்தல்காரர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடு அவசியமானது எனத் தோன்றுகிறது.

அதற்கேற்ப, அரசியல் உருவாகும்போது, ஐ.நா. தூதுக்குழுக்களின் பணிகளின் தன்மையும் மாறுகிறது என்பதை புரிந்துகொள்ளலாம். எனவே அமைதி காக்கும் நடவடிக்கைகள் புவிசார் அரசியலைப் பின்பற்றுகின்றன என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். ஆனால் புவிசார் அரசியல் அமைதி காக்கும் நடவடிக்கைகளை பின்பற்றுவதில்லை.

அதன்படி, அடுத்த சில ஆண்டுகளில் இது எவ்வாறு மாறுகிறது என்பதை நீங்கள் பார்க்கலாம். ஆனால் நாம் அதில் இருந்து வெளியேற வேண்டும் என்று அர்த்தமில்லை. இதை உணர்ந்து, 1945 இல் ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டபோது எதிர்பார்த்ததை விட அதிகமானவர்களை இணைத்துக்கொள்ள நாம் திட்டமிட வேண்டும். அதனை உங்களிடம் ஒப்படைக்கின்றேன்.

மேலும், இங்கு இருக்கின்ற வருங்கால அதிகாரிகளில் ஒருவரேனும் ஐ.நா. தூதுக்குழு பணிகளில் இணைந்தால், அது இலங்கை இராணுவத்திற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். அது உங்கள் அனுபவத்திற்கு மேலும் வலு சேர்க்கும். இரண்டாவதாக, மாறிவரும் புவிசார் அரசியலுக்கு எற்ப, மாறிவரும் செயற்பாடுகளுக்கும் நீங்கள் தயாராக வேண்டும்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT