Monday, May 20, 2024
Home » யாழில் பொதுமக்கள் கருத்தறிந்த உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகம்

யாழில் பொதுமக்கள் கருத்தறிந்த உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகம்

- நாடு முழுவதும் கருத்தறிய நடவடிக்கை

by Rizwan Segu Mohideen
December 18, 2023 6:12 pm 0 comment

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் (ISTRM) ‘தேசிய ரீதியாக பொது மக்கள் கருத்தறியும் நடவடிக்கையை வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக ஆரம்பித்தது.

சிவில் சமூக அமைப்புகள், மதத் தலைவர்கள், சிரேஷ்ட பேராசிரியர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சமூக அமைப்பு பிரதிநிதிகள், பெண் உரிமை இயக்கங்கள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களுடன் கடந்த டிசம்பர் 10 முதல் டிசம்பர் 12 வரை சந்திப்புக்கள் நடத்தப்பட்டன.

இடைக்கால செயலக அதிகாரிகள் குழுவின் யாழ்ப்பாண விஜயமானது, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான நிலையான கட்டமைப்பை உருவாக்குவதற்கான விடயங்கள் மற்றும் பரிந்துரைகளை சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு தடையாக உள்ள சமூக சவால்கள் மற்றும் முக்கிய பிரச்சினைகள் பற்றிய விரிவாக இந்தச் சந்திப்புக்களில் ஆராயப்பட்டன.

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன பிரதம குருக்கள் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், யாழ் மறைமாவட்ட ஆயர் வண.கலாநிதி ஜெஸ்ரின் பீ ஞானப்பிரகாசம், யாழ் நாக விகாரையின் தம்மிக தேரர் உள்ளிட்ட மதத் தலைவர்களுடன் இடைக்காலச் செயலக அதிகாரிகள் குழு முக்கிய கலந்துரையாடல்களை மேற்கொண்டது.

பொதுமக்களின் எதிர்பார்ப்புகள், கருத்துக்கள் மற்றும் கவலைகள் தொடர்பில் சமயத் தலைவர்கள் இதன் போது கருத்துத் தெரிவித்ததுடன், நாட்டில் இன நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு நல்லிணக்க செயற்பாடுகள் வெற்றியடைய பிரார்த்தனை செய்ததுடன் ஆசிகளையும் வழங்கினர்.

இடைக்கால செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசங்க குணவன்ச, இடைக்கால செயலகத்தின் செயற்பாடுகள் குறித்து மதத் தலைவர்களுக்கு விளக்கமளித்ததுடன், பாராளுமன்ற சட்டத்தின் மூலம் ஸ்தாபிக்கப்படவுள்ள உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்த விளக்கங்களை வழங்கினார்.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான கொள்கைக் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன், இடைக்கால செயலகம் சிவில் சமூக அமைப்புகள், யாழ்ப்பாணத்தின் சிரேஷ்ட அரச அதிகாரிகள், யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட கல்வியியலாளர்கள், துறைசார் நிபுணர்கள், இளைஞர் குழுக்கள், பெண் உரிமை அமைப்புப் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு பங்குதாரர்களிடமிருந்து கருத்துக்களையும் திரட்டியது.

இந்த ஆலோசனைகள் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளின் எதிர்பார்ப்புகள் மற்றும் கவலைகள் பற்றிய விரிவான புரிதலை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

முக்கிய பங்குதாரர்களுடன் நடத்தப்பட்ட விரிவான பொது ஆலோசனைச் செயல்பாட்டில் பணிப்பாளர் நாயகத்தின் நிறைவேற்று மற்றும் சட்ட அதிகாரி அஷ்வினி ஹபங்கம,கொள்கைப் பிரிவுப் பிரதானி கலாநிதி யுவி தங்கராஜா, இடைக்கால செயலகத்தின் மக்கள் தொடர்பு மற்றும் கொள்கைப் பிரிவைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோரும் இதில் பங்கெடுத்திருந்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT