Thursday, May 9, 2024
Home » பாரிய கண்டி அபிவிருத்தித் திட்டத்தின் இறுதி வரைவு ஜனாதிபதியிடம் கையளிப்பு

பாரிய கண்டி அபிவிருத்தித் திட்டத்தின் இறுதி வரைவு ஜனாதிபதியிடம் கையளிப்பு

- கண்டி அபிவிருத்தியைத் துரிதப்படுத்த ஜெய்காவுடன் கலந்துரையாடப்படும்

by Prashahini
December 18, 2023 8:52 am 0 comment

பாரிய கண்டி விரிவான நகர்ப்புற அபிவிருத்தித் திட்டத்தின் இறுதி வரைவு நேற்றையதினம் (17) கண்டி ஜனாதிபதி மாளிகையில் வைத்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

பாரிய கண்டி அபிவிருத்தியைத் துரிதப்படுத்துவது தொடர்பில் ஜெய்காவுடன் கலந்துரையாடவுள்ளதாக இது தொடபில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

2023 பெப்ரவரி மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி நகரை நன்கு திட்டமிடப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் முழுமையாக அபிவிருத்தி செய்யப்பட்ட நகரமாக மாற்றுவதற்கான பிரேரணை அமைச்சரவையினால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

பிரதமரின் செயலாளர் அநுர திஸாநாயக்க தலைமையில் கண்டி நகர அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரிப்பதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அதிகாரிகள் மற்றும் நகர திட்டமிடல் துறையில் நிபுணர்கள் அடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அதற்கிணங்க, கட்டுகஸ்தொட்டை, கண்டி, குண்டசாலை ஆகிய பகுதிகளில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதில் விசேட கவனம் செலுத்தி பாரிய கண்டி அபிவிருத்தித் திட்டம் தயாரிக்கப்பட்டது.

மத்திய மாகாண ஆளுநர் உட்பட கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களிடம் இந்த அபிவிருத்தித் திட்டம் முன்வைக்கப்பட்டு, மேலதிக கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்ற பின்னர், நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட இறுதி வரைவு இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

அபிவிருத்தித் திட்டம் குறித்து விரிவாக மீளாய்வு செய்யப்பட்டதுடன், கண்டி நகரின் வரலாற்று மற்றும் கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாத்து, மக்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் கவனம் செலுத்தும் வகையில் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அத்துடன், நாட்டில் நிறுவப்படவுள்ள பல்கலைக்கழகங்களில் சிலவற்றை கண்டி நகரில் அமைக்க எதிர்பார்க்கப்படுவதாகவும், இதனால் எதிர்காலத்தில் கல்விக்கான கேந்திரமாக கண்டி மாறும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, மத்திய மாகாண ஆளுநர் லலித் யு. கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ஏ.எச்.எம். ஹலீம், எம் வேலுகுமார், முன்னாள் அமைச்சர் மலிக் சமரவிக்ரம, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, மத்திய மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமசிங்க, கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன், கண்டி முன்னாள் மேயர் கேசர சேனநாயக்க, கண்டி மாநகர ஆணையாளர் இஷான் விஜேதிலக, மத்திய மாகாண நகர அபிவிருத்தி அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் திருமதி நிஷாமணி அபேரத்ன, பிரதேச அரசியல்வாதிகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட அதிகாரிகள் பாதுகாப்புத் திணைக்கள சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கண்டி நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் அக்குரணை நகர அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றதுடன், அக்குரணை நகர அபிவிருத்தி தொடர்பான முழுமையான அறிக்கையை 06 வாரங்களில் கையளிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT