Friday, May 10, 2024
Home » IND Vs SA 1st ODI: இந்திய அணி வெற்றி

IND Vs SA 1st ODI: இந்திய அணி வெற்றி

- அர்ஷ்தீப், அவேஷ் அபாரம்

by Prashahini
December 18, 2023 9:28 am 0 comment

தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நேற்று (17) இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

இந்திய அணி வீரர்கள் அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான் ஆகியோரது சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணியின் வெற்றி எளிதானது.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் கிரிக்கெட் போட்டி, டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற சர்வதேச டி20 தொடரானது 1-1 என்றகணக்கில் சமனில் முடிவடைந்தது. இந்நிலையில் நேற்று இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 27.3 ஓவர்களில் 116 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

தொடக்க வீரர்கள் ரீசா ஹென்றிக்ஸ் 0, டோனி டே ஜோர்ஸி 28, வான் டெர் டஸ்ஸன் 0, ஹெய்ன்ரிச் கிளாசன் 6, ஆன்டிலே பெலுக்வாயோ 33 ஆகியோரை வெளியேற்றினார் அர்ஷ்தீப் சிங். கேப்டன் எய்டன் மார்க்ரம் 12 ஓட்டங்கள் சேர்த்து அவேஷ் கான் பந்தில் போல்டானார். அதைப் போலவே அதிரடி வீரர் டேவிட் மில்லர், அவேஷ் கான் பந்துவீச்சில் ராகுலிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 2 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்தார். வியான் முல்டர் ஓட்டங்கள் எடுக்காமலேயே அவேஷ் கான் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். கேசவ் மஹராஜ் 4 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் அவேஷ் கான் பந்தில், ருதுராஜ் கெய்க்வாட்டிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் 117 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட்டும், சாய் சுதர்ஷனும் களமிறங்கினர். ருதுராஜ் 5 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் வியான் முல்டர் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். பின்னர் சாய் சுதர்ஷனுடன், ஸ்ரேயஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ஓட்டங்களை குவித்தனர். இருவரும் அடுத்தடுத்து அரை சதங்களைக் கடந்தனர்.

52 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்ரேயஸ் ஐயர், பெலுக்வாயோ பந்துவீச்சில் மில்லரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த திலக் வர்மாவும், சாய் சுதர்ஷனும் வெற்றிக்குத் தேவையான ஓட்டங்களை எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தனர். 16.4 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 117 ஓட்டங்கள் எடுத்து வெற்றி கண்டது.

சாய் சுதர்ஷன் அபாரம்: அறிமுகமான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்கள் குவித்த 17ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை சாய் சுதர்ஷன் பெற்றார்.

5 விக்கெட் சாதனை: ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தென் ஆபிரிக்க அணிக்கு எதிராக 5 விக்கெட்கள் வீழ்த்திய இந்திய வீரர்கள் வரிசையில் அர்ஷ்தீப் சிங் சேர்ந்துள்ளார். இதற்கு முன் இச்சாதனையை இந்திய வீரர்கள் சுனில் ஜோஷி, யுவேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா செய்துள்ளனர்.

2ஆவது போட்டி: இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாளை (19) கெபர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

3ஆவது ஒருநாள் போட்டி: பார்ல் மைதானத்தில் டிசம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT