Monday, May 20, 2024
Home » ரி20 உலகக் கிண்ணம்: இலங்கை குழாமில் வெள்ளால்லகேவுக்கு இடம்

ரி20 உலகக் கிண்ணம்: இலங்கை குழாமில் வெள்ளால்லகேவுக்கு இடம்

by Gayan Abeykoon
May 10, 2024 10:04 am 0 comment

ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாத்தில் பின்வரிசை வீரர்களுக்கு இடையில் இருந்து வந்த போட்டியில் துனித் வெள்ளால்லகே வெற்றி பெற்று இறுதி அணியில் இடம்பிடித்துள்ளார். வலது கை சுழற்பந்து வீச்சாளரான வெள்ளாலகேவின் துடுப்பாட்ட திறன் மற்றும் மைதானத்தில் எந்த ஓர் இடத்திலும் களத்தடுப்பில் ஈடுபடும் திறனும் அணியில் இடம்பிடிக்க வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்பதற்கான இலங்கை அணியின் 15 பேர் குழாம் தேர்வு செய்யப்பட்டு அந்தப் பெயர் பட்டியல் விளையாட்டு அமைச்சரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் விசாவுக்கு விண்ணப்பித்திருக்கும் எஞ்சிய 10 வீரர்களில் மூவர் அல்லது நால்வர் மேலதிக வீரர்களாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.

ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு அணியை தேர்வு செய்வதில் தேவையான சந்தர்ப்பத்தில் துடுப்பெடுத்தாடி வேகமாக ஓட்டங்களை குவிக்கும் திறமையைக் கொண்ட சிறப்பு துடுப்பாட்ட வீரர் ஒருவரை பின் வரிசையில் பயன்படுத்துவது பற்றியே தேர்வுக் குழுவினர் அவதானம் செலுத்தினர். இதில் இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா தனது இடத்தை தக்கவைத்துள்ளார். இடது கை துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேராவுக்கு இடம் கிடைக்கவில்லை.

தற்போது நடைபெற்று வரும் பயிற்சி ரி20 முக்கோண போட்டித் தொடரில் பெரேரா 3 போட்டிகளில் 56 ஓட்டங்களை பெற்றிருப்பதோடு, அவர் ரி20 சர்வதேச போட்டிகளில் கடந்த ஓர் ஆண்டுக்குள் அரைச்சதம் ஒன்றையேனும் பெற்றதில்லை. ரி20 சர்வதேச போட்டிகளில் அவர் கடைசியாக 2023 ஏப்ரல் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக ஒக்லாந்தில் 53 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இந்தப் பயிற்சி போட்டிகளில் 4 ஆட்டங்களில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய வெள்ளாலகே இதுவரை ரி20 சர்வதேச போட்டிகளில் ஆடியதில்லை. எனினும், வெள்ளாலகே எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து போட்டிகளில் மாற்றங்களை கொண்டுவரக் கூடிய பின் வரிசை துடுப்பாட்ட வீரராக உள்ளார்.

ரி20 உலகக் கிண்ண போட்டி எதிர்வரும் ஜூன் 1 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது. தொடரின் ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் சில அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ளதோடு இலங்கை அணியின் மூன்று போட்டிகள் அமெரிக்காவில் நடைபெறவுள்ளன. நெதர்லாந்துக்கு எதிரான போட்டி மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது.

ரி20 உலகக் கிண்ணத்திற்கான 25 பேர் கொண்ட ஆரம்ப அணியை இலங்கை அறிவித்தபோதும் இறுதிக் குழாம் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதற்காக இலங்கை அணி எதிர்வரும் மே 14 ஆம் திகதி அமெரிக்க நோக்கி புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை குழாம்: வனிந்து ஹசரங்க (தலைவர்), சரித் அசலங்க, பெத்தும் நிசங்க, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, தசுன் ஷானக்க, அஞ்சலோ மத்தியூஸ், தனஞ்சய டி சில்வா, மஹீஷ் தீக்ஷன, கமிந்து மெண்டிஸ், துனித் வெள்ளாலகே, துஷ்மன்த சமீர, டில்ஷான் மதுஷங்க, நுவன் துஷார மற்றும் மதீஷ பதிரண.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT