Monday, May 20, 2024
Home » ஈரான் அணு எச்சரிக்கை

ஈரான் அணு எச்சரிக்கை

by Gayan Abeykoon
May 10, 2024 11:28 am 0 comment

இஸ்ரேல் தமது இருப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தால் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் நிலைக்குத் தள்ளப்படும் என்று ஈரான் உயர்மட்ட தலைவரின் ஆலோசகரான கமால் சராசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

‘அணு ஆயுதம் தயாரிக்கும் முடிவை நாம் எடுக்காதபோதும் ஈரானின் இருப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளானால், எமது இராணுவ கோட்பாட்டில் மாற்றத்தை கொண்டுவருவதைத் தவிர வேறு வழி இருக்காது’ என்று உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமனேவின் ஆலோசகர் கூறினார்.

‘சியோனிச அரசு எமது அணுசக்தி வசதிகள் மீது தாக்குதல் நடத்தினால் எமது நிலை மாறிவிடும்’ என்று ஈரானிய மாணவர் செய்தி வலையமைப்புக்கு அவர் தெரிவித்தார்.

அமைதி நோக்கத்திற்காகவே அணுத் திட்டத்தை செயற்படுத்துவதாக ஈரான் கூறி வரும் நிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  2000களின் ஆரம்பத்தில் அணு ஆயுதம் தயாரிப்பதை தடை செய்து உயர்மட்டத் தலைவர் மத ஆணை அல்லது பத்வா ஒன்றை பிறப்பித்திருந்தார். எனினும் மேற்குலக அழுத்தம் ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக 2021 இல் அப்போதைய உளவுத் துறை அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

அணு ஆயுதம் தயாரிப்பதற்கு யுரேனியத்தை 90 வீதம் செறிவூட்ட வேண்டும் என்ற நிலையில் ஈரான் அதனை 60 வீதம் செறிவூட்டியுள்ளது. சர்வதேச அணுசக்தி அமைப்பின் உத்தியோகபூர்வ அளவுகோலின்படி, தற்போது கையிருப்பில் உள்ள அணுசக்தி பொருட்கள் மேலும் செறிவூட்டப்பட்டால், அது இரண்டு அணு ஆயுதங்களுக்கு போதுமானதாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT