Home » தமிழ் – சிங்கள மக்கள் ஒற்றுமைக்காக வாழ்வதை விரும்பாத அரசியல்வாதிகளை நிராகரிக்க வேண்டும்

தமிழ் – சிங்கள மக்கள் ஒற்றுமைக்காக வாழ்வதை விரும்பாத அரசியல்வாதிகளை நிராகரிக்க வேண்டும்

உலகத் தமிழர் பேரவையிடம் அஸ்கிரி மல்வத்து மகாநாயக்க தேரர்கள் தெரிவிப்பு

by gayan
December 9, 2023 4:28 pm 0 comment

வடக்கில் தமிழ் மக்களும் தெற்கில் சிங்கள மக்களும் இன, மத பேதமின்றி ஒன்றிணைந்து செயற்படுவது தமது அரசியல் பயணத்துக்கு தடையாக இருப்பதாக கருதும் சில அரசியல்வாதிகள் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிப்பதாக வண. ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார். இவ்வாறான அரசியல்வாதிகளை நிராகரிக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகத் தமிழர் பேரவைத் தலைவர் சுரேன் சுரேந்திரன் உள்ளிட்ட குழுவினர் நேற்று (08) மல்வத்து மகாநாயக்கர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் சமாதானத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழும் போது சில அரசியல்வாதிகளும் வேறு சிலரும் இனங்களை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர்.இதனை அனைவரும் புரிந்துகொள்வது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார். வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகள் அரசியல் இலாபங்களுக்காக தமிழ் மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் தவறான கருத்துக்களை புகுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகத் தமிழர் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரன், நாட்டைப் பிளவுபடுத்தும் எந்தத் தேவையும் உலகத் தமிழர் பேரவைக்கு இல்லை என்றும், நாட்டின் அபிவிருத்திக்கும் வடக்கின் அபிவிருத்திக்கும் உறுதுணையாக இருப்பதே மன்றத்தின் நம்பிக்கை என்றும் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் இருந்து பாரியளவிலான முதலீட்டாளர்களை இலங்கைக்கு வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதற்கு முன்னர் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது முக்கியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை தீர்க்கப்படாத தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைத்து குழுக்களும் இணைந்து தேசிய கருத்தாடல் ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான உலக தமிழர் பேரவையின் முன்மொழிவுகள் அடங்கிய இமயமலைப் பிரகடனத்தின் பிரதியும் மல்வத்து மகாநாயக்கர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமரபுர வஜிரவம்ச மஹா நிகாயாவின் பதில் மகாநாயக்கர், பேராசிரியர் பல்லேகந்தே ரதனசார தேரர் மகா சங்கத்தினரும், யுத்தத்தால் இடம்பெயர்ந்தவர்களின் பெண்கள் அமைப்பின் தலைவி விஷாகா தர்மதாச தலைமையிலான குழுவினர் கலந்துகொண்டனர்.

அஸ்கிரி மகா விகாரைக்கு சென்ற தூதுக்குழுவினர், அந்த பிரிவின் மஹாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரின் ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

உலக தமிழர் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரன் மற்றும் அவரது குழுவினர் மல்வத்து மஹாநாயக்கர் அதி வண. திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரை நேரில் சென்று சந்தித்து ஆசி பெற்றனர். தூதுக்குழுவினர் அஸ்கிரிய மஹாநாயக்கர் அதி வணக்கத்திற்குரிய வரக்காகொட

ஸ்ரீ ஞானரதன மகாநாயக்கரையும் சந்தித்து ஆசி பெற்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT