Monday, April 29, 2024
Home » காலநிலை மாற்ற விடயத்தில் செலுத்தப்படும் அதிக கரிசனை

காலநிலை மாற்ற விடயத்தில் செலுத்தப்படும் அதிக கரிசனை

by damith
December 4, 2023 6:00 am 0 comment

இன்றைய காலகட்டத்தில் அதிகம் கவனம் செலுத்தப்படும் முக்கிய விடயங்களில் ஒன்றாக காலநிலை மாற்றமும் அதன் விளைவான தாக்கங்களும் விளங்குகின்றன. கைத்தொழில் புரட்சியைத் தொடர்ந்து புவி வெப்பமடைதலுக்கு அளிக்கப்பட்டு வந்த பங்களிப்புக்கள் கடந்த சில தசாப்தங்களாக தீவிரமடைந்துள்ளன. அதனால் ஏற்பட்டுவரும் தாக்கங்களும் பாதிப்புக்களும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன.

கைத்தொழில் புரட்சியைத் தொடர்ந்து எரிபொருள் மற்றும் எரிவாயு பயன்பாடும் தொழிற்சாலைகளின் அதிகரிப்பும் காபனீரொட்சைட்டு உமிழ்வில் அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளன. அதன் விளைவாக காலநிலையில் ஏற்பட்டுவரும் தாக்கங்களும் பாதிப்புக்களும் அதிகரித்துள்ளன.

காலநிலை மாற்றத்தின் விளைவாக கடலின் சூழல் மாற்றமடைந்து வருகிறது. அதனால் கடல் மட்டம் மாத்திரமல்லாமல் வெப்பநிலையும் கூட உயர்ந்து வருகிறது. கடல் அமிலமயமாக்கல், பவளப்பாறைகள் அழிவு, கடல் வாழ் உயிரினங்களின் வாழ்விடங்கள் அழிவு என்பனவும் கூட காலநிலை மாற்றத்தின் விளைவுகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவை கடல் பல்லுயிர்த்தன்மை, கடல் சார்ந்த உணவு முறைகள், கடலோர வாழ்வாதாரத்தை சீர்குலைத்தல் என்பவற்றின் மூலம் மனித உயிர்களை நேரடியாகப் பாதிக்கக்கூடியதாக உள்ளன. இவை ஒசோன் படல பாதிப்புக்கும் பனிப்பாறைகள் உருகவும் புவி வெப்பமடைதலுக்கும் பாரிய பங்களிப்பு நல்குகின்றன.

காலநிலை எதிர்கொண்டுள்ள இந்நெருக்கடியான நிலைக்கு கைத்தொழில் வளர்ச்சிமிக்க நாடுகளான அபிவிருத்தி அடைந்த நாடுகள்தான் அதிகம் பங்களித்துக் கொண்டிருக்கின்றன. உலகில் அதிகம் காபனீரோட்சைட்டை உமிழும் நாடுகளாக அவையே உள்ளன.

இருந்த போதிலும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களுக்கும் பாதிப்புகளுக்கும் வளர்ச்சியடைந்த நாடுகள் மாத்திரமல்லாமல் வளர்முக மற்றும் வறிய நாடுகளும் கூட முகம்கொடுக்கும் நிலைக்கு உள்ளாகியுள்ளன. ஆனால் காலநிலை மாற்றத்திற்கு வளர்முக மற்றும் வறிய நாடுகளின் பங்களிப்பு மிகவும் குறைவாகும்.

இருப்பினும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களையும் பாதிப்புக்களையும் எல்லா பிரதேசங்களும் மக்களும் அனுபவிக்கவே நேர்ந்துள்ளது. நிலத்தை அடிப்படையாகக் கொண்டு நாடுகளின் எல்லைகள் அமைந்துள்ள போதிலும் காலநிலையிலோ வளி மண்டலத்திலோ அவ்வாறான எல்லைகள் இருப்பதாக இல்லை. வளர்ச்சியடைந்த நாட்டினதும் வளர்முக மற்றும் வறிய நாட்டினதும் வளிமண்டலம் ஒன்றுதான்.

அதனால் காலநிலையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களின் தாக்கங்களும் பாதிப்புகளும் உலகின் இருப்புக்கு அச்சுறுத்தலாக மாறிவிடக்கூடிய அபாயம் எல்லா மட்டங்களிலும் உணரப்படுகின்றன. இது தொடர்பில் விஞ்ஞானிகளும் அவ்வப்போது சுட்டிக்காட்டி வருகின்றனர்.

பூமியின் 44 சதவீதமான மேற்பரப்பில் 134 வெப்ப வலய நாடுகள் அமைந்துள்ளன. அவற்றில் உலகின் சனத்தொகையில் 50 சதவீதமானோர் 2030 ஆம் ஆண்டாகும் போது காணப்படுவர் என மதிப்பிப்பட்டுள்ளது. அதேநேரம் 22 ஆம் நூற்றாண்டில் வெப்ப வலயம் பூமத்திய ரேகையிலிருந்து விலகிச் செல்லக்கூடும் எனவும் சில விஞ்ஞானிகள் எதிர்வுகூறியுள்ளனர்.

இவ்வாறான சூழலில் காலநிலை மாற்றத்தின் பாதிப்புக்கள், தாக்கங்களை குறைப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவை உணரப்பட்டிருக்கின்றது.

அந்த அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான 28 ஆவது சர்வதேச மாநாடு 54 அரச தலைவர்களின் பங்கேற்புடன் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான துபாயின் எக்ஸ்போ சிட்டியில் நடைபெற்றுள்ளது. 1992 இல் ஐ.நா சபையில் காலநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் உச்சி மாநாடே இது.

புவியின் வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸிக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற இலக்கை அடைவது குறித்து ஆராய்வதே இம்மாநாட்டின் நோக்கமாகும். அந்த வகையில் இம்மாநாட்டின் போது பல்வேறு விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இம்மாநாட்டில் பங்குபற்றியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ‘புவி வெப்பமடைதலை 1.5 செல்சியஸியினால் குறைப்பதில் இலங்கை உறுதியாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளதோடு, ‘இந்து சமுத்திரத்திற்கும் காலநிலை மாற்றத்துக்கும் இடையில் நிலவும் ஒன்றோடு ஒன்று சார்ந்திருத்தல் தன்மை தொடர்பிலும் கவனம் செலுத்துகிறது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு பங்களித்தல் என்பவற்றை குறைப்பதற்கு ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும், அது புவியினதும் உயிரினங்களதும் இருப்புக்கு அளிக்கும் பாரிய பங்களிப்பாக அமையும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT