Saturday, May 25, 2024
Home » இ.போ.ச ஊழல்,மோசடிகள் குறித்து விசேட விசாரணைகள் விரைவில்
மேல் மாகாண STF முன்னாள் பணிப்பாளர் தலைமையில்

இ.போ.ச ஊழல்,மோசடிகள் குறித்து விசேட விசாரணைகள் விரைவில்

by sachintha
December 1, 2023 8:20 am 0 comment

இலங்கை போக்குவரத்து சபையில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக மேல் மாகாணத்திற்கு பொறுப்பாக இருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் முன்னாள் பணிப்பாளர் கடந்த வாரம் நியமிக்கப்பட்டுள்ளாரென்றும் விரைவில் அதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்படுமென்றும் போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபையின் வெற்றிடங்களுக்காக இணைத்துக் கொள்ளப்பட்ட புதிய சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் குழுவுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தலைமையில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அங்கு உரையாற்றிய அமைச்சர்,

“உலகின் பல நாடுகளில் கல்வி, சுகாதாரம் போன்ற சேவைகளை பணம் கொடுத்தே பெற வேண்டியுள்ளது. இலங்கையில் இலவச சுகாதார வசதிகள், கல்வி போன்றவற்றை வழங்குவதற்காக வரி செலுத்தும் மக்களின் பணம் பெருமளவு செலவிடப்படுகிறது. அரசாங்கம் அடுத்த மூன்றாண்டுகளுக்கு எந்த நிறுவனத்திற்கும் ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடாது.

அரச வருமானம் அரச ஊழியர் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி உள்ளிட்ட மானியங்களை வழங்கிய பிறகு, வரி வருமானம் மிஞ்சுவதில்லை, யார் அரசாங்கத்தை நடத்தினாலும், இந்த செயல்பாடுகளை மட்டுமே செய்ய முடியும். அபிவிருத்தி நடவடிக்கைகள் உட்பட மூலதனச் செலவுகள் கடன்களை பெற்று பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

சுதந்திரம் பெற்றதில் இருந்து ஒவ்வொரு அரசாங்கமும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இவ்வாறே கடன்களை பெற்றுள்ளது.

அரசியல் ரீதியாக மிகவும் வளர்ச்சியடையாத கருத்தை, இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடம் விதைப்பதன் மூலம் நாட்டின் வங்குரோத்து நிலையின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியாது. இதனால் நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மூட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இலங்கை போக்குவரத்து சபை 2024ஆம் ஆண்டுக்குள் இலாபம் ஈட்டாவிட்டால் தனியார் மயமாகும் அபாயம் உள்ளது. தற்போதைய நிலைமையில் பணத் தட்டுப்பாடு இருந்தாலும் பணத்தை அச்சிடுவதற்கு சட்டப்படி அதிகாரம் இல்லை. எனவே, பழைய பழக்கவழக்கங்களையும், பழைய முறையையும் கடைப்பிடிக்க முடியாது. புதிய தலைவர் நியமிக்கப்பட்ட போது, முப்பத்தொன்பது இ.போ.ச டிப்போக்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலைமை காணப்பட்டது. செயல்படுத்தப்பட்ட திட்டத்தின் காரணமாக அவ் எண்ணிக்கை ஒன்பதாகக் குறைக்கப்பட்டுள்ளது.

எல்லா சந்தர்ப்பத்திலும், இலங்கைப் போக்குவரத்துச் சபையின் சேவையை நாட்டின் பொது மக்கள், நாட்டின் எதிர்கால சந்ததியாக விளங்கும் பாடசாலை மாணவர்கள் பெற்றுக்கொள்கின்றனர். எனவே, இந்த கௌரவமான பொறுப்பை பாதுகாப்பாக நிறைவேற்றுவது அனைவரினதும் கையில் உள்ளது. எதிர்வரும் ஆண்டில் பல டிஜிட்டல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை போக்குவரத்து சபை செயற்பட்டு வருகின்றது என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT