Saturday, April 27, 2024
Home » காசா மருத்துவமனைக்குள் இஸ்ரேல் தொடர்ந்து சுற்றிவளைப்பு நடவடிக்கை

காசா மருத்துவமனைக்குள் இஸ்ரேல் தொடர்ந்து சுற்றிவளைப்பு நடவடிக்கை

by sachintha
November 17, 2023 6:07 am 0 comment

பலஸ்தீன போராளிகளுடன் உக்கிர மோதல்: உயிரிழப்பு 11,500ஐ தாண்டியது

காசாவின் மிகப்பெரிய மருத்துவமனைக்குள் ஊடுருவிய இஸ்ரேலிய துருப்புகள் அங்கு நேற்றும் தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டதோடு அந்த மருத்துவமனைக்கு அருகாமையில் இஸ்ரேலிய படைகளுக்கும் பலஸ்தீன ஜிஹாத் போராளிகளுக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது.

கடந்த புதன்கிழமை இராணுவ டாங்கிகளுடன் அல் ஷிபா மருத்துவமனைக்குள் நுழைந்த இஸ்ரேலியப் படை அங்கு சுற்றிவளைப்பு தேடுதல்களில் ஈடுபட்டு வருகிறது. அந்த மருத்துவமனையை ஹமாஸ் போராளிகள் ஒரு கட்டளை மையமாகப் பயன்படுத்தியதாக இஸ்ரேல் சுமத்தும் குற்றச்சாட்டை அந்த அமைப்பு மறுத்துள்ளது.

அங்கு ஹமாஸ் சுரங்கப்பாதைகள் இருப்பதாக இஸ்ரேல் கூறிவந்த நிலையில் இரண்டாவது நாளாகவும் அந்த மருத்துமனையில் தீவிர சோதனையில் ஈடுபட்ட இஸ்ரேல் இராணுவம் அவ்வாறான சுரங்கப்பாதை ஒன்றை கண்டுபிடித்தது பற்றி எந்த விபரத்தையும் வெளியிடவில்லை.

“துருப்புக்கள் துல்லியமான, உளவுத்துறை அடிப்படையிலான முறையில் மருத்துவமனையில் தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டுள்ளது” என்று இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் ரியர் அட்மிரல் டானியேல் ஹகரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். எனினும் மருத்துமனையில் இருந்து ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் கட்டாரைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஹமாஸ் மூத்த உறுப்பினர் இஸ்ஸத் அல் ரஷ்க் இஸ்ரேலின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார். அதில் அவர், “ஆக்கிரமிப்புப் படை தொடர் பொய் கூறி வருகிறது. அவர்கள் சில ஆயுதங்கள், ஆடைகள் மற்றும் கருவிகளை மருத்துவனைக்குள் எடுத்துச் சென்று குற்றம்சாட்டும் நோக்கில் அங்கே வைத்திருக்கிறார்கள். ஆக்கிரமிப்பாளர்களின் இந்தப் பொய்களை ஐக்கிய நாடுகள், உலக சுகாதார அமைப்பு மற்றும் செம்பிறை சங்கம் சரிபார்க்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

காசாவில் இயங்கும் மற்றொரு பலஸ்தீன போராட்டக் குழுவான இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு மருத்துவமனை வளாகத்திற்கு அருகில் இஸ்ரேலிய படைகளுடன் தொடர்ந்து உக்கிர சண்டையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. காசாவில் மேலும் இரு இஸ்ரேலிய துருப்புகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் உறுதி செய்துள்ளது. 22 வயதான கெப்டன் அசாப் மாஸ்டர் மற்றும் 22 வயதான கெப்டன் கிபிர் இன்சக் பிரான்கோ ஆகியோரே கொல்லப்பட்டுள்ளனர். இதன்படி காசா மீது இஸ்ரேல் தரைவழி நடவடிக்கையை ஆரம்பித்தது தொடக்கம் கொல்லப்பட்ட இஸ்ரேலிய துருப்புகளின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

மறுபுறம் காசா மீதான இஸ்ரேலிய வான் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்து நீடித்தது. மத்திய காசாவில் இடம்பெற்ற தாக்குதல்களில் குறைந்தது 9 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் பலரும் அடைக்கலம் பெற்றிருக்கும் கான் யூனிஸ் பள்ளிவாசல் ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்டிருக்கும் இந்தத் தாக்குதல்களில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இதன்போது ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மைல் ஹனியேவின் வீட்டின் மீது இஸ்ரேல் குண்டு வீசியுள்ளது. குடியிருப்புப் பகுதி மீது இஸ்ரேலிய போர் விமானம் தாக்குதல் நடத்தும் வீடியோவை வெளியிட்டு இஸ்ரேல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஹனியே கட்டாரை தளமாகக் கொண்டே இயங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இடைவிடாது நடத்தப்படும் தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 11,500ஐ தாண்டியுள்ளது. இதில் 4,710 சிறுவர்கள் மற்றும் 3,160 பெண்கள் அடங்குகின்றனர். மருத்துவ பணியாளர்களின் உயிரிழப்பு 200ஐ எட்டி இருப்பதாகவும் பலஸ்தீன சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 22 சிவில் பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் 51 ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டிருப்பதோடு காயமடைந்தோர் எண்ணிக்கை 29,800ஆக அதிகரித்துள்ளது. இதில் 70 வீதமானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்களாவர்.

காசாவின் அரச ஊடக அலுவலகம் கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பின்படி, இஸ்ரேலிய தாக்குதல்களில் 95 அரச கட்டடங்கள், 255 பாடசாலைகள் அழிக்கப்பட்டுள்ளன. சுமார் 74 பள்ளிவாசல்கள் முற்றாக அழிப்பட்டிருப்பதோடு மேலும் 162 பள்ளிவாசல்கள் பகுதி அளவு அழிக்கப்பட்டுள்ளன. தவிர மூன்று தேவாலயங்களும் தாக்கப்பட்டுள்ளன.

55 சுகாதார மையங்கள் மற்றும் 55 அம்புலன்ஸ்களை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருப்பதோடு அங்கு 25 மருத்துவமனைகள் செயலிழந்துள்ளன. இந்நிலையில் போருக்குப் பின் ஹமாஸ் அமைப்பு மீண்டெழுவதை தவிர்ப்பதற்கு குறுகிய எதிர்காலத்தில் காசாவில் வலுவான படை ஒன்று நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று இஸ்ரேலிய ஜனாதிபதி இசாக் அர்சொக் தெரிவித்துள்ளார். ஆனால் காசாவை ஆக்கிரமிப்பது பெரும் தவறு என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

“நாம் பின்வாங்கினால், பின்னர் யார் பொறுப்பேற்பது? நாம் இடைவெளி ஒன்றை விட முடியாது. பொறிமுறை ஒன்று பற்றி நாம் சிந்திக்க வேண்டும். பல ஆலோசனைகளும் கூறப்படுகின்றன” என்று எப்.டீ. பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஹெர்சொக் குறிப்பிட்டுள்ளார்.

“என்றாலும் இந்த காசாவை பயங்கரவாதத் தளமாக மாற்றுவதை யாரும் விரும்பமாட்டார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். போருக்குப் பின்னரான காசா தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் அமெரிக்கா மற்றும் அண்டை நாடுகளை தொடர்புபடுத்தி பொருக்குப் பிந்திய ஒழுங்கு பற்றி ஆலோசிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இஸ்ரேல் பலஸ்தீன பிரச்சினைக்கு இரு நாட்டு தீர்வே ஒரே வழி என்றும் காசாவை ஆக்கிரமிப்பது பெரும் தவறு என்றும் பைடன் புதனன்று தெரிவித்திருந்தார்.

2007 ஆம் ஆண்டு தொடக்கம் ஹமாஸ் அமைப்பு ஆட்சி புரிந்து வரும் காசா பகுதி என்பது எதிர்கால பலஸ்தீன நாட்டின் ஓர் அங்கமாகவே இருக்கும் என்று ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் சுயாட்சி புரிந்து வரும் பலஸ்தீன அதிகார சபை வலியுறுத்தியுள்ளது.

ஹமாஸ் அமைப்பை அழித்தொழிப்பதாக சூளுரைத்திருக்கும் இஸ்ரேல், போருக்குப் பின்னரான காசாவின் எதிர்காலம் பற்றிய திட்டத்தை வெளியிடவில்லை. காசாவின் ஒட்டுமொத்த பாதுகாப்புக்கும் இஸ்ரேல் பொறுப்பாக இருக்கும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT