Saturday, April 27, 2024
Home » செவாக்குடன் அரவிந்தவுக்கு ஐ.சி.சியின் உயரிய விருது

செவாக்குடன் அரவிந்தவுக்கு ஐ.சி.சியின் உயரிய விருது

by damith
November 14, 2023 6:00 am 0 comment

சர்வதேச கிரிக்கெட் கெளன்சிலின் உயரிய விருதான ஹோல் ஒப் பேம் கெளரவம் இலங்கை முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வாவுடன் இந்தியாவின் விரேந்திர செவாக் மற்றும் இந்தியாவின் மகளிர் கிரிக்கெட் வீராங்கனையான டயானா எடில்ஜிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றிய அறிவிப்பை ஐ.சி.சி நேற்று (13) வெளியிட்டது. இதன்படி குமார் சங்கக்கார, முத்தையா முரளிதரன் மற்றும் மஹேல ஜயவர்தனவுக்கு அடுத்து இந்த உயரிய விருதை பெறும் மூன்றாவது இலங்கை வீரராக அரவிந்த டி சில்வா இடம்பெற்றுள்ளார். ஐ.சி.சி. இன் ஹோல் ஒப் பேம் விருது கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டிருந்த முன்னாள் வீரர்களை கெளரவிக்கும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனக்கு கிடைக்கும் கெளரவம் குறித்து டி சில்வா இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

“நான் ஐ.சி.சி. இன் ‘ஹோல் ஒப் பேம்’ இற்குள் உள்வாங்கப்படுவதனை மிகப் பெரிய கெளரவம் ஒன்றாக கருதி ஏற்கின்றேன். இதனை நான் ஒரு அடைவாகப் பார்ப்பதோடு எனது கிரிக்கெட் வாழ்க்கைப் பயணத்திற்காக நான் காட்டிய அர்ப்பணிப்பு, செய்த தியாகம் மற்றும் வெளிப்படுத்திய காதல் போன்ற விடயங்களுக்காக கிடைத்த கெளரவமாகவும் பார்க்கின்றேன்.

எனது குடும்பம், எனது பெற்றோர்கள், எனது சகோதரி, எனது மனைவி மற்றும் எனது பிள்ளைகள் என அனைவரும் எனக்காக வழங்கிய ஆதரவிற்காக அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இன்னும் எனது நண்பர்களும் முக்கிய தருணங்களில் எனக்கு ஆதரவாக இருந்தனர்.

எனது பயிற்றுவிப்பாளர்கள், ஆசான்கள், இரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என அனைவரும் எனக்கு இந்த அடைவுமட்டத்திற்காக உதவியதோடு, எனது அணியின் தலைவர்கள், சக வீரர்கள் என அனைவரும் எனது பயணத்தில் ஒரு குடும்பமாக என்னுடன் இணைந்து காணப்பட்டிருந்தனர். இன்னும் என்னுடன் விளையாடிய எதிரணி வீரர்களுக்கும் எனது ஆட்டத்தினை மேம்படுத்த உதவியமைக்கு நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.”

இன்னும் என்னை இந்த விருதினை வழங்குவதற்கு தெரிவு செய்த ஐ.சி.சி. இன் ‘ஹோல் ஒப் பேம்’ தேர்வுக்குழுவிற்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்றார்.

1984ஆம் ஆண்டு இலங்கை அணிக்காக டெஸ்ட் அறிமுகம் பெற்ற அரவிந்த டி சில்வா, இலங்கை அணி முதல்முறையாக டெஸ்ட் போட்டியொன்றில் வெற்றி பெறும் போது அந்தப் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக 75 ஓட்டங்கள் விளாசி தனது அணியின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்னும் 1996ஆம் ஆண்டு இலங்கை தமது கன்னி உலகக் கிண்ணத்தை வெற்றி கொள்வதற்கும் முக்கிய காரணமாக அமைந்த அரவிந்த டி சில்வா 2002ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு விடை கொடுத்ததோடு, 2003ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத்தோடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

மொத்தமாக 93 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கும் அரவிந்த டி சில்வா 6361 ஓட்டங்களை 42.97 என்ற சராசரியுடன் பெற்றிருந்ததோடு, டெஸ்ட் போட்டிகளில் 29 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். அத்துடன் அவர் 308 ஒருநாள் போட்டிகளில் ஆடி 9284 ஓட்டங்களோடு 106 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் இடம்பெற்றிருக்கும் செவாக் இந்திய அணிக்காக 104 டெஸ்ட் போட்டிகளிலும், 251 ஒருநாள் மற்றும் 19 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்திய அணிக்காக முதல் முச்சதத்தை பெற்ற செவாக் இரு முறை அந்த சாதனையை படைத்துள்ளார். மகளிர் கிரிக்கெட்டில் நட்சத்திரமாக விளங்கிய டயானா 20 டெஸ்ட் 34 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 107 சர்வதேச விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். டயானா பின் மகளிர் கிரிக்கெட்டின் நிர்வாகியாக பணிபுரிந்து பல்வேறு மாற்றங்களை செய்திருந்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT