Home » கடினமான கட்டத்தில் இந்தியா – கனடா உறவு

கடினமான கட்டத்தில் இந்தியா – கனடா உறவு

- வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் தெரிவிப்பு

by Prashahini
October 23, 2023 3:49 pm 0 comment

இந்தியா – கனடா இடையிலான உறவு கடினமான கட்டத்தில் இருப்பதாக நேற்று (22) வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்திய அரசுக்கு தொடா்புள்ளதாக கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டிய நிலையில், இருநாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

ட்ரூடோவின் குற்றச்சாட்டைத் தொடா்ந்து, கனடா குடிமக்கள் இந்தியா வருவதற்கு நுழைவு இசைவு (விசா) வழங்கும் பணிகளை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தியது. அத்துடன் இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்குமாறு அந்நாட்டிடம் கேட்டுக்கொண்டது.

இந்தியாவின் நடவடிக்கை சா்வதேச சட்டத்துக்கு புறம்பானது எனவும், ராஜீய உறவுகளில் வியன்னா உடன்படிக்கையை மீறியுள்ளதாகவும் கனடா குற்றஞ்சாட்டியது.

இந்நிலையில், இந்த பிரச்சனை தொடா்பாக புதுடில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறியதாவது:

தற்போது இந்தியா – கனடா இடையிலான உறவு கடினமான கட்டத்தில் உள்ளது. கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பில் முன்னேற்றம் தென்பட்டால், அந்நாட்டைச் சோ்ந்தவா்களுக்கு நுழைவு இசைவு வழங்கும் பணிகளை இந்தியா மீண்டும் தொடங்கும்.

இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையைப் பொருத்தவரை, ராஜீய உறவுகளில் வியன்னா உடன்படிக்கை சமத்துவ உரிமையை அளிக்கிறது. இந்திய விவகாரங்களில் கனடா அதிகாரிகளின் தலையிட்டதைக் கருத்தில் கொண்டு, அந்த சமத்துவ உரிமையை இந்தியா பயன்படுத்தியது.

தற்போது உலகின் மத்திய கிழக்குப் பகுதியில் நடைபெற்று வரும் நிகழ்வின் (இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்) தொடா் விளைவுகளை தற்போது அனுமானிக்க இயலாது.
தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் பரவுவதன் ஆபத்தைக் குறைத்து மதிப்பிட வேண்டாம். இனி எந்தவொரு ஆபத்தும் தொலைவில் இருப்பதாகக் கருத முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT