Sunday, April 28, 2024
Home » மக்கா புனிதத்தலங்களில் சவூதி அரேபியா மேற்கொள்ளும் அபிவிருத்திப் பணிகள்

மக்கா புனிதத்தலங்களில் சவூதி அரேபியா மேற்கொள்ளும் அபிவிருத்திப் பணிகள்

by sachintha
October 17, 2023 4:13 pm 0 comment

சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் மக்கா ஹரம் ஷரீபின் நிலையும், அக்காலத்தில் நடைபெற்ற ஹஜ் நிகழ்வுகளில் காணப்பட்ட நடைமுறையும் மிகவும் கவலைக்குரியவை. அக்காலத்தில் பெரிய வசதிகள் இருக்கவில்லை.

கடினமான நீண்ட தூரப் பயணங்கள், கடுமையான பாலைவன வெயில், உஷ்ணம், ஹஜ்ஜுக்காக வருபவர்கள் தமக்கு முடியுமான கூடாரங்களை தாமே அமைத்துக் கொள்ளுதல் போன்ற நிலைமையே காணப்பட்டன.

அத்துடன் ஹஜ்ஜாஜிகளின் அதிகரிப்பு, சனநெரிசலால் ஏற்படும் மரணங்கள், கூடாரங்கள் தீப்பிடிக்கும் அபாயம் என்பன பெரும் சவாலாகவே விளங்கின.

ஆகவே மக்கா ஹரம் ஷரீபையும், ஹஜ்ஜோடு தொடர்பான புனிதத்தலங்களையும் மிகவிரைவாக அபிவிருத்தி செய்ய வேண்டிய நிர்ப்பந்த நிலைமை உருவானது.

இதனால் குறித்த பகுதிகளில் சவூதி அரேபியாவின் காலம் சென்ற முன்னாள் மன்னர்களது காலத்திலும் தற்போதைய மன்னர் சல்மான் அவர்களது காலத்திலும் பாரிய அபிவிருத்திப் பணிகளும் வசதிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன; இன்றும் மேற்கோள்ளப்பட்டு வருகின்றன.

அந்த அபிவிருத்திப் பணிகளுள் மிக முக்கியமாக ஜமராத்- கல் எறியும் இடங்கள்- பாலங்கள் மற்றும் தீ தடுப்புக் கூடாரங்கள், விசாலமான வீதிகள், போக்குவரத்து வசதிகள், தகவல் தொடர்பு, பள்ளிகளின் கட்டுமானம் மற்றும் விரிவாக்கம் , சுகாதார சேவைகள், நீர், மின்சாரம், பாதுகாப்புத் திட்டங்கள் என பலதரப்பட்ட வசதிகளும் அபிவிருத்திப் பணிகளும் வாரலாறு காணாத வகையில் பாரிய அளவில் மிகத்துல்லியமாக மேற்கோள்ளப்பட்டுள்ளன.

உண்மையில் இவை சிறப்பான சேவைகளாகும்.

ரமழான் மாதங்களில் உம்ராவுக்காக வருகை தரும் நோயாளிகள், வயோதிபர்களுக்கு தவாப், சஃயு செய்தல் போன்றவற்றை இலகுபடுத்தும் வகையில் 3000 இற்கும் அதிகமான தானியங்கி மின்சார வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன.

ஒவ்வொரு முறையும் ஹஜ்ஜு, உம்ராவுக்குச் செல்பவர் மக்கா, மதீனா ஆகிய இரு புனிதத் தலங்களிலும் ஏதோ ஒரு வகையில் சிறப்பான சேவையொன்று மேலதிகமாக செய்யப்பட்டுள்ளதை கண்டுகொள்வார்.

இதனால்தான் தற்போதைய சவூதி அரேபிய மன்னர்களின் பெயர்களுக்கு முன்னால் ‘இரு புனிதத் தலங்களின் சேவகர்’ என்ற பதம் பயன்படுத்தப்படுகின்றதாம்.

தற்போதைய புனித மக்கா ஹரமின் வசதிகள், சேவைகள் சிலவற்றை இங்கு அவதானிக்கலாம்.

-பரப்பளவு: ஒரு மில்லியன் சதுர மீட்டர். -2 மில்லியன் மக்கள் தங்க முடியும். -24 மணி நேரமும் திறந்திருக்கும். ஒருபோதும் மூடப்படுவதில்லை. –

1800 துப்புரவு செய்யும் தொழிலாளிகள் பணியாற்றுகின்றனர். – துப்புரவு செய்வதற்காக 40 மின்சார வாகனங்கள்.

வெளிமுற்றத்தை சுத்தம் செய்ய 60 அதி நவீன இயந்திரங்கள்.- 2000 சுகாதார கொள்கலன்கள். உள்ளே 40000 ஆயிரம் பெரும் விரிப்புகள் விரிக்கப்பட்டுள்ளன. 13,000 மலசலகூடங்கள், குளியலறைகள் உள்ளன. ஒரு நாளைக்கு 4 முறை சுத்தம் செய்யப்படுகின்றன.

– 25,000 ஆயிரம் தண்ணீர் கொள்கலன்கள் உள்ளன. இது உலகின் மிகப்பெரிய நீர் விநியோக திட்டங்களுள் ஒன்று.- அல்-ஹரமைன் அல்குர்ஆன் இலவச சேவை 24 மணி நேரமும் உள்ளது. இதன் மூலம் 180 இற்கும் மேற்பட்ட நாடுகள் பயனடைகின்றன. பொருட்களைப் பாதுகாக்க 2000 இற்கும் மேற்பட்ட பாதுகாப்பு பெட்டிகள்.

ஒலி, ஓடியோ சிஸ்டம்ஸ் வருமாறு:

– பிழை வீதம் 0%

6000 ஓடியோ ஸ்பீக்கர்கள்,- 4 வெவ்வேறு ஒலி அமைப்புகள்,- ஓடியோ முறைமையை சீர் செய்ய 50 பொறியியலாளர்கள் தயார் நிலையில்.

விஷேட தேவையுடையோருக்கான சேவைகள்.- 400 மின்சார கார்கள்,- நோன்பாளிகளுக்கான இப்தார் ஏற்பாடு. இப்தாருக்குப் பிறகு இரண்டே நிமிடங்களில் சுத்தம் செய்யப்படும். ஸம்ஸம் தண்ணீர் இலவசமாக விநியோகம்.

எந்தவொரு இடத்திலும் இல்லாத பிரமாண்டமான ஏற்பாடுகள். இவ்வளவு வசதிகளுடன்தான் மக்கா ஹரம் ஷரீபுக்கு அழகான, ஆன்மீகமான சூழலை தருகின்றது.

உலகெங்கிலும் இருந்து வருகை தரும் மக்கள் ஆன்மீகம் நிறைந்த இந்த அழகான சூழலில் தமது ஹஜ், உம்ரா கிரியைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதற்கான கீழ்வரும் பாதுகாப்பான, சுகாதார ரீதியான ஏற்பாடுகள் சவூதி அரசாங்கத்தினால் மிகத்துல்லியமாக செய்யப்படுகின்றன.

அனுபவமும் ஆற்றலும் கொண்ட உலமாக்களால் மார்க்க வழிகாட்டல்கள்.- ஹஜ்ஜோடு தொடர்பான பல்வேறு புனிதத் தலங்களிலும் பல மருத்துவ முகாம்கள் தயார் நிலையில்,- சத்திர சிகிச்சைகள் கூட தேவையேற்படின் இலவசமான முறையில்.- ஹாஜிகளை வரவேற்பதற்காக விமான நிலையத்திலிருந்து அன்பளிப்புகள்.

மக்கா ஹரம், மதீனா ஹரம், மினா, அரபாத், முஸ்தலிபா போன்ற புனிதத் தலங்களில் சிறப்பான ஏற்பாடுகள்.

இஹ்ராம் அணிந்த ஒருவர் தனது தங்குமிடத்தில் இருந்து ஹரம் ஷரீபுக்கு செல்வதற்கான இலவச பஸ் சேவை.

இத்தனை சேவைகளுக்கு மத்தியில்தான் ஹஜ், உம்ரா போன்ற கடமைகளை மக்களால் இலகுவாக நிறைவேற்ற முடிகின்றது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

அஷ்ஷைக் பாஹிர் சுபைர் கபூரி ரியாதி உப அதிபர் சுமையா அரபுக் கல்லூரி கிண்ணியா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT