Sunday, April 28, 2024
Home » அபிவிருத்தியடைந்த மாகாணமாக வடமாகாணம் திகழ வேண்டும்

அபிவிருத்தியடைந்த மாகாணமாக வடமாகாணம் திகழ வேண்டும்

by sachintha
October 3, 2023 5:41 am 0 comment

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணம் வாள்வெட்டு, வீடுகளில் திருட்டு மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அண்மைக் காலமாக அடிக்கடி இடம்பெறக் கூடிய இடமாக உள்ளது. அதேநேரம் கேரளா கஞ்சா உள்ளிட்ட சில வகைப் போதைப்பொருட்கள் கைப்பற்றப்படும் முக்கிய பிரதேசங்களும் இம்மாகாணத்தில்தான் காணப்படுகின்றன.

இந்த சம்பவங்களால் வடமாகாண மக்கள் மத்தியில் அச்சம் பீதியும் நிலவே செய்கின்றன. வாள்வெட்டு மற்றும் வன்முறைச் சம்பவங்களால் பலர் காயமடைந்துள்ளனர். சில வாள் வெட்டுக்கள் குரூரமான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டில் சுமார் மூன்று தசாப்த காலம் நிலவிய யுத்தம் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு இடம்பெற்றது. இதன் விளைவாக வடமாகாண மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இந்த யுத்தம் காரணமாக முழுநாடுமே பாரிய இழப்புக்களைச் சந்தித்தது.

இந்நிலையில் வடமாகாண மக்கள் உட்பட முழு நாட்டு மக்களுமே யுத்தம் முடிவுக்கு வரதா? அச்சம் பீதியில்லாத அமைதி, சமாதான சூழல் எப்போது உருவாகும் என ஏங்கிக் கொண்டிருந்தனர். இவ்வாறான சூழலில் 2009 இல் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து வட பகுதி மக்கள் உட்பட முழுநாட்டிலும் புதிய நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் தோற்றம் பெற்றன. இவ்வாறான அச்சம் பீதிமிக்க சூழல் மீண்டும் ஒரு போதுமே தோற்றம் பெற்று விடக்கூடாது. அமைதி, சமாதானமே நாட்டில் தழைத்தோங்க வேண்டும் என்பதே வடபகுதி உள்ளிட்ட முழு நாட்டு மக்களினதும் எதிர்பார்ப்பாக இருந்தது.

அதற்கு ஏற்ப யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரான சில வருடங்கள் வடக்கு உட்பட முழு நாட்டிலும் அச்சம் பீதியற்ற சூழல் நிலவியது. ஆனால் மக்களின் எதிர்பார்ப்புக்கு அமைய யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தில் அமைதி, சமாதானம் நிலவுவதை சில தரப்பினர் விரும்புவதாகத் தெரியவில்லை. அதன் வெளிப்பாடாகவே வாள்வெட்டு சம்பவங்களும், வன்முறைகளும் அடிக்கடி இடம்பெறக்கூடிய சூழல் உருவானது.

அதன் ஊடாக அந்த சக்திகளின் எதிர்பார்ப்புக்கு அமைய வடக்கு மக்கள் மத்தியில் அச்சம் பீதி தலைதூக்கியது. இப்பின்புலத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்கள் குறித்து தேசிய மட்டத்தில் கவனம் செலுத்தப்படும் நிலை உருவானது. அதன் விளைவாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணம் அச்சம் சூழ்ந்த பிரதேசமாக பரவலாக நோக்கப்படலாயிற்று.

இந்த வாள் வெட்டு சம்பவங்களும் வன்முறைகளும் சில சக்திகளின் நலன்களை முன்னிறுத்தி முன்னெடுக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதில் சட்டத்தை அமுல்படுத்தும் தரப்பினர் கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதனால் வாள்வெட்டு மற்றும் வன்முறைகளில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் கொண்டு வரப்பட்டுள்ளனர். அப்படியிருந்தும் ஆங்காகங்கே இவ்விதமான சம்பவங்கள் இடம்பெறவே செய்கின்றன.

இதன் விளைவாக மக்கள் எதிர்பார்த்த அச்சமற்ற சூழலை இந்த வாள்வெட்டு மற்றும் வன்முறைச் சம்பவங்கள் இல்லாமலாக்கியுள்ளன.

ஆனால் அச்சமற்ற சூழல்தான் வடக்கு உள்ளிட்ட அனைத்து மக்களதும் வேணவா. இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணமானது வாள்வெட்டு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களைக் கொண்ட பிரதேசமாக முன்னொரு போதுமே இருந்ததில்லை.

இலங்கையில் மிகவும் வளமான மண்வளத்தைக் கொண்டுள்ள வட மாகாணம், கல்வியில் முன்னேற்றமடைந்த சமூகத்தை கொண்டதொரு பூமியும் கூட. குறிப்பாக சுதந்திரத்திற்கு முன்பே இந்நாட்டில் கல்வியில் முன்னேற்றமடைந்த சமூகத்தை கொண்ட பிரதேசங்களில் ஒன்றாக வட மாகாணத்தின் யாழ்ப்பாணம் விளங்கியது.

இதன் பயனாக இந்நாட்டின் ஏனைய தமிழ் பேசும் பிரதேச மக்களின் கல்வி மற்றும் அறிவியல் முன்னேற்றத்திற்கு யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணம் அளப்பரிய பங்களிப்பை நல்கியுள்ளது. அவ்வாறான ஒரு பிரதேசத்தில் தற்போது உருவாகியுள்ள சூழல் அமைதி, சமாதானத்தை விரும்பும் அனைத்து தரப்பினரையுமே கவலை கொள்ளச் செய்துள்ளது.

அதேநேரம் கல்வியில் முன்பு போன்று முன்னேறிய நிலையை அடைந்து கொள்ளவும் வடமாகாணம் முயற்சிகளை முன்னெடுக்கவே செய்கிறது. அந்த முயற்சிகள் வெற்றிபெற வேண்டும். அதற்காக ஆக்கமும் ஊக்கமும் அளிக்க வேண்டும். அதன் ஊடாக வாள்வெட்டு, வன்முறைகள் அற்ற பிரதேசமாக வட மாகாண உருவாகும். அதுவே அமைதி, சமாதானத்தை விரும்பும் அனைத்து தரப்பினரதும் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT