Monday, April 29, 2024
Home » மானுடவியல்

மானுடவியல்

சுந்தரர்- சிவனின் அற்புதங்கள்

by damith
September 25, 2023 11:37 am 0 comment

இறைவன் தந்த ஊன்றுகோலை துணையாக கொண்டு, பழயனூர் சென்று இறைவனை மகிழந்து “முத்தா முத்திரவல்ல…“ என தொடங்கும் பதிகம் பாடி அங்கிருந்து காஞ்சிபுரம் வந்தடைந்தார். ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மனை முதலில் தரிசித்துவிட்டு, “திருக்கச்சி ஏகம்பனே” என்று மகிழ்ந்து பாடியபடி ஏகம்பரஸ்வரரை வீழ்ந்து வணங்கி, காமாட்சி அம்மனையும் வேண்டினார். வன்தொண்டரான சுந்தரரின் துன்பம் கண்டு சிவபெருமானிடம் சுந்தரருக்கு கருணைகாட்ட வேண்டினார் காஞ்சி காமாட்சி அன்னை. காமாட்சி அம்மையின் விருப்பத்தை ஏற்று நம்பியாரூரரின் இடது கண் பார்வையை இறைவன் தந்தார். அன்னையின் கருணையால் இறைவன் ஒரு பார்வையாவது தந்தாரே என்ற மகிழ்ச்சியில் “ஆலந்தானுகந்து அமுது செய்தானை” என்ற திருபதிகத்தை பாடினார் சுந்தரர். சில மாதங்கள் காஞ்சியில் தங்கினார். பிறகு திருவாரூர் தியாகராஜப் பெருமான் நினைவு வரவே மீண்டும் பயணத்தை தொடங்கினார். அங்கிருந்து வழியில் உள்ள பல ஊர்களுக்கு சென்று அங்கு இருக்கும் பல சிவாலயங்களுக்கு சென்று வணங்கி பதிகம் பாடினார். இடது கண் பார்வை கிடைத்த மகிழச்சி இருந்தாலும், தன் உடல் நோய் தீர்க்க இறைவன் எப்போது அருள் செய்வாரோ என நினைத்து ஏங்கினார் ஆருரர். திருத்துருத்தி என்கிற ஊரில் உள்ள சிவபெருமானை தரிசி்த்தார். தன் உடல்நோய் என்று தீருமோ என்றார். அதற்கு இறைவன், “நீ இந்தக் கோயிலின் வடபக்கத்தில் உள்ள குளத்தில் நீராடி வா உன் உடற்பிணி தீரும்.“ என்றார் இறைவன். அவ்வாறு குளத்தில் சுந்தரர் முழ்கி கரை சேர்ந்த போது, சுந்தரரின் உடல்பிணி மறைந்து சுந்தரர் எனும் பெயருக்கேற்ப சுந்தர உடலை பெற்றார். அங்கிருந்து தம் சொந்த ஊரான திருவாரூர் வந்தடைந்த சுந்தரருக்கு வலது கண் பார்வையும் தந்தருளினார் சிவபெருமான். சுந்தரர் திருவாரூர் கோயிலில் தங்கியிருந்தார். அதற்குள் சிலர், சுந்தரர் திருவொற்றியூரில் சங்கிலியாரை இரண்டாவது திருமணம் செய்த விஷயம் பரவையாருக்கு சொல்லிவிட்டார்கள். பரவையார் பெரும் ஆத்திரம் கொண்டார். நம்பியாரூரரை கண்டதும் அவரை உள்ளே அனுமதிக்காமல் கதவை சாத்தினாள் பரவை. நம்பியாரூரர் மனம் கலங்கி கோயிலுக்கு சென்று தன் நண்பரான சிவபெருமானிடம் முறையிட்டார். “நீ சங்கிலியை திருமணம் செய்து இருக்கக்கூடாது. செய்துவிட்டாய். இனி இதை பற்றி பேசியும் எந்த பயனும் இல்லை. சரி உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்?”. என்றார் இறைவன். “எனக்காக பரவையிடம் சமாதானம் பேச வேண்டும்” என்றார் சுந்தரர். தன் நண்பனுக்காக மகேஸ்வரனே பரவையை சந்திக்க அவள் வீட்டுக்கு கோயில் அர்ச்சகர் உருவில் சென்றார். கதவை தட்டினார் அர்ச்சகர். “யாரது” என்றபடி கதவை திறந்தாள் பரவை. அர்ச்சகரை பார்த்து, “என்ன விஷயம்?” என்றாள். (தொடரும்)

கலாநிதி சிவ
கு.வை.க. வைத்தீஸ்வர குருக்கள்
தலைவர், இந்துக் குருமார் அமைப்பு.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT