Wednesday, May 15, 2024
Home » மானுடவியல்

மானுடவியல்

by damith
April 29, 2024 10:22 am 0 comment

அந்தத் திருப்பதிகத்திலே “வேதியர்க் கந்தியுண் மந்திரமஞ் செழுத்துமே” என்றருளிச் செய்தார். பிராமணர்கள் அதைக்கேட்டு மனமகிழ்ந்து; அவருடைய திருவருளைத் தலைமேற்கொண்டு, வணங்கித் துதித்து உய்ந்தார்கள்.

ஆளுடையப்பிள்ளையார் தினந்தோருந் தோணியப்பரை வணங்கித் திருப்பதிகம் பாடிக்கொண்டு, அடியார்களோடும் இருக்குநாளிலே; திருநாவுக்கரசுநாயனார் அவருடைய மகிமையைக் கேள்வியுற்று, அவரை வணங்குவதற்கு நினைந்து, சீர்காழிக்குச் சமீபத்திலே வந்தருளினார். பிள்ளையார் அதைக்கேட்டுத் திருவுளமகிழ்ந்து, அடியார்கூட்டத்தோடும் அவரை எதிர்கொள்ளப் போனார். எதிரேவந்த திருநாவுக்கரசு நாயனார் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரை வணங்க; திருஞானசம்பந்த மூர்த்திநாயனாரும் அவரை வணங்கித் திருக்கோயிலுக்கு அழைத்துக் கொண்டு போய், சுவாமி தரிசனஞ்செய்வித்து; தம்முடைய திருமாளிகையிற்கொண்டு சென்று திருவமுது செய்வித்தார். சிலநாளாயினபின் திருநாவுக்கரசு நாயனார் பிறதலங்களை வணங்கும்படி செல்ல; திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருக்கோலக்கா வரைக்கும் அவரோடு சென்று, சீர்காழிக்குத் திரும்பிவிட்டார். அங்கே தோணியப்பர் மேலே பலவகைப்பட்ட திருப்பதிகங்களைப் பாடிக்கொண்டிருந்தார். அவைகளெல்லாவறையும் திருநீலகண்டப்பெரும்பாணர் விறலியாரோடும் பாடி, யாழில் இட்டு வாசித்துக் கொண்டு பிள்ளையாரோடு சீர்காழியில் இருந்தார்.

சிலநாட் சென்றபின், திருஞானசம்பந்தப் பிள்ளையார் தந்தையாரையும் மற்றைப் பிராமணர்களையும் நோக்கி, “இந்தத் தமிழ் நாட்டிலுள்ள சிவஸ்தலங்களெங்குஞ்சென்று சுவாமி தரிசனஞ்செய்து திருப்பதிகம் பாடிக்கொண்டு இங்கே வருவேன்” என்றார். தந்தையார் “நான் அருமையாக உம்மைப் பெற்றமையால் உம்மைப் பிரிந்திருக்கமாட்டேன். இருமைக்கும் இன்பம் பயக்கும் யாகமும் நான் செய்ய வேண்டும். இன்னுஞ் சிலநாள் உம்முடன் யாத்திரை செய்வேன்” என்றார். பிள்ளையார் அதற்கு இசைந்து, தோணியப்பரை வணங்கி விடைபெற்றுக்கொண்டு, தந்தையார் பின்வர, முத்துச்சிவிகை மேற்கொண்டு, முத்துக்குடை நிழற்ற, திருநீலகண்டப் பெரும்பாணரோடும் மற்றையடியார்களோடுஞ் சென்று, திருக்கண்ணார் கோயிலை வணங்கிக் கொண்டு, காவேரிக்கு வடபாலிலே மேற்றிசை நோக்கிப் போய், திருப்புள்ளிருக்குவேளூர், திருநன்றியூர், திருநீடூர், திருப்புன்கூர், திருமண்ணிப்படிக்கரை, திருக்குறுக்கை, திருவன்னியூர், திருப்பந்தணநல்லூர், திருமணஞ்சேரி, திருவெதிர்கொள்பாடி, திருவேள்விக்குடி, திருக்கோடிக்கா, கஞ்சனூர், திருமங்கலக்குடி, திருவியலூர், திருந்துதேவன்குடி, திருவின்னம்பர், வடகுரங்காடு துறை, திருப்பழனம், திருவையாறு, திருப்பெரும்புலியூர், திருநெய்த்தானம், திருமலபாடி, திருக்கானூர், திருவன்பிலாலந்துறை, திருமாந்துறை என்னுந் தலங்கடோறூம் போய், சுவாமிதரிசனஞ் செய்து திருப்பதிகம் பாடினார். (தொடரும்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT