Saturday, April 27, 2024
Home » கனடாவின் கண்டனத்துக்கு அடிபணியாமல் இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகள்!

கனடாவின் கண்டனத்துக்கு அடிபணியாமல் இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகள்!

by gayan
September 24, 2023 5:06 pm 0 comment

இந்தியா மீது கனடா குற்றச்சாட்டு வைத்து தற்போது தேவையில்லாமல் சிக்கி உள்ளது என்று சர்வதேச நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். கனடாவின் பயமுறுத்தல்களுக்கு அஞ்சாத இந்தியா கனடா மீது அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்தியா- கனடா இடையே தற்போது மோதல் உச்சம் ஏற்பட்டுள்ளது. இரண்டு நாடுகளும் மாறி மாறி குற்றச்சாட்டு வைத்துக்கொள்வதால் மோதல் நினைத்து பார்க்க முடியாத நிலையை அடைந்துள்ளது.

கனடா வைக்கும் குற்றச்சாட்டு:

காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜரை இந்திய அரசு கொன்றது என்று ட்ரூடோ குற்றச்சாட்டு வைத்து உள்ளதால் இரண்டு நாட்டு உறவு முறியும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் தேடப்பட்டு வந்த நிஜ்ஜார், ஜூன் 18 அன்று, கனடாவின் சர்ரேயில் உள்ள குருத்வாராவிற்கு வெளியே வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1990-களின் பிற்பகுதியில் கனடாவுக்குச் சென்ற நிஜ்ஜார், 2020-ல் இந்தியாவால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். கனடா, பிரதமர் ட்ரூடோ, இந்த கொலையை இந்தியர்கள் நடத்தி இருக்கலாம். கொலைக்கு பின் அவர்களே முக்கியமாக காரணமாக இருக்கலாம். இந்தியாவின் ஏஜெண்டுகள் மூலம் கொலை நடந்து இருக்கலாம் என்று தனது நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.

இதை தனது நாட்டின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் நம்புவதற்கு காரணங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். .கனடா மண்ணில் ஒரு கனடா குடிமகனைக் கொல்வதில் வெளிநாட்டு அரசாங்கத்தின் எந்தவொரு தலையீடும் இருப்பதாக உறுதியானால் அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இது கனேடிய இறையாண்மையில் மேற்கொள்ளப்படும் ஏற்றுக்கொள்ள முடியாத மீறலாகும். சுதந்திரமான, திறந்த மற்றும் ஜனநாயக சமூகங்களின் அடிப்படை விதிகளுக்கு முரணானது. இந்த நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம், என்றுள்ளார்.

இந்தியா குற்றச்சாட்டு:

கனடாவின் குற்றச்சாட்டுக்கு இந்தியா கடும் கண்டனம் மற்றும் மறுப்பு வெளியிட்டு உள்ளது. கனடா பிரதமரின் அறிக்கையையும், அவர்களின் வெளியுறவு அமைச்சரின் அறிக்கையையும் நாங்கள் பார்த்தோம், அதை கடுமையாக நிராகரிக்கிறோம். கனடாவில் எந்த வன்முறைச் செயலிலும் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகள் அபத்தமானது மற்றும் தவறானது. நாங்கள் ஜனநாயகவாதிகள். இந்த குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய்யானது, என்று இந்திய வெளியுறவுத்துறை தனது கண்டனத்தில் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், கலிஸ்தானி பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளிடம் இருந்து கவனத்தை மாற்ற முயல்கின்றன. காலிஸ்தானி தீவிரவாதிகள்தான் இப்போது பெரிய பிரச்சினையே. அவர்களுக்கு கனடாவில் அடைக்கலம் அளித்து, இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகின்றனர். அதை பற்றியே இப்போது பேச வேண்டும். இந்த விஷயத்தில் கனடா அரசின் செயலற்ற தன்மை கவலையாக உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் எங்கள் மீது குற்றச்சாட்டு வைப்பது சரியல்ல என்று இந்திய வெளியுறவுத்துறை கூறி உள்ளது.

இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா அடிபணியும் என்று நினைத்த கனடாவிற்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்தியா அடுத்தடுத்து 5 முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முதல் பதிலடியாக கனடா தூதரக அதிகாரி கேமரூன் மெக்கேவை வெளியேறும்படி இந்தியா உத்தரவிட்டு உள்ளது. கனடா இந்திய தூதரக அதிகாரி வெளியேற்றத்துக்கு இந்தியா பதிலடி கொடுக்கும் விதமாக இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.இந்தியாவிற்கு எதிரான கனடா பிரதமர் ட்ரூடோவின் கருத்துக்களைத் தொடர்ந்து, இந்திய தூதரக அதிகாரி பவன் குமார் ராயை கனடா வெளியேற்றியதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முதல்முறையாக கனடா இந்தியாவின் வெளியுறவுத்துறை தூதரக அதிகாரியை இப்படி வெளியேற்றி உள்ளது. இதனால் இரண்டு நாட்டு உறவு முறியும் அபாயம் உள்ளது. இதனால் இந்தியாவும் கனடாவின் வெளியுறவுத்துறை தூதரக அதிகாரியை வெளியேற்றும் முடிவை எடுத்துள்ளது.

அடுத்து, இந்திய உள் விவகாரங்களில் கனடா அதிகாரிகளின் ராஜாங்க தலையீடு இருப்பதாக இந்திய அரசாங்கம் குற்றச்சாட்டு வைத்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் பணிபுரியும் அதன் தூதர்களின் எண்ணிக்கையைக் குறைக்குமாறு கனடாவிடம் இந்தியா கேட்டுக் கொண்டது. இந்தியாவின் இராஜாங்க நடவடிக்கைகளில் கனடா செயல்படுவதை நாங்கள் அனுமதிக்க முடியாது. கனடா அதிகாரிகள் இங்கே அதிகம் உள்ளனர். அதனால் தூதர்களின் எண்ணிக்கையைக் குறைக்குமாறு கனடாவிடம் இந்தியா கேட்டுக் கொண்டது.

கனடா நாட்டை சேர்ந்தவர்களுக்கான விசா சேவைகளை இந்தியா நிறுத்தி உள்ளது. கனடா நாட்டை சேர்ந்தவர்களுக்கு இந்தியா வருவதற்கான விசா வழங்க இடைக்கால தடை விதிக்கப்பட்டு உள்ளது. கனடா பிரதமர் ட்ரூடோவின் குற்றச்சாட்டிற்கு இந்தியா இதன் மூலம் பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு உலக நாடுகளின் உதவியை கனடா இதில் நாடி இருந்த நிலையில் இந்தியா தைரியமாக கனடாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளது.

கனடாவில் வசிக்கும் இந்திய குடிமக்கள் மற்றும் அங்கு பயணம் செய்யும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்தியா உத்தரவிட்டு உள்ளது. கனடா இதில் ஆதாரங்களை சமர்ப்பிக்காமல் எங்களால் எதுவும் செய்ய முடியாது. ஆதாரம் இல்லாமல் கனடா வைக்கும் குற்றச்சாட்டுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT