Saturday, April 27, 2024
Home » இந்திய அரசு மீது கனேடிய பிரதமர் நேரடிக் குற்றச்சாட்டு
சீக்கிய தலைவரின் கொலை:

இந்திய அரசு மீது கனேடிய பிரதமர் நேரடிக் குற்றச்சாட்டு

by sachintha
September 20, 2023 3:34 pm 0 comment

கனேடிய சீக்கிய தலைவர் ஒருவரின் மரணத்தில் இந்திய அரசுக்கு பங்கு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியுள்ளார்.

ஹார்தீப் சிங் நிஜார் என்ற அந்த சீக்கிய தலைவர் கடந்த ஜூன் 18 ஆம் திகதி பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சீக்கிய கோயிலுக்கு வெளியில் சுட்டுக்கொல்லப்பட்டார். கார் வண்டியில் இருந்த நிஜார் இரு முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகளால் சுடப்பட்டார்.

அவரது மரணத்திற்கும் இந்திய அரசுக்கும் இடையில் ‘நம்பகமான’ தொடர்பை கனேடிய உளவுப் பிரிவினர் கண்டறிந்திருப்பதாக ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின்போதும் ட்ரூடோ இது பற்றி இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். எனினும் இது ‘அபத்தமானது’ என்று இந்தியா குறிப்பிட்டுள்ளது.

“கனேடிய மண்ணில் கனேடிய பிரஜை ஒருவரின் கொலையில் வெளிநாட்டு அரசு ஒன்றின் எந்த ஒரு தொடர்பும் ஏற்க முடியாத எமது இறைமையை மீறும் செயலாகும்” என்று ட்ரூடோ கடந்த திங்கட்கிழமை (18) கனடா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ட்ரூடோவின் இந்த கூற்றை நிராகரிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் இந்தியா இராஜதந்திரியான பவன் குமார் ராயை கனடா கடந்த திங்கட்கிழமை நாடுகடத்தியதாக வெளியுறவு அமைச்சர் மெலனி ஜொலி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்தியாவில் உள்ள கனேடிய மூத்த இராஜதந்திரி ஒருவரை ஐந்து நாட்களுக்குள் வெளியேறும்படி இந்தியா உத்தரவிட்டுள்ளது.

முன்னணி சீக்கிய தலைவரான நிஜார் இந்தியாவின் பஞ்சாப் பிராந்தியத்தில் சுதந்திர சீக்கிய தாய் நாடு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் பகிரங்க பிரசாரம் நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பிரிவினைவாத ஆயுதக் குழு ஒன்றுக்கு தலைமை வகிப்பதாகக் கூறி இந்தியா அவரை ஒரு பயங்கரவாதியாக அறிவித்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT