Saturday, April 27, 2024
Home » மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கொள்ளுப்பேரனுக்கு மட்டக்களப்பில் கௌரவம்

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கொள்ளுப்பேரனுக்கு மட்டக்களப்பில் கௌரவம்

by Prashahini
September 5, 2023 11:27 am 0 comment

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கொள்ளுப்பேரனும், பிரபல தென்னிந்திய பாடகரும், இசையமைப்பாளரும், பொறியியலாளருமான ராஜ்குமார் பாரதிக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவினால் நேற்று (04) கௌரவம் வழங்கப்பட்டது.

மீன்பாடும் தேன் நாட்டுக்கு வருகை தந்த ராஜ்குமார் பாரதி, மகாகவி சுப்பிரமணியாரின் மகளான தங்கம்மாவின் புதல்வி லலிதா பாரதிக்கு மகனாகப் பிறந்தவர். இவர் இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பாடல் பொறியியலாளரும் இந்தியாவின் பிரபல கர்நாடக இசைக் கலைஞராகவும் பின்னணிப் பாடகராகவும் செயற்பட்டு வருகிறார்.

மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த மகாகவியின் பேரன் பாரதி கண்ட புதுமைப் பெண்ணை இங்கு காண்பதாகவும், இவ்விடத்தை பாரதி, பார்த்தால் தான் கண்ட இப்புதுமைப் பெண்களை பார்த்து மகிழ்ந்திருப்பார் என்றும் தெரிவித்தார்.

இதன்போது மகாகவியின் வாழ்க்கை வரலாற்றில் இடம்பெற்ற சுவாரஷ்யமான நிகழ்வுகளை கொள்ளுப்பேரன் பாடலாகவும்,கதையாகவும் கூறி மீட்டினார். இதன்போது மாவட்ட அரசாங்க அதிபரினால் சிறப்பு கௌரவம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி புளோரன்ஸ் பாரதி கெனடி உட்பட அதிதிகள் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு குறூப் நிருபர் – ரீ.எல். ஜவ்பர்கான்

 

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT