Sunday, April 28, 2024
Home » ஆட்ட நிர்ணய விவகாரத்தில் குற்றவியல் குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார் சச்சித்ர

ஆட்ட நிர்ணய விவகாரத்தில் குற்றவியல் குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார் சச்சித்ர

by sachintha
August 14, 2023 6:01 am 0 comment

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனநாயக்கவிற்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டை சுமத்துமாறு விளையாட்டு அமைச்சின் சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. 2019இன் 24ஆம் இலக்க விளையாட்டு சட்டத்துடன் தொடர்புபட்ட குற்றங்களை தடுக்கும் சட்டத்தின் அடிப்படையில் போதுமான ஆவணங்கள் வெளிப்பட்டிருப்பதாக அது தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் ஊழல் எதிர்ப்புப் பிரிவு பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷல் உள்ளூர் கிரிக்கெட் அதிகாரிகள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்திய நிலையிலேயே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியில் இடம்பிடித்த சுழற்பந்து வீச்சாளரான சச்சித்ர சேனநாயக்க 2020இல் நடைபெற்ற முதலாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின்போது அதில் பங்கேற்கும் இரு வீரர்களை டுபாயில் இருந்து தொலைபேசியில் அழைத்து ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுத்த முயன்றதாக குறிப்பிடப்பட்டது. அது இலங்கையில் குற்றவியல் குற்றம் ஒன்றாக உள்ளது.

இந்த குற்றச்சாட்டை மறுத்த சச்சித்ர தன் மீது அவதூறு சுமத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த செய்திக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர் கடுமையாக மறுத்து வருகிறார்.

இது தொடர்பில் அவர் 2020ஆம் ஆண்டு வெளியிட்ட அறிவிப்பில், தனது கிரிக்கெட் மற்றும் குடும்பத்தை அவமதிக்கும் வகையிலான இவ்வாறான குற்றச்சாட்டுகளை வெளியிட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாக குறிப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும் சிறப்பு புலனாய்வு பிரிவில் இருந்து கிடைத்த ஆதாரங்களை ஆய்வு செய்த சட்டமா அதிபர் திணைக்களம், நீதிமன்ற உத்தரவு இன்றியே குறித்த சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டவரின் கைபேசியை பெறவும் தொலைபேசி சேவை வழங்குநரிடம் இருந்து நேரடியாக தொலைபேசி அழைப்பு விபரத்தை பெறவும் அதிகாரம் இருப்பதாக அறிவுறுத்தியது.

இதில் சேனநாயக்க தனது இரு கைபேசிகளை விசாரணையாளர்களிடம் கையளித்தபோதிலும் அவை அவருக்கு சொந்தமானவை அல்ல என்பது கண்டறியப்பட்டது. அவர் தனது சொந்த கைபேசியை சமர்ப்பிக்காமல் புலனாய்வாளர்களை தவறாக வழிநடத்திய நிலையில், குறித்த வீரர்களுடன் அவர் உரையாடியதற்கான ஆதாரங்கள் ஐ.சி.சியின் ஊழல் எதிர்ப்பு பிரிவிடம் உள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

உள்ளூர் விசாரணையாளர்கள் தவிர, ஐசிசியின் ஊழல் எதிர்ப்பு பிரிவும் இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஊழல் குற்றச்சாட்டில் தான் கைது செய்யப்படுவதை தடுப்பதற்கு சச்சித்ர சேனநாயக்க கடந்த 2022 மார்ச் மாதம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திடம் முன் பிணை கோரியபோதும் நீதிமன்றம் அதை நிராகரித்தது.

2019இன் விளையாட்டு தொடர்பான குற்றங்களை தடுக்கும் சட்டத்தில் விளையாட்டு ஊழல் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றாகும். இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதில் இருந்து அதன் கீழ் இதுவே முதல் வழக்காக இடம்பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சச்சித்ர சேனநாயக்க 100 மில்லியன் இலங்கை ரூபாவுக்கு மேற்படாத அபராதம் அல்லது 10 ஆண்டுகளுக்கு மேற்படாத சிறைத் தண்டனை அல்லது சிறை மற்றும் அபராதம் ஆகிய இரு தண்டனைகளுக்கும் முகம்கொடுக்க வேண்டி ஏற்படும்.

38 வயதான சச்சித்ர இலங்கை அணிக்காக 73 மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 78 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக 2013–2014 பருவத்தில் அவர் ஆடிய ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட்டை கூட பெற தவறினார்.

ஒருசில ஆண்டுகளுக்கு முன் ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுகள் இலங்கையில் பரவலாக இருந்ததோடு ஒரு சந்தர்ப்பத்தில் சுமார் 22 சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றன. எவ்வாறாயினும் சில முன்னணி கிரிக்கெட் வீரர்கள் மீது தடை விதிக்கப்பட்டதை அடுத்து வீரர்களின் நடத்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கு இடமான செயல்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் அளிப்பதிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த விசாரணைகள் வளர்ந்து வரும் அச்சுறுத்தலைச் சமாளிக்க கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்த விளையாட்டு அமைச்சை கட்டாயப்படுத்தியது. விளையாட்டு தொடர்பான ஊழல் தொடர்பில் சட்டத்தை இயற்றிய முதல் தெற்காசிய நாடாக இலங்கை உள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT