Sunday, May 12, 2024
Home » மலையக பெருந்தோட்ட மக்களின் முன்னேற்றத்தில் கூடுதல் அக்கறை

மலையக பெருந்தோட்ட மக்களின் முன்னேற்றத்தில் கூடுதல் அக்கறை

by sachintha
August 14, 2023 6:00 am 0 comment

இலங்கையின் பெருந்தோட்டங்களில் தொழில் புரிவதற்காக தென்னிந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் இந்திய வம்சாவளி மக்கள் ஆவர். அவர்கள் மலையகப் பெருந்தோட்ட தமிழ் மக்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

இருநூறு வருடங்களுக்கு முன்னர் பிரித்தானிய ஏகாதிபத்திய காலப்பகுதியில் இங்கு அழைத்து வரப்பட்ட இம்மக்கள் இந்நாட்டின் தேயிலை, இறப்பர் பெருந்தோட்டப் பிரதேசங்களில் வாழ்கின்றனர்.

இந்நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக அளப்பரிய பங்களிப்பு நல்கிவரும், இம்மக்கள் தாம் பணியாற்றும் துறைகள் ஊடாக இந்நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டி வருவதில் முக்கிய பங்காற்றுகின்றனர்.

இந்நாட்டின் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைப் பிரதேசங்களில் பணியாற்றவென இந்நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட இம்மக்களின் மூதாதையினரின் பரம்பரையில் ஒரு பகுதியினர் இன்னும் பெருந்தோட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள லயன் அறைகளில்தான் வாழும் நிலை நீடிக்கிறது.

இம்மக்கள் இந்நாட்டின் குடியுரிமையைப் பெற்றவர்களாக இருந்த போதிலும், அவர்களில் ஒரு தொகுதியினருக்கு இன்னும் இம்மண்ணில் காணிக்கான உரிமை கிடைக்கப்பெறாத நிலையே நீடித்து வருகிறது. இவை மாதத்திரமல்லாமல் பல்வேறு தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் கொண்டுள்ளவர்களாகவே இந்த மக்கள் இருந்து கொண்டிருக்கின்றனர்.

இம்மக்கள் இந்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு இருநூறு வருடங்களாகியுள்ள அதேநேரம், இந்நாடு சுதந்திரமடைந்து 75 வருடங்களும் நிறைவடைந்துள்ளன. ஆன போதிலும் கூட இம்மக்களில் ஒரு பகுதியினர் ஏனைய சமூகங்களின் மட்டத்திற்கு இன்னும் முன்னேற்றம் அடையாதவர்களாகவே இருக்கின்றனர்.

இந்நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக அளப்பரிய பங்களிப்பை நல்கி வரும் இம்மக்களை இந்நாட்டின் ஏனைய சமூகங்களின் மட்டத்திற்கு மேம்படுத்த வேண்டும். இது மிகவும் அவசியமானது என்பது பரவலாக உணரப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், மலையகப் பெருந்தோட்ட மக்கள் இந்நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இருநூறு வருடங்களின் நிறைவை நினைவுகூரும் வகையில் பல நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணிகளும் ஊர்வலங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ள அதேநேரம், இந்திய வம்சாளி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளும் தொழில் சங்கங்களும் கூட பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றன.

இந்நிலையில் மலையகப் பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான பாராளுமன்ற ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதம் கடந்த வியாழக்கிழமை (10ஆம் திகதி) நடத்தப்படுள்ளது. இவ்விவாதத்தின் ​போது பெருந்தோட்ட மக்களின் தற்போதைய நிலைமை, அவர்களது தேவைகள், எதிர்பார்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இவ்விவாதத்திற்கு பதிலளித்த பெருந்தோட்ட அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக சட்டரீதியான பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இது உண்மையில் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.

இதேவேளை, மலையகப் பெருந்தோட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களான அமைச்சர் ஜீவன் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் ஏ. அரவிந்தகுமார், பாராளுமன்ற உறுப்பினர் எம். இராமேஸ்வரன் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கடந்த வெள்ளியன்று சந்தித்து பெருந்தோட்ட மக்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

இச்சமயம் ஜனாதிபதி, ‘மலையக மக்களைத் தொடர்ந்தும் மலையகத் தமிழர்களாகவோ அல்லது தோட்டப்புற மக்களாகவோ வாழ வைப்பதற்குப் பதிவாக இலங்கை சமூகத்தில் ஏனைய மக்களுடன் ஒன்றிணைப்பதே எமது எதிர்பார்ப்பாகும். இது சவால் மிக்க பணி என்றாலும் இதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படுவது அவசியம். நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த இருநூறு வருடங்களாக உழைத்துவரும் இம்மக்கள், 1983 கலவரத்தின் பின்னரும் கூட பிரிவினைவாதப் போக்கையோ அல்லது ஆயுதம் ஏந்திய பயங்கரவாதச் செயற்பாடுகளையோ கைகொள்ளவில்லை. அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் மீதும் தெற்கு சமூகத்தின் மீதும் நம்பிக்கையுடன் செயற்படுவர்கள்’ என்று கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் இந்தக் கருத்து மலையக மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் நிச்சயம் ஏற்படுத்தும். உண்மையில் அந்த மக்களை தனிக்குழுவாக வாழ வைப்பதற்கு பதிலாக இந்நாட்டின் ஏனைய சமூகங்களுடன் ஒன்றிணைப்பது மிகவும் அவசியம். அம்மக்களின் சமூக பொருளாதார மறுமலர்ச்சிக்கு நிச்சயம் இது வித்திடும். இதனை உறுதிபடக் கூறலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT