Thursday, May 9, 2024
Home » சிதைவடைந்த நிலையில் சிசுவின் சடலம் மீட்பு

சிதைவடைந்த நிலையில் சிசுவின் சடலம் மீட்பு

- மாநகர ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்று அழைப்பு

by Prashahini
August 11, 2023 9:56 am 0 comment

யாழ்ப்பாணம், ஆறுகால்மடம் பகுதியில் தலையுடன் கூடிய பகுதிகளவிலான சிசுவொன்றின் சடலம் ஒன்று நேற்று (10) மீட்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள வீடொன்றின் பின்புறமாக குறித்த சிசுவின் சடலம் இனங்காணப்பட்டு, வீட்டாரால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், சடலம் மீட்கப்பட்ட காணிக்கு மிக அண்மையில் கோம்பயன் மணல் இந்து மயானம் உள்ள நிலையில் மயானத்தில் இருந்து குறித்த உடல் பகுதிகள் இங்கு கொண்டுவரப்பட்டு இருக்கலாம் எனும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்த சில நாட்களில் உயிரிழக்கும் குழந்தைகளின் சடலங்கள் கோம்பயன்மணல் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படுவதாகவும், அவ்வாறு நல்லடக்கம் செய்யப்பட்ட சடலம் உரிய முறையில் புதைக்காது விட்டமையால் நாய்கள் கிளறி இருக்கலாம் என வலுவான சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் மயானத்தின் பின்புறம் சில கிடங்குகள் காணப்படுகின்றன.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் சிசுவின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக யாழ்.நீதவான் நீதிமன்றில் எதிர்வரும் 16ஆம் திகதி முன்னிலையாகுமாறு, யாழ்.மாநகர சபை ஆணையாளர் , அப்பகுதிக்கான பொது சுகாதார பரிசோதகர் மற்றும் கோம்பயன்மணல் மயானத்திற்கு பொறுப்பான உத்தியோகஸ்தர் ஆகிய மூவருக்கு கட்டளை வழங்கப்பட்டுள்ளது.

நேற்று யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர். அதன்போது போதனா வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத சடலங்கள், சத்திர சிகிச்சையின் போது அகற்றப்படும் உடல் உறுப்புக்கள் என்பவை மாநகர சபை ஊடாக கோம்பயன்மணல் மயானத்திலையே புதைக்கப்பட்டு வந்துள்ளது.

அவ்வாறு புதைக்கப்படுவதை மாநகர சபை பணியாளர்கள் உரிய முறையில் புதைப்பதில்லை. அதனால் நாய்கள் உள்ளிட்ட விலங்குகள் அவற்றை இழுத்து செல்வதாகவும், அதனால் அப்பகுதியில் துர்நாற்றங்கள் வீசுவதால், அப்பகுதி மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார், ஊர் மக்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்.விசேட நிருபர்
பருத்திதுறை விசேட நிருபர்

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT