கொரோனோ வைரஸ் அவுஸ்திரேலியா, நேபாளில்!

கொரோனோ வைரஸ் அவுஸ்திரேலியா, நேபாளில்!-Corona Virus Infection to Australia Nepal

- தெற்காசியாவில் முதல் நாடு பாதிப்பு
- தற்போது வரை 41 பேர் பலி
- சீன புதுவருடம் இன்று; கொண்டாட்டங்கள் இரத்து

கொரோனா வைரஸ்:
வைரஸ் கூட்டமான இது, பாலூட்டிகள், பறவைகளில் தொற்றிற்குள்ளாகின்றது.
மனிதனுக்கு பாதிப்பு:
இவ்வைரஸினால் சுவாச தொற்றுகள் ஏற்படுவதோடு, அது பெரும்பாலும் பாதிப்பற்றவையாக காணப்பட்டாலும், மிக அரிதாக மரணத்தையும் ஏற்படுத்துகின்றது
விலங்குளில் பாதிப்பு:
இந்நோயினால் மாடு, பன்றிகளுக்கு வயிற்றோட்டம் ஏற்படுவதோடு, கோழிகளுக்கு மேல்பகுதி சுவாச நோய் ஏற்படுகின்றது.
மருந்துகள்:
இந்நோயை தடுப்பதற்கு அல்லது கடுப்படுத்துவதற்கு, இது வரை எவ்விதமான தடுப்பூசிகளோ, வைரஸ் எதிர்ப்பு மருந்துகளோ கண்டுபிடிக்கப்படவில்லை.

தற்போது உலகம் முழுவதும் பேசப்பட்டு வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி அவுஸ்திரேலியா மற்றும் நேபாளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரோனா வைரஸ் உருவெடுத்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள சீனாவின் வூஹானிலிருந்து வந்த 32 வயதான நேபாள நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இவ்வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனோ வைரஸ் அவுஸ்திரேலியா, நேபாளில்!-Corona Virus Infection to Australia Nepal

குறித்த நபர், தற்போது கத்மண்டுவில் உள்ள தொற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தடுப்பு நடவடிக்கை
உலகில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள ‘கொரோனா' ஆட்கொல்லி வைரஸ் நோய்த் தொற்று நாட்டுக்குள் பரவுவதைத் தடுப்பதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நேற்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் குறித்து இந்தியாவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளது. சீனாவில் இருந்து குறித்த நோய் அறிகுறிகளுடன் வந்த 11 இந்தியர்கள் தடுத்து வைத்து சோதனைக்குட்படுத்தப்பட்டு வருவதாக, இந்திய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அவர்களில் 7 பேர் கேரளாவையும், ஏனையவர்கள் மும்பை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவிலும் இந்நோய்தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில் சீனாவில் இந்நோய்த் தொற்றின் காரணமாக 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளி ஒருவர் அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சீனாவைச் சேர்ந்த குறித்த நபர், கொரோனா வைரஸ் தொற்றிற்கு உள்ளான நோயாளி என, விக்டோரியா சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரில் இரு வாரங்கள் தங்கியிருந்துள்ள குறித்த நபர், கடந்த ஜனவரி 19ஆம் திகதி மெல்பேர்னுக்கு வந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த நோயாளி தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அது தொடர்பில் அச்சம் கொள்ள தேவையில்லை என்வும் அந்நாட்டு சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

சீன புதுவருட கொண்டாட்டங்கள் இரத்து
சந்திரனை மையமாகக் கொண்ட சீன புதுவருடம் இன்று (25) அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், அந்நாட்டில் பாரிய கொண்டாட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், நோய்த் தொற்றுக்குள்ளான வூஹான் நகரம் உள்ளிட்ட 33 நகரங்களின் வெளித் தொடர்புகளை முடக்கும் வகையில் அவை மூடப்பட்டுள்ளன.

அந்நாட்டில் தற்போது வரை 41 பேர் இந்நோய்த் தொற்றினால் உயிரிழந்துள்ளதோடு, 1,287 பேர் இத்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...