பயமுறுத்தும் மர்ம வைரஸ்

முன்னர் கண்டறியப்படாத ஒரு மர்ம வைரஸ்! நுரையீரலை தாக்கி நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தி உயிரைக் கூட பறித்துவிடலாம். கடந்த டிசம்பர் மாதம் இந்த மர்ம வைரஸ் சீனாவின் வுஹான் நகரிலே முதல்முறை கண்டுபிடிக்கப்பட்டபோது சற்று பயந்தார்களே ஒழியே பெரும் ஆபத்தாக பார்க்கவில்லை.  

எமக்கு வரும் சளி முதல் எயிட்ஸ் வரை எல்லாமே வைரஸ்தான். எனவே உலகில் ஏகப்பட்ட வைரஸ்கள் இருக்கின்றன. சீனாவில் தொற்றிய வைரஸ் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாதது பெரிய குற்றமல்ல. ஆனால் இன்று பிரச்சினை அத்தனை சாதாரணமாகத் தெரியவில்லை. 

நேற்று வரை வைரஸினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஆறாக உயர்ந்திருக்கிறது. பத்து இருபது தாண்டி நூற்றுக்கணக்கானவர்கள் வைரஸினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். போகின்றபோக்கை பார்த்தால் இந்த எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கலாம்.  

வுஹான் நகரில் ஆரம்பித்த இந்த மர்ம வைரஸ் தலைநகர் பீஜிங் உட்பட பிரதான நகரங்களுக்கு பரவி இருக்கிறது. தாய்லாந்து, ஜப்பான், தென் கொரியா நாடுகளிலும் வைரஸ் தொற்றியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார்கள். பிராந்தியம் எங்கும் இப்போது லேசான பயம் தொற்றியிருக்கிறது.  

இந்த வைரஸ் பற்றி இப்போதைக்கு ஆரம்பக் கட்ட புரிதலே கிடைத்திருக்கிறது. நோய் தொற்றியவர்களிடம் இருந்து பெற்ற மாதிரிகளைக் கொண்டு ஆய்வுகூடத்தில் பார்த்தபோது இது முன்னர் தெரிந்த வைரஸ் ஒன்றின் புது உறவுக்காரர் போல் இருப்பதாக சீனா மற்றும் உலக சுகாதார அமைப்பு முடிவுக்கு வந்திருக்கிறது.

கொரோனா வைரஸ் என்பது ஒரு மிகப்பெரிய வைரஸ் குடும்பம். இப்போது பயமுறுத்தும் வைரஸும் இந்த கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருக்கிறது.  

இதுவரை காலமும் கொரோனா வைரஸின் ஆறு வகைகளே மனிதனை தொற்றும் என விஞ்ஞானிகள் கூறி வந்தார்கள். இப்போது திரிபுற்றிருக்கும் இந்த மர்ம வைரஸ் ஏழாவது வகை.  

கடுமையான திடீர் சுவாச நோய் என்று கூறினால் அதிகம் பேருக்குத் திரியாது, சார்ஸ் என்றால் புரிந்துவிடும். 2003ஆம் ஆண்டு சீனாவில் ஏற்பட்ட சார்ஸ் வைரஸ் 37நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. எட்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்புற்ற இந்த நோயினால் 774பேர் உயிரிழந்தார்கள்.  

கொரோனா வைரஸான சார்ஸுக்கும் 17ஆண்டுகளின் பின் உருவாகி இருக்கும் இந்த புதிய வைரஸுக்கும் நெருங்கிய உறவு இருப்பதாக இப்போதைக்கு ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கும் உண்மை. அதாவது சிறு காய்ச்சலில் ஆரம்பிக்கும் இந்த நோய் கடைசியில் உயிரைக் கொன்றுவிடும்.

அதாவது பரிணாமத்தில் மிக வேகமாக மரபணு மாற்றங்களை மேற்கொண்டு புதிது புதிதாக உருமாறி பண்புமாறித் தாக்குவதில் வைரஸ் கை தேர்ந்தது. எனவே வைரஸ்கள் எப்போது, எப்படித் தாக்கும் என்று எவராலும் கணித்துக் கூற முடியாது.  

புதிய வைரஸ்களை எங்கு, எப்போது வேண்டுமானாலும் கண்டுபிடிக்கலாம். அவை ஓர் இனத்திற்கு இடையே தாவிச்செல்லும். அவைகள் மனிதனால் அவதானிக்கப்படாமல் இருக்கலாம். எனவே விலங்குகளிடம் இருந்தே பெரும்பாலும் ஆபத்தான வைரஸ்கள் மனிதர்களை தொற்றுகிறது. சார்ஸ் புனுகுப் பூனையிடம் இருந்து மனிதனை தொற்றியது.  

2012ஆம் ஆண்டு ஏற்பட்டு 858பேரின் உயிரைப் பறித்த மத்திய கிழக்கு சுவாச நோயான மார்ஸ் ஒற்றை திமில் ஒட்டகத்திடம் இருந்து மனிதனுக்குத் தாவியது.  

புதிய வைரஸ் எங்கிருந்து மனிதனை தொற்றியது என்பது கண்டறியப்படவில்லை. ஆனால் வுஹான் நகரில் இருக்கும் தென் சீன கடலுணவு மொத்த விற்பனை சந்தையில் இருந்து இந்த வைரஸ் தொற்றி இருக்கலாம் என்ற சந்தேகிக்கப்படுகிறது.  

பெலுகா திமிங்கிலம் போன்ற கடல்வாழ் பாலூட்டி உயிரினங்கள் கொரோனா வைரஸை ஏந்தி இருப்பது தெரிந்தது. என்றாலும் வுஹான் சந்தையில் கோழி, வெளவால், முயல், பாம்பு உட்பட காட்டு விலங்குகளின் இறைச்சியும் விற்கப்படுவதால் இந்த வைரஸ் எப்படித் தொற்றியது என்பது பற்றி முடிவுக்கு வருவதில் ஆய்வாளர்கள் சிரமப்படுகிறார்கள்.  

இவ்வாறான வைரஸ்கள் சீனாவில் தொற்றுவதற்கான சாத்தியம் அதிகம் இருக்கிறது. மக்கள் செறிவு அதிகம், வைரஸ்களை தாங்கிய விலங்குகளுடன் தொடர்பு என்று புதிய வைரஸ்கள் இலகுவாக தொற்றுவதற்கு அங்கே சாதகமான சூழல் அதிகம்.  

மற்றது உயிர்கொல்லி வைரஸ்கள் அங்கே வேகமாக பரவும் ஆபத்தும் அதிகம் இருக்கிறது. போதாக்குறைக்கு சீனாவில் சந்திர வருடம் இந்த வாரம் கொண்டாடப்படுகிறது. இதற்காக மக்கள் தமது சொந்த பந்தங்களை பார்க்க வீடுவாசல்களுக்குப் போவது வழக்கம். இவ்வாறு மில்லியன் கணக்கான மக்கள் ஒரு நகரில் இருந்து மற்றொரு நகருக்கு இடம்பெயர்வார்கள். அதாவது ஆண்டில் உலகில் இடம்பெறும் மிகப்பெரிய இடம்பெயர்வு இது தான்.  

இதன்போது நோய் மேலும் பல நகரங்கள், பிரதேசங்களுக்கு பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதனை தடுக்க சீன நிர்வாகம் நடவடிக்கை எடுத்தபோதும் அது முழுமையாக முடியுமான காரியமாக இல்லை.  

போதாக்குறைக்கு இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தொற்றுவது உறுதியாகி இருக்கிறது. எனவே வைரஸ் தொற்றிய ஒருவரின் இருமல், தும்மால் மற்றொருவருக்கு இந்த வைரஸை கடத்துவதற்கு போதுமானது. என்றாலும் வைரஸ் தொற்றும் வேகம் பற்றி இன்னும் முழுமையான கணிப்பு ஒன்று செய்யப்படவில்லை. வைரஸின் தன்மை, அதற்கான சிகிச்சை முறைகள், மருந்துகள், தடுப்பு நடவடிக்கைகள் என்று எதுவும் தெரியாதது இதன் மிகப்பெரிய ஆபத்து.  

இப்போதைக்கு வைரஸ் தொற்றியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிலர் சுகம்பெற்று வெளியேறி இருப்பது ஆறுதல் செய்தி.  

இப்படித்தான் எபோல வைரஸ் பற்றியும் எவரும் பெரிதாக கவனிக்கவில்லை. ஆனால் 2013ஆம் ஆண்டு மேற்கு ஆபிரிக்காவை தொற்றிய இந்த வைரஸ் இரண்டு ஆண்டுகள் தனது பயங்கரத்தை காட்டி பதினொராயிரத்துக்கும் அதிகமானவர்களை கொன்றுவிட்டு அடங்கியது.  

எபோலா வைரஸ் தோன்றி தனது சாகசங்களை காட்டும்வரை உலக சுகாதார அமைப்பு உட்பட உலக நாடுகள் வெறும் வேடிக்கை பார்க்கும் வேலைய அழகாகச் செய்தது. அதற்கு பின்னரே பின்னங்கால் பட படபடத்தது. கடைசியில் ஆயிரக்கணக்கான உயிர்கள் போனதுதான் மிச்சம். இந்த மர்ம வைரஸிலாவது இந்தப் பாடத்தை உலக நாடுகள் கற்க வேண்டுமானால் இதுவே சரியான தருணம்.

எஸ். பிர்தெளஸ்


Add new comment

Or log in with...