சீனாவில் கொரோனா வைரஸ் பரவிய வுஹான் நகருக்கு பூட்டு

போக்குவரத்துகள் நிறுத்தம், பொது நிகழ்வுகள் ரத்து

புதிய கொரோனா வைரஸ் தோற்றத்தின் மையம் என நம்பப்படும் 11 மில்லியன் மக்கள் வசிக்கும் சீனாவின் வுஹான் நகர் ஏனைய பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த வைரசினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்திருப்பதோடு வைரஸ் தொற்றியோர் எண்ணிக்கை சுமார் 600 ஆக உயர்ந்திருக்கும் நிலையில் நோய் பரவலை தடுப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சந்திர புத்தாண்டுக்கான ஒருவார விடுமுறை நாளை ஆரம்பமாகவிருக்கும் நிலையில் மில்லியன் கணக்கான சீனர்கள் தமது சொந்த ஊர்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு பயணிப்பதால் புதிய வைரஸ் பரவும் வேகம் அதிகரிக்கலாம் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

முன்னர் அறியப்படாத இந்த வைரஸ் கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் மத்திய நகரான வூஹானில் உள்ள சட்டவிரோதமான காட்டு விலங்குகளை விற்கும் சந்தையில் இருந்து பரவியதாக நம்பப்படுகிறது.

பீஜிங், சங்காய் மற்றும் ஹொங்கொங் ஆகிய பிரதான நகரங்களிலும் இந்த வைரஸ் தொற்றிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதேபோன்று அமெரிக்கா உட்பட பல நாடுகளிலும் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் நிலையில் உலகெங்கும் பரவும் ஆபத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வுஹான் நகருக்கான அனைத்து நகர்புற போக்குவரத்துகளும் நிறுத்தப்படுவதாகவும் வெளிச்செல்லும் விமானங்கள் இடைநிறுத்தப்படுவதாகவும் அந்த நகர நிர்வாகம் அறிவித்துள்ளது. என்னும் கெடு முடிந்த பின் சில விமான சேவைகள் இயங்கியதாக உள்நட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வுஹானின் பஸ் போக்குவரத்து மையங்கள், ரயில் நிலையம் ஆகியன வெறிச்சோடி இருக்கம் நாட்சிகளை சீன ஊடகங்கள் ஒளிபரப்புச் செய்துள்ளன. அந்த நகரில் இருந்து மக்களுக்கு வெளியேற வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

நகருக்கான வீதி மார்க்கங்களை துண்டிக்கும் வகையில் நெடுஞ்சாலை நுழைவாயில்களும் மூடப்பட்டிருப்பதாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு படையினர் பிரதான நெடுஞ்சாலைகளில் ரோந்து செல்வதாக குடியிருப்பாளர் ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

மக்கள் மருத்துவச் சோதனைக்காக மருத்துவமனைகளில் வரிசையில் காத்திருப்பதோடு விநியோகங்களை பெறுவதில் சிரமம், கடைகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு மற்றும் பொட்ரோலுக்காக மக்கள் வரிசையில் காத்திருப்பு என்று வுஹான் நகர் தனிமைப்படுத்தப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக வுஹான் நகரில் விசேட மத்திய நிலையமொன்றை அமைத்துள்ள அதிகாரிகள் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகளுக்காக இந்த நிலையத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

வுஹான் நகரில் உள்ள மக்களை பொதுமக்கள் அதிகமாக காணப்படும் இடங்களுக்கு செல்லவேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பலர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளை தவிர்க்குமாறும் சீனா அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஹோட்டல்களையும் சுற்றுலாப்பயணிகளுக்கான இடங்களையும் பெருமளவில் மக்கள் கூடுவதற்கான நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்ளுமாறு சீன அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ள அதேவேளை நூலகங்கள், அருங்காட்சியகங்கள் போன்றவை தங்கள் பொது நிகழ்வுகளை நிறுத்திக்கொண்டுள்ளன.

கடந்த புதன்கிழமை முடிவில் புதிய வைரஸ் தொற்றிய சம்பவங்கள் 571 பதிவாகி இருப்பதோடு 17 பேர் உயிரிழந்திருப்பதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. வைரஸ் தொற்றிய சந்தேகம் கொண்ட 393 சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக அது முன்னாக குறிப்பிட்டது.

தாய்லாந்தில் நான்கு சம்பவங்கள் அதேபோன்று ஜப்பான், தென் கொரியா, தாய்வான் மற்றும் அமெரிக்காவில் தலா ஒரு சம்பவம் என்று உலகெங்கும் எட்டு புதிய நோய் தொற்றிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

எனினும் ஜனவரி 18 ஆம் திகதியாகும்போது மாத்திரம் வுஹானில் மொத்தம் 4,000 வைரஸ் பாதிப்பு சம்பவங்கள் பதிவாகி இருப்பது கணக்கெடுக்கப்பட்டுள்ளதாக லண்டன் இம்பீரியல் கல்லுௗரி புதன்கிழமை வெளியிட்ட தகவலில் கூறியுள்ளது.

கடந்த 2002–03 ஆம் ஆண்டுகளில் உலகெங்கும் குறிப்பாக ஆசிய நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி சுமார் 800 உயிர்களை பறித்த சார்ஸ் வைரஸ் போன்ற அச்சத்தை இந்த புதிய வைரஸ் எற்படுத்தியுள்ளது. எனினும் புத்தாண்டை ஒட்டி மக்களிடை அச்சத்தை தவிர்க்கும் நோக்கில் சீன கம்யூனிச அரசு புதிய வைரஸ் குறித்த உண்மை தகவல்களை பரப்பி வருகிறது.

இந்த வைரஸ் தொடர்பில் சர்வதேச அளவில் பொறுப்பு வழங்கும் சர்வதேச சுகாதார அவசர நிலை ஒன்றை அறிவிப்பது குறித்து உலக சுகாதார அமைப்பு நேற்று தீர்மானிக்கவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான அறிவிப்பு வெளியானால் கடந்த ஒரு தசாப்தத்தில் வெளியிடப்படும் ஆறாவது சர்வதேச பொது சுகாதார அவசர நிலையாக இது அமையும்.

எனினும் முந்தைய கொரோனா வைரஸ்களான சார்ஸ் மற்றும் 2012 ஆம் ஆண்டு தொடக்கம் 700க்கும் அதிகமான உயிர்களை பறித்த மெர்ஸ் போன்ற ஆபத்து புதிய வைரஸில் இல்லை என்று சில நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் புதிய கொரோனா வைரஸ் தனது தன்மையையும், வடிவத்தையும் தாமாகவே மாற்றிக் கொண்டு இன்னும் வேகமாகப் பரவும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனாவில் இருந்த வரும் பயணிகளை சோதிக்கும் நடவடிக்கையை உலகெங்கும் உள்ள விமான நிலையங்கள் ஆரம்பித்துள்ளன. இந்த வைரஸ் உலகெங்கும் மேலும் பரவும் வாய்ப்பு இருப்பதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான ஐரோப்பிய மையம் எச்சரித்துள்ளது.

மனிதர்களின் நுரையீரலை தாக்கி, மூச்சுத்திணறல் போன்ற நோய்களை உருவாக்கி, மரணத்தை ஏற்படுத்தக் கூடியதாக புதிய கொரோனா வைரஸ் உள்ளது. இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதில் பரவும் தன்மை கொண்டது என சீன சுகாதார அணைக்குழு குறிப்பிட்டுள்ளது.


Add new comment

Or log in with...