ATM மூலம் தரவுகளை திருட முற்பட்ட 4 வெளிநாட்டவர்கள் கைது | தினகரன்


ATM மூலம் தரவுகளை திருட முற்பட்ட 4 வெளிநாட்டவர்கள் கைது

விசேட இலத்திரனியல் சாதனங்களை பொருத்தி சூட்சுமம்

கடந்த 12ஆம் திகதி பண்டாரமுல்ல, மிரிஸ்ஸ பிரதேசத்தில் அமைந்துள்ள தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திரத்தின் (ATM) மூலம் பண அட்டை (Debit/ Credit Card) தரவுகளை திருட முற்பட்ட குற்றச்சாட்டில் வெளிநாட்டு பிரஜைகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொட்டவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரமுல்ல, மிரிஸ்ஸ பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றுக்கு சொந்தமான தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திரத்திலிருந்தே குறித்த சந்தேகநபர்கள் இவ்வாறு தரவுகளை திருட முற்பட்டுள்ளனர். 

ஏ.ரி.எம். இயந்திரம் அமைந்துள்ள கூடத்திற்குள் குறித்த சந்தேகநபர்கள் நால்வரும் நுழைந்து, ஏ.ரி.எம் இல் தரவுகளை திருடும் நோக்கத்திற்காக இலத்திரனியல் சாதனங்களை பொருத்தியதாக கொட்டவில பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருந்தது. .

இக்குற்றச்செயல் சம்பந்தமாக பல்கேரியா பிரஜை ஒருவரும்,  எஸ்தோனியா பிரஜை ஒருவரும், போலந்து பிரஜை இருவரும் நேற்று (16) மாலை மிரிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நால்வரையும், இன்று (17) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக கொட்டவில பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

 


Add new comment

Or log in with...