Home » தெற்கு காசாவில் இஸ்ரேல் படைகளுடன் பலஸ்தீன போராளிகள் உக்கிர சண்டை

தெற்கு காசாவில் இஸ்ரேல் படைகளுடன் பலஸ்தீன போராளிகள் உக்கிர சண்டை

மக்கள் தொடர்ந்தும் வெளியேற இடமில்லை

by gayan
December 6, 2023 11:28 am 0 comment

முற்றுகையில் உள்ள காசா மீது இஸ்ரேலின் தாக்குதல்கள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் தெற்கு காசாவில் பலஸ்தீன போராளிகள் மற்றும் இஸ்ரேலிய துருப்புகளுக்கு இடையே நேற்று (05) உக்கிர மோதல் நீடித்தது. இது அங்கு சிக்கி இருக்கும் பொது மக்கள் மேலும் பயங்கர சூழலை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

போர் வெடித்த ஆரம்பத்தில் வடக்கு காசா மீது கவனம் செலுத்திய இஸ்ரேல் தற்போது தனது துருப்புகளை தெற்கு பக்கம் நகர்த்தியுள்ளது. இதனால் தெற்கில் பல பகுதிகளிலும் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேறும்படி கூறி இஸ்ரேல் வானில் இருந்து துண்டுப் பிரசுரங்களை வீசியுள்ளது.

ஏற்கனவே வடக்கு காசாவில் இருந்து வெளியேறிய மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகருக்கு அருகில் இஸ்ரேலிய டாங்கிகள், கவச வாகனங்கள் மற்றும் புல்டோசர்கள் நெருங்கி வந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலிய படைகளுடன் கான் யூனிஸின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தீவிர சண்டையில் ஈடுபட்டிருப்பதாக ஹமாஸ் கூட்டணியான இஸ்லாமிய ஜிஹாத் ஆயுதப் பிரிவு தெரிவித்துள்ளது.

கான் யூனிஸுக்கு அருகில் இரு கவச வாகனங்கள் மற்றும் டாங்கி ஒன்றை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் அமைப்பு டெலிகிராமில் தெரிவித்துள்ளது.

தெற்கு இஸ்ரேலில் பீர்ஷபாவை நோக்கி ரொக்கெட் குண்டுகளை வீசியதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவு நேற்று தெரிவித்த நிலையில் அங்கு அபாய ஒலி எழுப்பப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டது.

காசா பகுதியின் வடக்கு மற்றும் தெற்கில் திங்கட்கிழமை இடம்பெற்ற மோதல்களில் மூன்று இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக தெற்கில் கான் யூனிஸ் மற்றும் வடக்கில் ஜபலியா மற்றும் ஷுஜையா பகுதிகளில் இஸ்ரேலிய படைகள் கடும் எதிர்ப்பை சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதன்படி ஒக்டோபர் பிற்பகுதியில் காசா மீது தரைவழி தாக்குதலை ஆரம்பித்தது தொடக்கம் அங்கு கொல்லப்பட்ட இஸ்ரேலிய துருப்புகளின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது.

மறுபுறம் இஸ்ரேல் போர் விமானங்கள் காசாவின் பல பகுதிகளிலும் குண்டு வீசி இருக்கும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. காசா நகரில் உள்ள அல் யாசிகி குடும்பத்தின் குடியிருப்பு கட்டடம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கணிசமானோர் பலியாகி இருப்பதாக பலஸ்தீன உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது.

கான் யூனிஸ் அகதி முகாமில் உள்ள வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட மற்றொரு வான் தாக்குதலில் மேலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

எனினும் காசாவில் நேற்று இடம்பெற்ற தாக்குதல்களால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை அந்தப் பகுதியின் சுகாதார நிர்வாகங்கள் நேற்று பின்னேரம் வரை குறிப்பிட்டு கூறவில்லை.

எனினும் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்தது தொடக்கம் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 16,000ஐ நெருங்கியுள்ளது. மேலும் 42,000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

உலகின் அதிக சனநெரிசல் மிக்க காசாவின் அனைத்து இடங்களிலும் இஸ்ரேலிய தாக்குதல்கள் இடம்பெற்று வருவதால் மக்கள் இடம்பெயர்வதற்கான இடம் தீர்ந்து வருவதாக சர்வதேச உதவி நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

“காசாவில் எந்த இடமும் பாதுகாப்பாக இல்லை, செல்வதற்கும் இடமில்லை” என்று பலஸ்தீன பகுதிகளுக்கான ஐ.நா மனிதாபிமான இணைப்பாளர் லைன் ஹஸ்டிங்ஸ் தெரிவித்துள்ளார்.

“மனிதாபிமான உதவிகளுக்கு பதிலளிக்க முடியாத பயங்கர சூழ்நிலை ஒன்று ஏற்படுவதற்கான சாத்தியம் உருவாகியுள்ளது” என்றும் ஹஸ்டிங்ஸ் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எட்டு வாரங்கள் நீடிக்கும் இந்தப் போரில் 2.3 மில்லியன் மக்கள் வசிக்கும் காசாவில் ஏற்கனவே 80 வீதமானவர்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் கான் யூனிஸின் பல பகுதிகளில் இருந்தும் மக்களை வெளியேறும்படி உத்தரவிட்டிருக்கும் இஸ்ரேலிய இராணுவம் அவர்கள் மத்தியதரைக்கடற்கரை மற்றும் எகிப்து எல்லைக்கு அருகில் இருக்கு ரபா நகரை நோக்கி செல்லும்படி குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் கான் யூனிஸில் அவநம்பிக்கையில் இருக்கும் மக்கள் தமது உடைமைகளை சுமந்தபடி ரபாவை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளனர். பெரும்பாலானவர்கள் இடிந்த கட்டடங்களுக்கு மத்தியில் கால்நடையாக தமது பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் ரபா நகர குடியிருப்பாளரான அபூ ஜஹர் அல் ஹாஜ், தனது வீட்டுக்கு அருகில் இடம்பெற்ற வான் தாக்குதல் “பூகம்பம் ஒன்றை போன்று” இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். “கொங்கிறீட் துண்டுகள் எம்மீது விழ ஆரம்பித்தன” என்றும் அவர் கூறினார்.

மேலும் வடக்காக டெயிர் அல் பலாஹ்வில், வலா அபூ லிபதா என்பவர் மருத்துவனை ஒன்றில் அடைக்கலம் பெற்றிருந்தபோதும், இஸ்ரேலிய தாக்குதலால் தனது நான்கு வயது மகள் கட்டட இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். “அவள் உயிருடன் இருக்கிறாளா அல்லது இறந்து விட்டாளா என்பது எனக்குத் தெரியாது” என்று அவர் கூறினார்.

காசாவில் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளுக்கு பதிலாக இஸ்ரேலிய சிறையில் உள்ள பலஸ்தீனர்களை விடுவிக்கும் ஏழு நாட்கள் நிடித்த போர் நிறுத்தம் கடந்த வெள்ளிக்கிழமை (1) முறிந்தது.

தொடர்ந்தும் குறைந்தது 137 பணயக்கைதிகள் காசாவில் இருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது. எனினும் நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றுக்கு உடன்படாத வரை அவர்களை விடுவிப்பதை ஹமாஸ் நிராகரித்துள்ளது.

இந்தப் போர் பிராந்தியத்தில் பரந்த அளவிலான மோதல் ஒன்றை ஏற்படுத்தும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. லெபனானுடனான இஸ்ரேலிய எல்லையில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு மற்றும் இஸ்ரேல் படைகள் இடையே அடிக்கடி மோதல் இடம்பெற்று வருகிறது.

கடந்த திங்களன்று லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக ஹிஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேலிய ஜெட்கள் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் நேற்று தெரிவித்தது.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரையிலும் வன்முறை அதிகரித்திருப்பதோடு காசாவில் போர் வெடித்தது தொடக்கம் அங்கு 250க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT