Home » கந்தசஷ்டி

கந்தசஷ்டி

by damith
November 13, 2023 6:00 am 0 comment

முழு முதற் கடவுளாக கலியுகக்கந்தப் பெருமான் போற்றப்படுகின்றார். மனித மனம் விரதத்தின் போது தனித்து விழித்து பசித்து, இருந்து ஆறு வகை அசுத்தங்களையும் அகற்றித் தூய்மையை அடைகின்றது. தூய உள்ளம், களங்கமற்ற அன்பு, கனிவான உறவு என்பவற்றிற்கு அத்திவாரமாக ‘கந்தசஷ்டி’ விரதம் அமைகிறது. கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும், அசுர சக்திகளையெல்லாம் கலியுக வரதனான பெருமான் அழித்து, நீங்காத சக்தியை நிலை நாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும்.

ஐப்பசித் திங்கள் சதுர்த்தசித் திதியில் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாட்களும் கந்தப் பெருமானை நினைத்து வழிபட்டு விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து, காலையும் மாலையும் வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி, வீபூதி பூசி, தேவராங்கள் பாடுதல் வேண்டும் அத்துடன் கோயில் வழிபாடு செய்தல் மிகவும் நன்று.

கேதாரகௌரி விரதம் பூர்த்தி செய்து கந்த சஷ்டி விரதம் பிடிப்போர், காலையில் நீராடி பூசை முடித்துத் தீர்த்தத்தை உட்கொண்டு அதன் பின் கந்த சஷ்டி விரதத்தை கடைப்பிடிக்கவும்.

ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் இவ்விரதத்தை தம் உடல் நிலைக்குத் தக்கதாக கடைப்பிடிக்க வேண்டும் . சிலர் ஆறு நாட்களும் எவ்வித அன்ன ஆகாரமின்றியும், சிலர் பானம் மட்டும் அருந்தியும், பலர் முதல் ஐந்து நாட்களும் ஒரு நேரம் உணவு உண்டு (பாலும் பழமும்) கடைசி நாளான ஆறாம் நாள் முழு உபவாசத்துடன் நித்திரை விழித்திருந்தும் ஏழாம் நாள் காலை முருகனை வழிபட்ட பின் பாரணை மூலம் விரதத்தைப் பூர்த்தி செய்வர்.

இவ்விரதத்தின் போது, தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கச்சியப்ப சுவாமிகளின் கந்த புராணம் ஆகியவற்றைப் படித்தால், என்னவென்று சொல்ல முடியாத மனஅமைதி நிலவும். இதனை ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பர்.

ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கர்ப்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்குவார்கள். முருகனுடைய விரதங்களுள் கந்த சஷ்டி விரதம், கார்த்திகை விரதம், வெள்ளிக்கிழமை விரதம் ஆகிய மூன்றும் பிரதானமானவையாகும். கந்த சஷ்டி விரதம் தொடர்ந்து ஆறு வருடங்களும், கார்த்திகை விரதம் பன்னிரெண்டு வருடங்களும் வெள்ளிக்கிழமை விரதம் மூன்று வருடங்களும் அனுஷ்டிக்கப்படுகின்றது. அசுர சக்திகளின் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், பெருமை ஆகிய வகைகளை அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டியதால் கந்த சஷ்டி விரதமே பெருவிழாவாக எடுக்கப்படுகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT